Wednesday, August 29, 2012

கார்ல் மார்க்ஸின் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்

ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்
(கார்ல் மார்க்ஸ்)
1
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் உட்பட இதுவரை இருந்துவந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தின் பிரதானமான குறைபாடு இதுதான்: பொருள் (Gegentand), எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருளின் (Objekt) வடிவம் அல்லது ஆழ்சிந்தனையின் (Anschauung) வடிவமாக மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மனிதப் புலனுணர்வுச் செயல்பாடு அல்லது நடைமுறை என்று கொள்ளப்படவில்லை. இது அகநிலையானது இல்லை. எனவே பொருள்முதல்வாதத்துக்கு எதிராக, வேறுபட்டதாகப் பொருள்முதல்வாதத்தின் செயலாக்கமுள்ள பகுதியைக் கருத்துமுதல்வாதம் வளர்க்க நேரிட்டது, ஆனால் அருவமாக (abstractly) மட்டுமே. ஏனெனில், உண்மையில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலனுணர்வுள்ள செயல்பாட்டினை உள்ளபடியே அறியாது. சிந்தனைப் புறப்பொருள்களிலிருந்து (thought objects) உண்மையிலேயே வேறுபடுத்தப்பட்ட புலனுணர்வுள்ள புறப்பொருட்களை (sensuous objects) ஃபாயர்பாக் விரும்புகிறார். ஆனால் அவர் மனிதச் செயல்பாட்டையே புறநிலைச் செயல்பாடாக (obective activity) கருத்தில் கொள்ளவில்லை. எனவே, கிறிஸ்துவ மதத்தின் சாரம் (Essence of Christianity) என்னும் நூலில், கோட்பாட்டு மனப்போக்கை (theoritical attitude) மட்டுமே மெய்யான மனித மனப்போக்காகக் (human attitude) கருதுகிறார். நடைமுறை (practice) என்பது அதன் அசிங்கமான–யூதத் தோற்ற வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, “புரட்சிகரமான” செயல்பாடு, “நடைமுறை–முக்கியத்துவச்” செயல்பாடு என்பனவற்றின் முக்கியத்துவத்தை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
2
புறநிலை உண்மை (objective truth) என்பது மனித சிந்தனையின் பண்புக்கூறா என்னும் பிரச்சினை, கோட்பாடு சார்ந்த பிரச்சினையல்ல (question of theory), அது ஒரு ,நடைமுறைப் பிரச்சினை (practical question) ஆகும். நடைமுறையில் மனிதன் தன்னுடைய சிந்தனையின் உண்மையை – அதாவது, அதன் எதார்த்தத்தையும் ஆற்றலையும், அதன் இப்பக்கத்தன்மையையும் (this-sidedness) – நிரூபிக்க வேண்டும். நடைமுறையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிந்தனையின் எதார்த்தத் தன்மை அல்லது எதார்த்தமற்ற தன்மை பற்றிய விவாதம் முற்றிலும் ஓர் ஏட்டறிவுவாதப் பிரச்சினை (scholastic question) ஆகும்.
3
சூழ்நிலைமைகள், வளர்ப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படுபவர்கள் மனிதர்கள். எனவே, [பல்வேறு வகையாக] மாறுபடும் மனிதர்கள் வேறுபட்ட சூழ்நிலைமைகளாலும் மாறுபட்ட வளர்ப்பு முறையாலும் உருவாக்கப்பட்டவர்களாவர் என்னும் பொருள்முதல்வாதப் போதனை, மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் தவிர்க்க முடியாதவாறு வந்து சேர்கிறது. அவ்விரண்டு பகுதிகளில் ஒன்று சமுதாயத்துக்கு மேம்பட்டதாக உள்ளது. (எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவன் நூலில்).சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.
4
உலகத்தை மத வழிப்பட்ட கற்பனை உலகம், எதார்த்தமான உலகம் என இரண்டுபடுத்தலை (duplicate) மத ரீதியான சுய–அந்நியமாக்கம் (self-alienation) என்னும் உண்மையிலிருந்து ஃபாயர்பாக் தொடங்குகிறார். அவருடைய பணி, மத வழிப்பட்ட உலகத்தை அதன் மதச்சார்பற்ற அடிப்படைக்குள் கரைத்து விடுவதிலே அடங்கியுள்ளது. இப்பணியை முடித்தபின், பிரதானமான விஷயம் இனிமேல்தான் செய்யப்பட வேண்டியுள்ளது என்னும் உண்மையை அவர் பார்க்கத் தவறுகிறார். மதச்சார்பற்ற அடித்தளம் தன்னிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, ஒரு சுதந்திரமான மண்டலமாக மேகங்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்னும் உண்மையை, இந்த மதச்சார்பற்ற அடிப்படையின் சுய–பிளவையும் சுய–முரண்பாட்டுத் தன்மையையும் வைத்து மட்டுமே உண்மையில் விளக்க வேண்டும். ஆகவே, பின்னதை முதலில் அதன் முரண்பாட்டில் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் அந்த முரண்பாட்டை அகற்றுவதன் மூலமாக நடைமுறையில் அதைப் புரட்சிமயமாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பூவுலகைச் சேர்ந்த குடும்பமே புனிதக் குடும்பத்தின் இரகசியம் எனக் கண்டறிந்தவுடன், முன்னதைக் கோட்பாட்டு ரீதியாக விமர்சிக்க வேண்டும், நடைமுறையில் புரட்சிமயமாக்க வேண்டும்.
5
ஃபாயர்பாக் அருவமான சிந்தனையுடன் (abstract thinking) திருப்தியடையாமல் புலனுணர்வுள்ள ஆழ்சிந்தனைக்கு (sensuous contemplation) வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் புலனுணர்வை நடைமுறை ரீதியான (practical), மனிதப்–புலனுணர்வுச் செயல்பாடாக (human-sensuous activity) அவர் கருதவில்லை.
6
ஃபாயர்பாக் மதச் சாராம்சத்தை மனித சாராம்சமாக முடிவு செய்கிறார். ஆனால் மனித சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரிலும் உள்ளார்ந்து இருக்கின்ற அருவமான விஷயம் அல்ல. அதன் எதார்த்த நிலையில் அது சமுதாய உறவுகளின் கூட்டுத் தொகுப்பே ஆகும். இந்த உண்மையான சாராம்சத்தைப் பற்றிய விமர்சனத்துக்குள் புகாத ஃபாயர்பாக் அதன் விளைவாக: (1) மத உணர்ச்சியை (religious sentiment) வரலாற்று நிகழ்வுப்போக்கிலிருந்து பிரித்தெடுக்கவும், அதனைத் தன்னிலையான ஒன்றாக நிலைப்படுத்தவும், ஓர் அருவமான – தனிமைப்படுத்தப்பட்ட (isolated) – மனிதத் தனிநபரை முன்அனுமானித்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார். (2) ஆகவே, அவரைப் பொறுத்தவரை மனித சாராம்சத்தை ஓர் “இனம்” (“genus”), பல தனிநபர்களை வெறுமனே இயற்கை ரீதியாக ஒன்றுபடுத்துகிற ஓர் அகநிலையான, ஊமையான பொதுநிலை என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
7
அதன் தொடர்ச்சியாக, “மத உணர்ச்சி” (“religious sentiment”) என்பதே ஒரு சமூக உற்பத்திப் பொருள் (social product) என்பதையும், அவர் பகுத்தாயும் தனிநபர் (abstract individual) எதார்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வடிவத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஃபாயர்பாக் பார்க்கவில்லை.
8
சமுதாய வாழ்க்கை என்பது சாராம்சமாக நடைமுறை ரீதியானது. கோட்பாட்டினைத் தவறாக மாயாவாதத்துக்கு (mysticism) இட்டுச்செல்லும் மர்மங்கள் (mysteries) அனைத்தும், தம்முடைய பகுத்தறிவு பூர்வமான தீர்வினை, மனித நடைமுறையிலும், இந்த நடைமுறை பற்றிய புரிதலிலும் கண்டு கொள்கின்றன.
9
ஆழ்சிந்தனைப் பொருள்முதல்வாதம் (contemplative materialism), அதாவது, புலனுணர்வை நடைமுறைச் செயல்பாடாகப் புரிந்து கொள்ளாத பொருள்முதல்வாதம் எட்டிய மிக உயர்ந்த கருத்துநிலை, “குடிமைச் சமுதாயத்தில்” (civil society) உள்ள தனிப்பட்ட நபர்களின் ஆழ்சிந்தனையே (contemplation of single individuals) ஆகும்.
10
பழைய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை “குடிமைச்” சமுதாயம் (“civil” society) ஆகும்; புதிய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை மனிதச் சமுதாயம் (human society) அல்லது சமுதாய மயமாக்கப்பட்ட மனிதகுலம் (socialised humanity) ஆகும்.
11
தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர்; ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change)அமைப்பதாகும்.
[1845 வசந்த காலத்தில் மார்க்ஸ் எழுதியது]

Sunday, August 12, 2012

"ஜீவாவின் கவிதைப் பயணம்" - நூல் அறிமுகம்


பேராசான் ஜீவா அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று களங்களிலும் மூழ்கி முத்தெடுத்தவர். பொருளியல் சமத்துவத்துக்கான அரசியல் சமரில் பலரும் முழுக்கவனம் செலுத்திய தருணத்தில் காலம் காலமாக மனித உள்ளங்களின் உள்ளியக்கத்தைத் தீர்மானித்தப் பண்பாடு குறித்து சிந்தித்தார்; கவனம் செலுத்தினார். மொழி குறித்தும் மக்கள் பண்பாடு குறித்தும் அக்கறை கொண்டார்.  ஏராளம் எழுதினார்.  பேசினார்.
ஜீவாவின் பன்முகப் பணிகள் இன்று அரசியல் கடந்து கவனம் பெறுகின்றது. தமிழிய வீரியம் தப்பிய விதைகளங்காய்த் தகிக்கின்றது. இத்தருணத்தில் பத்திரிக்கையாளரும் சிவப்புச் சிந்தனையாளருமான தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் ஜீவாவின் பாடல்களை முன்வைத்து கோடிக்கால் பூதமடா... (ஜீவாவின் கவிதைப் பயணம்) என்ற தலைப்பில் ஒரு நூலினைப் படைத்துள்ளார். "தோழர் ஜீவாவை அறிமுகப்படுத்திய அளவுக்குக் கூட கவிஞர் ஜீவாவை அறிமுகப்படுத்தவில்லை" என்ற ஆதங்கத்தில் இந்நூலைப் படைத்துள்ளார்.
ஜீவாவின் கவிதைகளில் தற்போது கிடைத்துள்ள 122 கவிதைகளை அதன் உள் ஆற்றல்களோடு அறிமுகப்படுத்துகின்றார்.
“இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன :  48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோசலிசம் சார்ந்து எழுந்தவை : கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல்கள் 7 : புரட்சி பற்றிய பாடல்கள் 5: இது போக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6 : சுயமரியாதை , பகுத்தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல்கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1. எனப் பத்து வகைபாடுகளில் அவற்றை நாம் அனுகலாம்'' என்று பகுத்துக் கூறுவது கல்விப்புல ஆய்வு போன்ற வியப்பைத் தருகின்றது.
ஜீவாவின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உள்ளதாக உள்ளன என்பதைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். 
மிக எளிமையாகவும், சுவைபடவும் பல பாடல்களைப் பற்றி ஆசிரியர் விவரிக்கின்றார்.  1930 ஆம் ஆண்டு வெளிவந்த சுயமரியாதைச் சொல்மாலையில் ஆத்திச்சூடி போல எழுதியுள்ள கீழ்க்காணும் அடிகளைப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகின்றார்.
"காதல் மணத்தாலே தருமின்பம்
"தாசியர் வேணுமாய் பேசுவார் கயவர்"
"தையலர் விடுதலை வையக விடுதலை"
"பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே"
"மெல்லியர் கல்விக்கு அல்லும் பகலுழை"
"கற்பெனப் பெண்களை அற்பரே குலைத்தார்"
அதே நேரத்தில் “பெண்கல்வி'' பற்றி கூற வந்தவர் "மெல்லியர்' என பெண்ணை உடல் சார்ந்து குறைத்து மதிப்பிடும் வார்த்தைகளைக் கையாண்டது அன்றைய சிந்தனை வழக்கில் பிழையெனப் பாடவிடினும், பெண்ணியப் பார்வை விரிந்து பரந்துள்ள இக்கால கட்டத்தில் இவ்வார்த்தை பயன்பாட்டை பெண்ணியவாதிகள் ஏற்கமாட்டார்கள்'' என விமர்சிக்கவும் செய்கின்றார்.  மற்றொரு இடத்தில் “சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் ஜீவாவும் பெண்விடுதலை குறித்து எழுதியவை மீண்டும் வாசிக்கப்பட வேண்டும்.  பெரியாருக்கு ஒப்பவும் சில இடங்களில் அதற்கு மேலாகவும் பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள் இவர்கள்.  இது குறித்து தனியே ஒரு நூலே எழுதலாம்''.  என்று கூறுவது மிக நல்ல மதிப்பீடாக அமைகின்றது.
மூட நம்பிக்கை, மத நம்பிக்கை ஆகியன குறித்த ஜீவாவின் தீவிர எதிர்ப்புணர்வை அவர்தம் பாடல்கள் வழி உணர்த்துவது சிறப்பு.
"இடி விழுந்தது கடவுள் மேல்" என்றும் "தலைக்கொரு பாழ் மதம்" என்றும்;  "கற்சாமி பிழைத்திட வேலி நிலம்" என்றும் "புத்தி கெட்ட ஆத்திகம்" என்றும் ஜீவா ஆவேசமாய் கூறும் இடங்களைச் சுட்டி எழுதிச் செல்வது அருமை.
ஜீவாவின் உள்ளத்தில் சுடராய் தகித்த பாட்டாளிவர்க்க உணர்வு அவர்தம் பாடல்களில் பற்றிப்படர்வதை அகத்தியலிங்கம் நுட்பமாகப் பதிவு செய்கின்றார்.
“ஜீவாவின் பாடல்கள் காலாவதியானவை அல்ல.  இன்றும் கால ஓட்டத்தின் சுருதியே அவை.  பணத்திமிருக்கு பணியாத நா  ஜீவாவின் பேனா. அவர் பணத்திமிர் பற்றி எழுதுகிறார்.
"யானை போற் கொழுத்த மேனி
இடர் செய்யும் நச்சு நெஞ்சு
பூனைபோல் நிறைந்த வாழ்வு
பொய்புலை நிறைந்த வாழ்வு
ஏனையோர் குடிகெடுக்கும்
எத்தனம் பொழுதுபோக்கு
பானைபோல் வயிறு கொண்ட
பணத்திமிர் வீழ்க! வீழ்க!"
எனக்கூறி விளக்கிச் செல்கிறார். குவலயம் நாற்றிகையும் அதிர  "கோடிக்கால்பூதம்" போன்ற அற்புதமான சொற்சேர்க்கைகளை ஜீவா பாடல்களில் காண முடியும்.
அதிகம் பேசப்படாதப்பாடல்களை எடுத்து அவற்றின் இலக்கிய நயத்தினை விளக்கும் போது ஆசிரியர் ஜீவா மீதும் உழைக்கும் மக்களின் சித்தாந்தத்தின் மீதும் கொண்டுள்ளப் பற்று பளிச்சிடுகின்றது. 
வாடாத மக்களும் வாழ்வதெங்கு?
மாதர் சுயேட்சை மணப்பதெங்கு?
நாடக முற்போக்கு காண்பதெங்கு?
நல்லிளைஞர் வேகம் பூண்பதெங்கு?
கோடாலி மண்வெட்டி ஆள்வதெங்கு?
குக்கிராம மக்கள் தழைப்பதெங்கு?
தேடும் மனித சமமெங்கு?
சீர்மிகும் ரஷ்யப் பொன்னாட்டிலன்றோ?
அடடா... அடடா... எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள்.  கோடாளி, மண்வெட்டிதூக்கி வியர்வை சிந்த உழைப்பவன் ஆட்சி எனில் கசக்குமோ ஏழைக்கு? பொறுக்குமோ பணச் கொள்ளையருக்கு? “ என்று துள்ளித் துள்ளி எழுதிச் செல்கிறார்.  29 பாடல்கள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது நன் முயற்சி.
ஜீவாவின் ஒட்டு மொத்த ஆளுமையை, ஜீவாவுக்கு லட்சியக் கனவு ஒன்று இருந்தது.  அது தேச விடுதலையில் காலூன்றி, சுயமரியாதையில் கிளை விரித்து, பொதுவுடைமையில் பூத்துக் குலுங்கும் கனவு.  அந்தக் கனவு கைகூட தனது நாவை, பேச்சாற்றலை ஆயுதமாக்கினார்.  தனது எழுத்தாற்றலை பேனாவை சாதனமாக்கினார்.  வாகனமாக்கினார் என நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் சித்தரிக்கிறார்.
இது ஜீவாவின் பாடல்களை மக்களிடம் புது முறையில் எடுத்துச் செல்லும் நூல். சுயநல அரசியலும், உலகமய பொருளியலும், நுகர்வுப் பண்பாடும் பெருகிவரும் இக்காலத்தில் நேர்மையான அரசியலை, மக்கள் மய பொருளியலை, தமிழியப்பண்பாட்டை முன்னெடுக்க ஜீவா ஓர் அடையாளமாக, ஆயுதமாகப் பயன்படுவார்.  அந்த ஆயுதத்தை உணர்வுப் பொங்க கூர்தீட்டி கையளித்திருக்கிறார் தோழர் அகத்தியலிங்கம் என்றால் மிகையில்லை.
கோடிக்கால் பூதமடா... ஜீவாவின் கவிதைப் பயணம், சு.பொ.அகத்தியலிங்கம், நாம் தமிழர் பதிப்பகம் பக். 104, விலை ரூ.50/

நன்றி : http://www.keetru.com

Tuesday, August 7, 2012

தமிழ் வளர்த்த செம்மலர்


முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும்.
இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
காந்தீயத் தொண்டர்
ஜீவா தம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். அந்தக் காலத்தில் காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நாடகம் நடத்தி வெள்ளையரைக் கலங்க வைத்த தியாகி விஸ்வநாததாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். ஜீவா அவர்கள் சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடையவராக ஜீவா விளங்கினார். மேலும் ஒன்பதாவது படிக்கும்போதே கவிதைகள் எழுதும் திறம் படைத்தவராக ஜீவா திகழ்ந்தார். அவர் காந்தியையும், கதரையும் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார்.மேலும் “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தையும் அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றி அந்த நாடகத்திலும் நடித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதலும் கதர் அணிதலும்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தேசபக்தர் திருகூடசுந்தரம் அவர்களின் பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. ஜீவா அவர்கள் அவரது பேச்சால் தூண்டப்பட்டு அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஜீவா அவர்களின் காந்தீயப் பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிறை செல்லல்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. இளைஞர் உலகம் கொந்தளித்து எழுந்தது. ஜீவா அவர்கள் வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். ஆங்கிலேய அரசு அதற்காகச் ஜீவாவைக் கைதுசெய்து, கை-கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
தீண்டாமை எதிர்ப்பு
தீண்டாமை என்பது மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக் கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான் என்பதாகும். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். நாஞ்சில் நாட்டில் நடந்த ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஜீவா திகழ்ந்தார் என்பதற்கு இச்சம்பவம் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இதனால் தந்தை மகன், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் தனது 17-ஆவது வயதில் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் பணியாற்றல்
ஜாதி வேறுபாடு பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்டு வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் அச்செயலைக் கடுமையாக எதிர்த்தனர்.வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜீவானந்தம் அவர்கள் தமது பணியைத் துறந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அப்போது ஏற்பட்ட போராட்டங்களினால் அந்த ஆசிரமம் மூடப்பட்டது.
காந்தி ஆசிரமம் உருவாக்குதல்
வ.வே.சு ஐயரின் ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊருக்கு வந்து அங்கு காந்தியடிகள் பெயரில் ஓர் ஆசிரமத்தை ஜீவா உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித் தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காந்திஜியின் பாராட்டு
ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்: “உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும் வளர்ச்சியையும் கருதியாவது தனித் தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித் தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?” என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது. “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார். இறுதிவரை ப.ஜீவானந்தம் – ஜீவா என்றே அழைக்கப்பட்டார். ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி வருகைபுரிந்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்றார். அதற்கு, “இந்தத் தேசம்தான் எனக்குச் சொத்து” என்று ஜீவா பதிலளித்தார். ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு காந்திஜி, “இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்றார்.
ஜீவாவின் பொதுப்பணி
சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப் பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் மனஉறுதியுடன் சுட்டிக்காட்டி அவருடைய கருத்துக்களை ஜீவா மறுத்துரைத்தார். ஜீவாவின் மனஉறுதியை மிகவும் பாராட்டிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் தமது நூல் எழுதினார் என்பது நோக்கத்தக்கது.
சிராவயல் ஆசிரமத்தில் பல சிறப்பான செயல்களை ஜீவா அவர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் சிறப்பு நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்தார் ஜீவா.
சிராவயல் ஆசிரமத்தில் இருந்து வெளியேறல்
சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அங்கிருந்து ஜீவா வெளியேறினார். ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்தது. அத்தீவிரம் 1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ள வைத்து ஜீவாவிற்குச் சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பர் மாதம் சிறையை விட்டு வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.
சிங்காரவேலருடன் நட்பு
இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைத்தது. சிங்காரவேலர் தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளித்தது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய புதிய வாயிலைத் திறந்து வைத்தது போலாயிற்று எனலாம்.
தமிழகத்தின் முதல் பொதுவுடமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். இருவரும் ஒரே சமயத்தில் சமூக விடுதலை தளத்திலும் செயலாற்றியிருப்பது இவ்விரு தலைவர்களும் ஒரே சமயத்தில் சுயமரியாதை இயக்கத்திலும் தேசவிடுதலைத் தளத்திலும் முன்னணியில் நின்று, தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.
இல்லற வாழ்க்கை
கடலூர் சட்டமன்றத் தொகுதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகளான கண்ணம்மாவை ஜீவா திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்
சிராவயல் ஆசிரமத்தில் காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் ஆகியவை போதிக்கப்பட்டன. இங்குதான் சொரிமுத்து ஜீவானந்தமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவாவுக்கு சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கம்பனிலும் பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.
தமிழ் நூற்கல்வியும் சேரன்மாதேவி ஆசிரமத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவமும் சேர்ந்து ஜீவாவை தீவிரமான வடமொழி எதிர்ப்பாளராகவும் தனித்தமிழ் ஆர்வலராகவும் மாற்றியது எனலாம்.
ஜீவா எதிலும் தீவிரம் காட்டும் பிறவிக்குணம் வாய்ந்தவர். இக்குணம் தனித்தமிழில் தீவிர ஆர்வம் கொண்ட ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்கும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்தார். அப்போது தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் மீது ஜீவா மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
1927-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த பல்லாவரம் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு மறைமலையடிகள் வீட்டை அடைந்து அடிகளாரின் வீட்டுக் கதவைத்தட்டிய போது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.
யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கிலத்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேச வேண்டும் என்பதை ஜீவா உணர்ந்தார். இதனைப் தாம் எழுதிய நூல்களிலும் ஜீவா பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றல்
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-ஆம் ஆண்டில் இருந்து 1939-ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டமாகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டனின் ஏகாதிபத்திய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930-ஆம் ஆண்டுகளில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932-ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப் போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொருப்பினை வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. அதனை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கு வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் ஜீவா மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிச வரலாறு, சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, தமிழில் அப்பொருண்மைகள் குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை உருவாக்குதல்
ஈ.வெ.ராவோடு கருத்து முரண்பாடு ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜீவா அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937) எனலாம்.
1933-ஆம் ஆண்டில் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுவே ஜீவா எழுதிய முதல் நூல் ஆகும். அன்றிலிருந்து நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பல பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபடல்
1937-ஆம் ஆண்டில் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 1938-ஆம் ஆண்டில் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜீவா கலந்து கொண்டு போராடியபோது ஜீவா கைது செய்யப்பட்டார். இத்தகைய போராட்டங்களால் ஜீவாவிற்குப் பல்வேறுவிதமாக துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜீவா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து ஜீவா பம்பாய் சென்றார். ஆனால் அங்கும் அரசியல் காரணங்களுக்காக ஜீவா கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வைப் போன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு ஜீவா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகின. இதற்கிடையில் 1937-ஆம் ஆண்டில் நவம்பர் 20-ஆம் தேதி ஜீவா பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் .
1957-ஆம் ஆண்டில் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ‘ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும்’ என்ற நூல் ஆகும்.
சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ததலைவராகச் செயல்படுதல்
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய,
‘‘நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.’’
என்ற உரை மிகவும் புகழ்பெற்றது. இது ஜீவாவின் உண்மையான மொழிப்பற்றினைக் காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.
அதேபோன்று கம்பன் மீதும் பாரதி மீதும் ஜீவா கொண்டிருந்த பற்றினைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரையோ நூலோ எழுதலாம். திராவிட இயக்கங்கள் கம்பராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கி நூல்கள் எழுதி, அதில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரசமான கட்டுரைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தபோது கம்பனில் பொதிந்துள்ள நயங்களை அந்த திராவிட இயக்கத்தவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு எவ்வித அடிபணிதலும் இல்லாது தன்கருத்துக்களை முன்வைத்தவர் ஜீவா. குன்றக்குடி அடிகளாரும் ஜீவாவும் கலந்து கொண்ட பட்டிமண்டபங்கள் மிகவும் புகழ் பெற்றவையாக அமைந்து விளங்கின. ஜீவாவைக் ‘கம்பராமாயண உபன்யாசகர்’ என்று திராவிட கட்சிகள் கேலி செய்த அதே மேடையில் ஜீவா கம்பனை வியந்து பார்த்துக் கருத்துக்களை வெளியிட்டார் . தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.
தன்னலம் கருதாத்தகைமையாளர்
தன்னலம் கருதாது என்றும் எப்பொழுதும் ஜீவா அவர்கள் நாட்டின் நலத்திற்காகவும், மக்களின் நலத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டே இருந்தார். ஜீவாவின் வாழ்வில் பல மறக்க இயலாத நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
1963-ஆம் ஆண்டின் ஒரு நாள். சென்னையின் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் ஜீவா.
அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி நின்றனர். அவர்கள் உள்ளே இருந்தவரைப் பார்த்து,
‘‘ஜீவா இருக்கிறாரா? என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து பரிவான குரலில் என்னம்மா வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. உங்களைத்தான் பார்க்க வந்தோம் என்று ஒரு பெண் கூறினாள்.
பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி நீ யாரம்மா என்று கேட்கிறார் ஜீவா.அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள் என்கிறாள். மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து நீ யாரம்மா? என்று கேட்டார்
கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் – எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா என்று எழுதியிருந்தது. அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். ஜீவா அத்துண்டுக் காகிதத்தில் என் மகள் என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.
அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத் துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை. என் மகள் என்று சொல்லவே கூசித்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய் என்று மனந்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.
ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னாள் ஜீவாவின் மகளான அந்தக் குமுதா. ஜீவாவின் முதல் துணைவியார் திருமதி கண்ணம்மாவின் ஒரே பெண்.
கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகர தாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர். குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினர். அதன் பிறகு குமுதா தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள். அந்தக் குமுதா தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வயதினையும் கரைத்துக் கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும் வரை அவருடன் சேர்ந்து குடிசையில் வசிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழவைக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
பொதுநலம் பேணிய புனிதர்.
ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப் பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற, காமராஜர் அவரை சந்திக்க பல குண்டு குழிகளையும் சாக்கடைகளையும் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்குச் செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ”ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு” என்று காமராஜர் கூறினார்.
அதனைக் கேட்ட ஜீவா, ‘‘ தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்றார்.
விரக்தியுடன் காமராஜர், ‘‘…ஜீவா நீ உருப்படமாட்டே..’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். தன்னலம் கருதாத் தகைமையாளராகவும், பொதுநலம் பேணிய புனிதராகவுமாக ஜீவா திகழ்ந்ததை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜீவா அவர்கள் தமக்கு நெருங்கியவர் முதல்வராக இருந்தும் அவருடன் கொண்ட நட்பினைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையுடையவராகத் தூய்மைஉடையவராக வாழ்ந்தார்.
ஜீவாவின் நூல்கள்
தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், புதுமைப்பெண், இலக்கியச்சுவை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், மொழியைப் பற்றி, ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு, மேடையில் ஜீவா (தொகுப்பு), சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, தேசத்தின் சொத்து (தொகுப்பு) ஆகியவை ஜீவா அவர்களின் மிகச் சிறந்த நூல்களாகும். இங்ஙனம் பல நூல்களை எழுதி தமிழ் வளர்த்த செம்மலராக ஜீவா திகழ்ந்தார்.
கலைஇலக்கிய பெருமன்றம் உருவாக்கல்
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது 1961-ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ ஆகும். பொதுவுடமைக் கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 –ஆம் ஆண்டில் தொடங்கினார்.
இங்ஙனம் ஜீவா அடித்தளமிட்டு உருவாக்கிய கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், அமைப்பையும் தோற்றுவித்துள்ளது நோக்கத்தக்கது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அயராது பாடுபட்டு மாவீரராகவும், தமிழ் வளர்த்த செம்மலராகவும் திகழ்ந்த ஜீவா அவர்கள், 1963-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ஜீவாவின் மறைவு உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும், பாரத நாட்டிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். ஜீவாவின் இறுதிச் சடங்கின்போது நாடகக் கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில்,
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா’’
என்ற ஜீவாவின் பாடலைப் பாடிய போது அனைவரும் கண்ணீர் உகுத்தனர். பாரதத்தின் சொத்தாகத் திகழ்ந்த ஜீவா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

படித்ததில் பிடித்தது


"ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.

கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா. இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில் மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம் எனும் கிராமத்தில் 1927இல் "காந்தி ஆசிரமம்" ஒன்றை இவர் நிறுவினார்.

1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள் முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் "கீதாஞ்சலி"யை இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை.

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி.

மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில் பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம், கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார்.

1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்? இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ் அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன் மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர் தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளிவிட எண்ணியது.

அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம் போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு "மீரத் சதிவழக்கு" என்று பெயர். கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித் தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது. குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார்.

ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார் பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும், சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக மாற்றியது.

கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா. அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில் நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல் வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற கேள்வி பிறந்தது.

இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்.

அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம் வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால் சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும் ரூ.500 அபராதமும் கிடைத்தது.

அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல் இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று.

ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில் இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக் கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்.

ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார். அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார். அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்!



"ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு"

(இந்தக் கட்டுரை "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது)

சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை.

குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில் ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் ப.ஜீவானந்தம்.

1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவர் கேட்டார். 'இந்திய மக்கள்தான் என் சொத்து' என்று ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் 'இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என ஜீவாவைப் பாராட்டினார்.

பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம் செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச் சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை வாழ்ந்தவர் ஜீவா.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர்.

குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர் பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம் செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு வெளியேறினார்.

ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா.

பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர் சொரிமுத்து.

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல் சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம்.

ஜீவாவை அவரது தொண்டர்கள் "ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு" என்று சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும் சிறையிலும் கழித்தார்.

பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச் சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் 'மயக்கம்' தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார்.

இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் "இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல". இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா.

பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா.

குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்த போது, "எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்" என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா.

எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும் ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்

பி.சீனிவாச ராவ் விவசாயிகளின் எழுச்சி நாயகர் பி.சீனிவாச ராவ்




த்மிழ்நாட்டில் சுதந்திரப் போட்டாத்தில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர்களில் பி.சீனிவாச ராவ் ஒருவர். இவர் தனது போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், அந்த ஏகாதிபத்தியம் இந்த நாட்டில் வேரூன்ற காரணங்கள் எவை என்று கண்டு, அந்த ஆணிவேரை அறுத்தெறிய முயன்றவர். வயல்களில் உழைக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், உழைப்பாளிகள் இவர்களைச் சுரண்டிக்கொண்டு, வெள்ளைக்காரர்களுக்குச் சாமரம் வீசும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை அகற்றினாலே, வெள்ளைக்காரர்கள் தானாகவே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்பது இவரது கருத்து. இந்த நோக்கத்துக்காக அவர் என்ன செய்தார்?

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அந்தச் சங்கத்தை தமிழகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து சுற்றி அலைந்து உழைத்தவர் சீனிவாச ராவ். இவரைப் பற்றி இன்றுகூட கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர மற்றையோர் அறிந்து கொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயன்றதுமில்லை. இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி இருக்கும் குடகு நாட்டில் பிறந்தவர். இவர் யார் எவர் எங்கிருந்து வந்தார் என்பதையெல்லாம்கூட பிறருக்குத் தெரிவிக்க விரும்பாமல் தான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சீனிவாச ராவ்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் சிறையில் இருந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அமீர் ஹைதர்கான் போன்றவர்கள். சுதந்திரப் போர் ஒரு புறம், விவசாயிகளின் எழுச்சி மற்றொரு புறம் என்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் இவர் தனது இயக்கத்தை மையமாகக் கொண்டார். இவர் ஆரம்ப கால அரசியலின்போது இவருடன் இணைந்து போராடிய பல தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.வி.காட்டே, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தொண்டர்கள்.

இவர் அதிகமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பாமல், செயல் ஒன்றே குறியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். கீழத் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகள்தான் இவரது போராட்டக் களமாக இருந்தது. இந்த ஓய்வறியாத தொண்டனின் மறைவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையான "ஜனசக்தி" இவர் நினைவாக கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அதில் பல தலைவர்களும் இம்மாமனிதன் பற்றிய பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே மிக விளக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் ப.ஜீவானந்தம் போன்றோர் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம்.

ப.ஜீவானந்தம்: "தன் பெற்றோர் உற்றாரைப் பற்றி, ஊர் பேர் பற்றி இதுவரை மறந்தும் பேசாத ஒரு விசித்திர மனிதர் அவர். அதே பொழுதில் 1930லிருந்து நம்மை விட்டுப் பிரிந்த வரை தமிழகத்தையே தாயகமாகக் கொண்டு வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தார். எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரையோ, புரட்சி வீரனையோ நான் எதிர்ப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஓர் அபூர்வ பிறவி அவர்."

"1930இல் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரத்த பைசாசமே போலீஸ் கமிஷனர் கன்னிங்காம் உருவத்தில் வந்து நடத்திய கொடிய அடக்குமுறைச் சித்திரவதையை இன்று நினத்தாலும் உடலும் குடலும் பதறும். அந்தப் போராட்டத்தில் புலுசு சாம்பமூர்த்தி, காஸா சுப்பாராவ், துர்க்காபாய் முதலான தேசபக்தர்களோடு மாணவராக இருந்த சீனிவாச ராவும் கலந்து கொண்டார். நாட்டின் பெருமையைக் காத்த வீரர்களில் ஒருவர் இவர்."

"ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மூச்சுகூட விடமுடியாத நிலையில் 2/65 பிராட்வேயை உறைவிடமாகக் கொண்டு ஒரு எடுப்புச்சாப்பாட்டை மூன்று பேர், சில வேளைகளில் நான்கு பேர் உண்டு பணிபுரிந்த காலம் அது. அப்போது சீனிவாச ராவி எங்களுக்கு ஒரு நட்சத்திரமாக விளங்கினார்."

ஹெச்.டி.ராஜாவின் 'நியு ஏஜ்' பத்திரிகையில் முழுநேரமும் பணிபுரிந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்தவர் சீனிவாச ராவ். இவர் சிறிது அதிகமான நேர்மையாளர். தனக்கு சரி என்றும் நீதி என்றும் பட்டுவிட்டால் அதில் உறுதியாக நிற்பார். அவருடைய கண்டிப்புக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் பயந்து பலரும் சற்றுத் தள்ளியே இருப்பார்கள். அவருடைய கொள்கை பிடிப்பும், சுயநலமின்மையும் அத்தகையது."

"வெளிமாநிலக்காரர் என்பதாலும், தமிழ் சரியாகப் பேச முடியாததாலும் மணலி கந்தசாமி போன்றோருடன் சேர்ந்து 1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அவர்களை ஒரு போராட்ட சக்தியாக உருவாக்கினார். அதுமுதல் 30 ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன். அந்த விவசாயிகளின் தலைவர் இறந்த போது திருத்துறைப்பூண்டியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆயிரமாயிரம் விவசாயிகள் கண்ணீர் சிந்தி அந்தத் தலைவனை வழியனுப்பிய காட்சி கல்லும் கரையச் செய்யும் காட்சியாகும்."

எம்.ஆர்.வெங்கட்டராமன்: "வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அக்கிரமம் என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டித்து விடுவார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் போலீசாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். பூட்ஸ் காலால் மிருகத்தனமாக மிதிக்கப்பட்டார். அத்தனை அடிகளையும் அஞ்சாத நெஞ்சத்தோடு எதிர் கொண்டவர் சீனிவாச ராவ்."

பி.ராமமூர்த்தி: "கண்டிப்பு, கட்டுப்பாடு, எளிய வாழ்க்கை இவைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராவ். தொண்டனுக்குத் தொண்டனாக, நண்பனுக்கு நண்பனாக, தலைவனுக்குத் தலைவனாகத் திகழ்ந்தார். ஆகவே தான் அவரது மறைவுச் செய்தி கேட்ட சில மணி நேரத்தில் தஞ்சை மாவட்டமே, தமிழகமே கதறி அழுதது. அவரது இறுதிப் பயணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்."

ஏ.எம்.கோபு: "கன்னடத்தில் உயர்சாதியான பிராமண குலத்தில் பிறந்து, காவிரி நதி தீரமான தஞ்சைத் தரணியின் வற்றாத வளத்தின் வித்தாகவும், வேராகவும், விளங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அவதரித்த லட்சக்கணக்கான வேளான் தொழிலாளரின், குத்தகைதாரர்களின், குறுநில உடைமையாளர்களின் விமோசனத்துக்காக அரும்பாடுபட்டு, தஞ்சையில் உயிர் நீத்து, திருத்துறைப்பூண்டியில் மீளாத்துயில் கொண்ட் தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீனிவாச ராவ்."

பி.சீனிவாச ராவி 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் காலமானார். அவர் உயிர் பிரிந்தபோது அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவர் உடல் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜு ஆகியோரால் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொண்டர்களும் கண்ணீர் சிந்த 30-9-1961 இரவு 10-30 மணிக்கு எரியூட்டப்பட்டது.

போராட்டத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு ஏழைப்பங்காளனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க தோழர் பி.சீனிவாச ராவ் புகழ்!

நன்றிhttp://tamilnaduthyagigal.blogspot.in