Monday, March 11, 2013

கேட்குமோ ஞானக்குயிலின் ராகம் ..............?



(கவிஞர் ஞானக்குயில் ஞானனுக்கு கவிதாஞ்சலி)
      
இதயத்தின் இமைகளில்
        சொட்டு சொட்டாய் சோகம் ............
இனியென்று கேட்குமோ
        ஞானக்குயிலின் ராகம் ..............?
உதயத்தின் அஸ்தமனத்தை
        விதியென்று நம்பியே விட்டுவிடலாம்
உனக்கான மரணத்தை
சதியென்பேன்! எமனின் சதியென்பேன் .......!!
எந்தமண்ணில் பிறந்தபோதும்
        கந்தகமண்தான் உனக்கு
        கலைஇலக்கிய மண்......
பாரதியின் அக்கினிக்குஞ்சின் பாட்டுச் சிறகே......!
ஜீவாவின் ஆன்ம ஜீவிதமே...........!
‘வா’ரதியெனில் வருவாளே அந்தக்கவிதைப்பெண்.....
தேவாதி தேவருக்கு திருடினனோ உன்னை....?

எனக்கு நீயோர் தென் மேற்கு பருவகாற்று..........
எங்களுக்கு நீயோர் பொதிகையின் பூங்காற்று.........
கந்தகப்பூக்களில் பூத்த கவிதை ரோஜா நீ..........
தமிழ்ச்சுடரில் ஏற்றிய தனித்தமிழ் சுடர் நீ........
கலை இலக்கியப் பெருமன்றத்தின்
விலையில்லா மாணிக்கமே.....! ஞானக்குயிலே
நிலைகுலைந்து போனோம்......நீ இங்கு காணோம்....!
கவிஞன் நீ........ கதாசிரியன் நீ....... கட்டுரையாளனும் நீ...........
நாவல்கள், நாடகங்கள் நல்ல தத்துவங்கள்..........
எத்தனை எத்தனையாய் நீ.............

படைப்பாளன் ஒருவன் பிரம்மன் என வேதம் சொல்கிறது........
படைப்பாளன் ஒருவன் ஞானன்  என உலகம் சொல்கிறது.......
பிரம்மனுக்கு உன்மேல் பொறாமை...........
அதானால்தான் நீயின்று இல்லாமை..........
உன் முன்னால்
முதன் முதலாய் அரங்கேறிய எனது முதல் கவிதை
“மரணம் ஒழிக”
அதையே வழிமொழிகிறேன் இன்னும்
மரணம் ஒழிக!...... மரணம் ஒழிக.......!!
                                    
                                     -    v.s.ராம்தாஸ்  

9.3.2013 அன்று காலை 4 மணியளவில் இயற்கை எய்திய எழுத்தாளர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் மறைவுக்கு கவிதாஞ்சலி


உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?

இன்னமும் நீ .................
கதைகளூடே கதைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
கவிதைகளூடே உறவாடிக் கொண்டுதான் இருக்கிறாய்

இசையுனூடே அசைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
நாவல்களூடே நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறாய்

தத்துவங்களூடே தர்க்கம்செய்து கொண்டுதான் இருக்கிறாய்
வார்த்தைகளூடே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்

வார்த்தைகள் வாழவைக்குமாம்
நீயோ, வார்த்தைகளாகவே வாழ்கிறாய்...

இன்னமும் உன்...
மூச்சில் தான் நாங்கள்
உயித்திருக்கிறோம்!       

உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?
                                             -    பாண்டூ


Thursday, March 7, 2013

சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன்


hugoநாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர்.
ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகாலை 4:30 இற்கு நின்று போனது.
ஏழைக் குடும்பத்திலிருந்து 1971 ஆம் ஆண்டு இராணுவவீரராக தனது வாழ்வை ஆரம்பித்த சவேஸ், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரானார். 1999 ஆண்டு வெனிசூலா நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார்.
அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு எதிராக அரசியலை முன்னெடுப்பது சாத்தியமானதும் வெற்றிகரமானதும் என்றுக் உலகத்திற்கு தனது செயற்பாடுகள் ஊடாக அறிவித்த சாவேஸ் இந்த நூற்றாண்டுன் மாமனிதர்களுள் ஒருவராக உயர்ந்தார்.
பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு எதிராக தனது நாட்டின் தேசியப் பொருளாதாரத்தை வளர்த்த சாவேஸ் தனது 14 வருட ஆட்சியில் வெனிசூலாவை பல ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்தியவர்.
அமரிக்க அரசு வாய்கிழியக் கூக்குரல்போடும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ ஊடாக தெரிவானவரே ஹுகோ சவேஸ். 2002 ஆம் ஆண்டு சவேசின் ஆட்சிக்கு எதிராக சதிப்புரட்சியை அமரிக்க அரசு திட்டமிட்டது. இராணுவ அதிகாரிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பெரும் அமரிக்க சார்பு பணமுதலைகள், வெனிசூலாவில் இன்றும் ‘சுதந்திரமாக’ செய்திவெளியிடும் அமரிக்க ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு இச்சதிப் புரட்சி திட்டமிடப்பட்டது. சவேஸ், ஜனாதிபதி இல்லத்தின் கூரையிலிருந்து ஹெலிக்கொப்படர் வழியாகச் சதிகாரர்களால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிச்சென்றார்..
சதிப்புரட்சியைக் கேள்வியுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி வசிப்பிடத்தை நோக்கிப் படையெடுத்தனர். சதிகாரர்கள் கைதாகினர். அன்றய தினமே கூடியிருந்த மக்கள் மத்தியில் தப்பிச்சென்ற அதே ஹெலிகொப்படரில் சவேஸ் வந்திறங்கினார்.
அதே ஆண்டு இறுதியில் மற்றொரு சதிப்புரட்சி தோல்வியடைந்தது.
chavez-supporters_wide-370276e5aa707d7e0c95b606feda88bec43adc31-s6-c10இவற்றிற்கெல்லாம் சளைக்காத சவேஸ், எண்ணை உற்பத்தியில் அரசு பெற்றுக்கொண்ட பணத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். அனைத்து எண்ணை விளை நிலங்களையும் தனியாரின் கரங்களிலிருந்து பறித்தெடுத்த சவேஸ் அரசு அவற்றைத் தேசிய மயமாக்கியது. வங்கிகள் உட்பட ஆயிரம் வரையான நிறுவனங்கள் தேசிய மயமாகின. அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசிய நிறுவனங்கள் பயணம் செய்வதற்கு போக்குவரது வசதி செய்யும் உலக அரசுகளின் மத்தியில் மக்களின் உணவு, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் அரச பணம் செலவிடப்பட்டது.
அமரிக்காவின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் உலகவங்கி தனது அறிக்கையில் ஒப்புதல் வழங்குவது போல 2003 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வறுமை 50 வீதத்தால் வீழ்சியடைந்துள்ளது. அதேவேளை பாடசாலைகளதும் கல்லூரிகளதும் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது.
அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தென்னமரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சவேசின் முயற்சியினாலேயே உருவாக்கப்பட்டது. சாவேஸ் ஏகாதிபத்திய்க எதிர்ர்பு முகாமிற்கு வழங்கிய நம்பிக்கை அவருக்கு எதிரான சதிவலைகளை உலகம் முழுவதும் உருவாக்கியது. எல்சல்வடோரின் அதிபரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட போது அவருக்கு எதிரான கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக நிக்கரகுவா புரட்சித் தலைவர் டானியல் ஒட்டேகா தெரிவித்திருந்தார்.
சாவேசை நச்சூட்டி புற்று நோயைத் தோற்றுவித்தது அமரிக்க அரசே என சாவேசிற்குப் பின்னர் தேர்தல்வரை நாட்டைப் பொறுப்பேற்றுள்ள துணை அதிபர் மதூரோ அறிவித்துள்ளார்.
தமது அரசுகளுக்கு அடிபணிய மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு யூரேனியம் கலந்த பரிசுப்பொருட்களை வழங்கிக் கொலை செய்தத்காக பிரஞ்சு உளவுத்துறை மீது 90 களில் குற்றம்சுமத்தப்பட்டது. பிரஞ்சுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சார்ள்ஸ் பஸ்குவா என்பவரின் செயலாளர் முன்வைத்த இக் குற்றச்சாட்டு பின்னதாக நிறுவப்படவில்லை.
வெனிசூலா சுதந்திரப் போராட்ட தியாகியான சிமோன் பொலிவாரின் பெயரில் சாவேசின் தேசிய வாத நடவடிக்கைகள் பெயரிடப்பட்டன. சவேசைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அதனை பொலிவாரியன் புரட்சி என அழைத்தனர்.
உலகின் எண்ணைவள நாடுகளில் நான்காவது இடத்தை வகிக்கும் வெனிசூலாவின் பதின்னான்கு வருட அதிபர் சாவேஸ் யார், அவரின் அரசியல் என்ன என்பது இன்று மீள்பரிசீலனை செய்யபடுவது அவசியம்.
உலகின் பெரும்பாலான இடதுசாரிகள் சாவேசை சோசலிஸ்ட் என்கிறார்கள். 21 ஆம் நூற்றாண்டின் சோசலிச அரசிற்கான முன்னுதாரணம் சாவேசின் அரசு என்கிறார்கள்.
உலகின் எண்ணைவழ நாடுகள் பெரும்பாலானவற்றில் எண்ணை வளம் அந்த நாடுகளின் சொத்துக்க்ளாகவே காண்ப்பட்டன. அச்சொத்துக்களை கையகப்படுத்தியிருந்த தனியாரிடமிருந்து அமரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மூலதனமாக்கிக்கொண்டன. சொத்துக்களை வைத்திருத உள்ளூர் வாசிகள் மன்னர்களானார்கள். குவைத், சவுதி அரேபியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளில் மன்னராட்சி வடிவங்களே காணப்பட்டன.
வெனிசூலாவிலும் சவேசின் ஆட்சிக்கு முன்னர் இதே நிலைமையே காணப்பட்டது. எண்ணை வளம் மூலதனமாக அன்றி சொத்துக்களாக பெரு நில உடமையாளர்களிடம் காணப்பட்டது. சனத்தொகையில் 6 வீதமானவர்களே இச் சொத்தைக் கையிருப்பில் வைத்திருந்தனர்.
அமரிக்காவின் பெற்றோலியத் தேவையின் 14 வீதத்தை பூர்த்திசெய்யும் வெனிசூலாவின் எண்ணை வளத்தை தேசிய மயமாக்கிய சவேசின் நடவடிக்கை, எண்ணை வளம் வெறுமனே சொத்து என்ற நிலையிலிருந்து மூலதனம் என்ற நிலைக்குச் மாற்றமடைய வழிவகுத்தது. சொத்துக்களை மூலதனமாக்கி நாட்டைச் சுரண்டிய அன்னியத் தரகர்களை அங்கிருந்து விரட்டியடித்தது.
இதனால் வெனிசூலாவில் தேசிய உற்பத்தி பாய்ச்சல் நிலை வளர்ச்சியடைந்தது. தொழில் வளர்ச்சி அதிகரித்தது. எண்ணை உற்பத்தியோடு உப தொழில்கள் தோன்றின. இதனால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகியது. இத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாகவே ஹூகோ சவேஸ் திகழ்ந்தார்.
தவிர, எண்ணை மூலதனத்திலிருந்து தோன்றிய தேசிய முதலாளித்துவம் வெனிசூலாவின் குறிப்பான சூழல். உலகில் ஏனைய நாடுகளுக்குப் பொருத்தமற்றது.
chavez1இதனால் சவேசின் ஆட்சி வடிவத்தை 21 ஆம் நூற்றாண்டின் வெனிசூலா தேசியம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். பலர் கருதுவது போன்று 21 ஆம் நூற்றாண்டின் சோசலிசம் அல்ல.
இன்று  தேசிய முதளாளித்துவத்தின் வளர்ச்சி உறுதியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
 சவேசின் மரணத்தின் வலி மக்கள் மத்தியிலிருந்து நீங்கும் முன்னமே பல்தேசிய ஊடகங்கள்  அந்த நாட்டின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூற ஆரம்பித்துவிட்டன. இனி அமரிக்காவுடன் ‘நல்லுறவை’ ஏற்படுத்துவது குறித்து பிபிசி ஏபிசி போன்ற ஊடகங்கள் துயர் பகிர ஆரம்பித்துவிட்டன.
இந்த நிலையில் அமரிக்கா உட்பட்ட ஏகபோகங்களின் தொடர்ச்சியான அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்க இயலாத நிலையிலேயே உள்ளது. வெனிசூலாவின் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டப்படுவதும், பாராளுமன்ற வழிகளுக்கு அப்பால் சோசலிசப் புரட்சி நடத்தப்படுவதுமே அழிவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி.
 நன்றி : www.inioru.com