Thursday, January 30, 2014

சோசலிசமும் மதமும்


மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்று பிரகடனப்படுத்த வேண்டும். இந்தச் சொரற்களில் சோஷலிஸ்டுகள், மதத்தின்பால் தங்களுடைய மனப்பான்மை என்ன என்பதைப் பொதுவாக வெளிப்படுத்துகிறார். ஆனால் எத்தகைய தவறான எண்ணமும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இந்தச் சொற்களின் அர்த்தத்தை மிகத் துல்லியமாக வரையறுக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொருத்தவரையில் மதம் தனிப்பட்ட விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

ஆனால் கட்சியைப் பொருத்தவரையில் மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் கருத முடியாது. மதம் அரசாங்கத்தின் சார்புடையதாக தொடர்பு கொண்டதாக இருக்கக்கூடாது, மத சம்பந்தமான ஸ்தாபனங்கள் சர்கார் அதிகாரத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது. எவருக்கும் எந்த மதத்தைத் தழுவுவதற்கும் பரிபூரண உரிமையுண்டு. எந்த மதத்தையும் தழுவாமல் அதாவது நாத்திகனாக இருக்கவும் உரிமையுண்டு ஒவ்வொரு சோஷலிஸ்டும் பொதுவாக ஒரு நாத்திகனாகத்தான் இருக்கிறார்.

மதத்தழுவலில் காரணமாகக் குடிமக்களிடையில் பாகுபாடு காட்டப்படுவது எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றக்கொள்ள முடியாததாகும். அதைச் சிறிதும் சகிக்க முடியாது. அதிகார பூர்வமான அரசாங்க தஸ்தாவேஜிகளில் ஒரு குடிமகனின் மதச் சார்பைப் பற்றி வெறும் பெயரளவில் குறிப்பிடப்படுவது கூட கேள்விக்கிடமில்லாத படி நீக்கப்பட வேண்டியதாகும். ஸ்தாபனமாகியுள்ள மாதா கோவில்களுக்கு மானியங்கள் கொடுப்பது கூடாது. மத குருக்களின் நிறுவனங்களுக்கோ அல்லது வேறு எந்த மத சம்பந்தமான ஸ்தாபனங்களுக்கோ அரசாங்க அலவன்ஸ் கொடுப்பதுகூடாது.

இந்த மத சம்பந்தமான நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு சுயேட்சையாக உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவையாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதன் மூலம்தான் பழைய அவமானகரமான, வெட்கக் கேடான, வெறுப்பிற்குரிய கடந்த காலத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும் முன்பு அரசாங்கத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பைச் சார்ந்து மாதா கோயில்கள், அதன் நிறுவனங்கள் இருந்தன.

ஸ்தாபிதமான மாதா கோயில்கள் மீது நிலப்பிரபுத்துவ ரீதியில் ரஷ்யக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது மத்தியகால, எரிச்சலூட்டும் படியான பிறர் விஷயங்களில் தலையிடுகிற அருவருப்பான சட்டங்கள் முரண்பட்ட சமயக் கருத்துகள் கொண்டவர்களைத் தண்டிக்க வழி கோலும் சட்டங்கள், (இன்று வரையில்கூட நமது கிருமினல் சட்டங்களில் இதர சட்டங்களில் உள்ள பல்வேறு ஷரத்துக்கள்) செயல் பாட்டில் இருந்தன. அச்சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன பிடிக்காத மத நம்பிக்கை கொணடவர்களை, அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களைத் தண்டனைக் குள்ளாக்கினார்கள். 

மனிதனின் மனச் சான்றுகள் மீறப்பட்டன நிறுவபட்ட மாதா கோயில்கள் மூலம் சொகுசான சர்க்கார் உத்தியோங்களையும், அரசாங்கத்தின் சார்பில் வருவாய் வருவதற்கான வாய்ப்புகளையும்  ஆண்டவன் விதித்த கட்டளை என்பதன் பேரால் ஏதாவதொரு மதச் சாயலுடன் இணைத்துக் கொண்டார்கள். சர்ச்சும் அரசும் முழுமையாக  வேறுபடுத்தப்பட வேண்டும் இதைத்தான் நவீன அரசாங்கத்திடமிருந்தும், நவீன சர்ச்சுகளிடமிருந்தும் சோசலிஸ்டுப் பாட்டாளி வர்க்கம் கோருகிறது
-லெனின்
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை,
‘சோசலிசமும் மதமும்’ எனும் நூல்.)


Wednesday, January 22, 2014

கடவுள் - பக்தி - தொண்டு - அகிம்சை என்றால் என்ன?

     நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தோடு இருப்பதாகவும், அதற்குப் பெண்ணாட்டிப் பிள்ளை, தாய் தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும், இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வது தான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
     அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்று சொல்லுவதைத் தான் இந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டு-வதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்-களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது-ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.
     இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையே தான். இந்தப் பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமே இல்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்-பதும், நமது தேவைகளையெல்லாம், நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்து விடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும், நம்மை விட்டு நீங்க வேண்டும்.
மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லா-வற்றையும் அறிந்து கொண்டு இருக்-கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமை-யாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததே தான்.
     கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம். இவை எப்படிக் கடவுள் கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கொரு விதமாகவும், மதத்திற்கொரு விதமாகவும், ஜாதிக்கொரு விதமாகவும் தான் கருதப்-படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்-கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள். ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணு-வது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களி-லேயே சிலர் பசுவை அடித்து, துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால், பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவன்களும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்-பட்டன என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும்? இவற்றைப் பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும், நடந்தபடியும் நடக்க வேண்டி-யது தானே என்றும் சொல்லி விடுவார்கள்.
     சிலர் வேதம் என்று ஒன்றைச் சொல்லி, அதன்படி எல்லாரும் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் என்ன சொல்லி-யிருக்கிறது? நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப்பட்டது, அதை நீ பார்ப்பது பாவம், நான் சொல்வதைத் தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற் கெல்லாம் ஒப்புக் கொள்ளப்-பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறித்து, முகம்மது முதலிய மதங்களும், இந்தியா தவிர, மற்ற தேசங்களும் இதை ஒப்புக் கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? இம்மாதிரி மூடுமந்திரமானதும் இயற்கைக்-கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோத மானதுமான கொள்கைகள், நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்-படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசிய-மாய்ச் செலவாகியும் வருகின்றன.
     பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பிக் கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள் மற்ற-வர்கள் சொல்வதைக் கேட்டு, அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே, பக்தி - தொண்டு - அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடை-யில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டு தான் கடவுள் தொண்டு; அம் மக்களின் விடுதலை தான் மோட்சம்; அச்சீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப் படாம-லிருப்பதும் தான் அகிம்சை.
(ஏழாயிரம் பண்ணையில் பாலிய நாடார் சங்க இரண்டாம் ஆண்டு விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...) குடிஅரசு 30.5.1926.

Sunday, January 19, 2014

அரிய புகைப்படங்கள்

தூய அரசியல் வாழ்க்கைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக, 
மாற்றுக் கட்சிக்காரராக இருந்தாலும், 
பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் மதிக்கப் பெற்ற

 தோழர் ஜீவா, அவர்களது நண்பர்களுடன்


நன்றி :  திரு. முரு நவினா, ராஜபாளையம்


தோழர் கார்ல் மார்க்ஸ்


நன்றி :  திரு. தமிழச்சி, லண்டன்



“நாடாளுமன்ற ஜனநாயகத்தைப்பற்றி 
எச்சரிக்கையாக இருங்கள், 
வெளிக்கு தோன்றுவது போல் 
அது அப்படி ஒன்றும் மிகச்சிறந்த சரக்கல்ல.” 
என்று இந்தியர்களிடம் கூறுவதற்கு 
போதிய துணிச்சல் கொண்ட யாரேனும் 
ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார். 

- தோழர் அம்பேத்கர் 
(தொகுதி:18, பக்கம் :139)


Saturday, January 18, 2014

தமிழில் சமத்துவ ஏக்கம்




குறிப்பு : 

ஜனவரி 18: 

பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம்

 நினைவு நாள் இன்று..


கம்பன் குறித்த ஜீவாவின் உரைகளும் கட்டுரைகளும் அவரது பண்பாட்டு அரசியலின் மற்றொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றன. கம்பர் ஆரிய இராமனை முன்னிறுத்தும் இராமயணக் கதையைப் பாடினார் என்பதால், அன்று திராவிட இயக்கத்தார் கம்பரைப் புறக்கணித்தார்கள். ஆயின் தோழர் ஜீவா மிகத் துணிச்சலாகக் கம்பரை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்.

கம்பர் கோசல நாட்டைப் பாடும்போது, அந்நாட்டைக் “காவிரி நாடன்ன கழனி நாடகவே’’ காணுகின்றார். (ப.182) காப்பியக் களமாகிய கோசலநாட்டைப் பாடும்போதும் அவர் மனதில் காவிரி நாடே நிழலாடுகிறது. கம்பர் அரசவைப் புழவராக வாழவில்லை, மாறாக அவர் சோழப் பேரரசனோடு பலமுறை மோதியிருக்கிறார் என ஜீவா சுட்டிக் காட்டுகிறார்.

“மன்னவனும் நீயோ ! வளநாடும் நின்னதோ ! உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்” எனச் சோழப் பேரரசனைப் சபிப்பவராக, அரசெதிர்ப்புப் பண்புகொண்டவராகக் கம்பரைச் சித்தரிக்கிறார். கம்பரது காவியத்தை அரங்கேற்ற தில்லைத் தீட்சிதரும் முன்வரவில்லை. ஸ்ரீரங்கத்து அய்யங்கார்களும் முன்வரவில்லை, எனவே கம்பர் அவரது இராமாயணத்தை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றினார்; அம்மக்கள்தாம் அவருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார்கள் என்று ஜீவா வாதிடுகிறார்.

கம்பர் காவியத்தைத் திராவிட இயக்கத்தார் நிராகரித்தலில் தமிழ்நாட்டு வேளாளர் சதி உள்ளதோ என ஜீவா கருதினாரோ என்னவோ, கம்பர் தனது ஏரெழுபது நூலில் வேளாளரைச் சிறப்பிக்கும் பாடல்களை எழுதியிருப்பதைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் (ப.182,184). “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது போன்ற வரிகளைப் பாராட்டி நின்ற பழந்தமிழகத்தில் “உயிரெலாம் உறையும் உடம்பும் ஆயினன்’’ “வய்யம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத்தாங்கும் உடலன்ன மன்னனுக்கு” என மன்னனை உடலாகச் சித்தரிக்கும் துணிச்சல் கம்பனுக்கு இருந்தது என ஜீவா விளக்கம் அளிக்கிறார். (ப.188).
 














கம்பர் இராமணை அவதாரப் புருஷனாக காட்டவில்லை, சிவனையும் பிரம்மனையும்  பிற தேவர்களையும் வெற்றிகொண்ட மானுடனாகச் சித்தரித்துக் காட்டிகிறார் (வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா) என ஜீவா மிக அற்புதமாகச் சுட்டிக்காட்டுகிறார் (ப.203). எல்லாவற்றிற்கும் மேலாக, கம்பரின் நூலில் கற்பனாவாத சோசலிசப் பண்பு கொண்ட பாடல்கள் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். “வண்மையில்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற பாடலையும் “கொள்வார் இலாமையின் கொடுப்பாரும் இல்லை மாதோ’’ என்பது போன்ற பாடல்களையும் சுட்டிக்காட்டி. தோழர் ஜீவா அவை கற்பனாவாத  சோசலிசப் பண்புகொண்டவை (ப.186) என நிரூபிக்கிறார். 

தோழர் ஜீவா கம்பனிலிருந்து தொடங்கும் கற்பனா சோசலிசம் குறித்த சொல்லாடல்கள் அவரது தமிழ்ப் பண்பாட்டு அரசியலின் முக்கியமானதொரு பரிமாணம் என்று நாம் கருதுகிறோம். ஜீவா வெளிப்படையாகப் பெயர் சொல்லி  கற்பனா சோசலிசம் பற்றிப் பேசியுள்ள இடங்களைத் தாண்டி அவரது எழுத்துக்கள் எங்கும் நெடுக, தமிழில் அமிழ்ந்திருக்கும் கற்பனா சோசலிசத்தைத் தேடி  அழைந்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. வெவ்வேறு சொற்களின் வழி அவர் அந்தக் கற்பனா சோசலித்தைக் காண விழைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஓரிடத்தில் அதை அவர் மானுடம் என்கிறார்; பிறிதொரிடத்தில் அதனை கிருதயம் என்கிறார்; இன்னொரிடத்தில் அதனை அமரநிலை என்கிறார்.


அவரது புதுமைப்பெண் கற்பனா சோசலிசதின் குடிமகள் தான். “செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்” கலக்கும் குறுந்தொகைப் பாடலில் ஓர் அற்புதமான கூட்டு வாழ்வைப் பற்றிய கண்ணோட்டம் காட்சிப்படுவதாகப் பாராட்டுகிறார் (ப.144). சங்ககாலத்து ஐந்திணை மக்களும் களவு ஒழுக்கத்தைப் பின்பற்றி எவ்வகை கட்டுப்பாடின்றி  “ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என வாழ்ந்ததை கலித்தொகை வரிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் (ப.149).


கட்டுரையாளர் : உயர்திரு. ந.முத்துமோகன்
நூல் : நியு செஞ்சுரியின் சிறுநூல் வரிசை,
‘ஜீவாவின் பண்பாட்டு அரசியல்’
நன்றி : ஜனசக்தி : 09.01.2014.



 குறிப்பு : ஜனவரி 18: பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் நினைவு நாள் இன்று..

Friday, January 17, 2014

பணத்தின் சக்தி


ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர். அவரது நாடங்களில் ஒன்று ‘ஏதென்ஸ் நகர டிமன்’ என்பது. இது அவரது நாடகங்களில் அவ்வளவு பிரபலமானதல்ல. பணத்திற்காகப் படுகொலைகள் நிகழ்வதையும், பணத்தாசையையும் சித்தரிக்குக் நாடகம் இது. இதன் கதாநாயகன் டிமன் இதனால் இறந்து விடுகிறான். இந்த நாடகத்தில் உள்ள இரு பகுதிகளை மார்க்ஸ் மேற்கோளாகக் காட்டுகிறார். அதில் ஒன்று பின்வருமாறு உள்ளது.

கறுப்பை வெள்ளையாக்கும், தீயதை நல்லதாக்கும், தவறைச் சரியெனக்கூறும், கீழானதை மேலாக்கும், கிழவனை இளைஞனாக்கும். கோழையை வீரனாக்கும் ஆ, கடவுளர்களே இது ஏன்? ஏன்? ஏன்? இது பூசாரிகளையும், அலுவலர்களையும் உன்னுடமிருந்து பிரிக்கும்.

பலவானின் தலையை உருவி விடும். மதங்களை வளர்க்கும், தகர்க்கும், பாவிகளை ஆசிர்வதிக்கும். தொழுநோயாளியைப் புகழும், திருடர்களை உயர்த்தும், பட்டமளிக்கும், மண்டியிடும் நாடாளுமன்றத்தில் அமர்த்தும். இது விதவையை மணக்கச் செய்யும் கெட்டவனை, நோயாளியை வாசனைப் பொருள் பூசி அழகு செய்யும். ஏ! பாவ ஜென்மமே வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியை சரியாகச் செய்ய விடுகிறேன்’’.

இது பிரபலமான மேற்கோள். இதனை கிருஸ்டோபர், காட்வெல் அவரது புகழ் பெற்ற ‘கார்னலும் உண்மையும்’ என்ற நூலில் இதனை மேற்கோளாகக் காட்டுகிறார். தொ.மு.சி.ரகுநாதன் அவரது ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூலில் மேற்கோளாகக் காட்டுகிறார். இவர்களுக்கு மூலாதாரமாக விளங்குபவர் மார்க்ஸ் ஆவார். அவரது “பொருளாதாரத் தத்துவக் கேடுகள்  1844” என்ற நூலில் “பணத்தின் சக்தி’’ என்ற பகுதியில் இதனையும், கதே என்ற ஜெர்மானியக் கவிஞரது ‘பாஸ்ட்’ என்ற நாடகத்திலிருந்து இதே போன்ற மேற்கோளையும் காணலாம். இந்த நூல் பொருளாதாரம், தத்துவம் ஆகியன சம்பந்தமான நூல். இதில் தனிச் சொத்தில் கொடுமைகள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். தனிச் சொத்து முதலாளிக்கு சொர்க்கத்தினைத் தருகிறது. உழைப்பாளிக்கு நகரத்தினை அளிக்கிறது என்று அவர் கூறுவார். “முதலாளிக்கு அரண்மனையைத் தருகிறது, உழைப்பாளிக்கு குடிசையைத் தருகிறது. முதலாளிக்கு அழகைத் தருகிறது. உழைப்பாளியைச் சின்னாபின்னமாக்குகிறது இதன் காரணமாக மனிதன் விலங்கு நிலைக்கு செல்கிறான்.’’

தனிச் சொத்திற்குக் காரணம் உழைப்பாளியின் உழைப்பு. இது அவனால் படைக்கப்பட்டு, அவனையே ஆட்டிப்படைக்கிறது. அவன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. ஏனென்றால் தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருள் (பண்டம்) முதலாளிக்கு நிலப்பிரபுவுக்குச் சொந்தம். இது பணத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. எனவே பணத்தின் சக்தி அதிகமானது. இது பற்றி இதே நூலில் மார்க்ஸ் விரிவாகப் பேசுகிறார்.

ஷேக்ஸ்பியரது இந்த வாசகங்களை மேற்கோளாகக் காட்டும் மார்க்ஸ் பணம் மனிதனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனமாக உள்ளது என்று கூறுவார். இதன் மூலம் உலகினையே விலைக்கு வாங்கலாம்.
இதனை நன்கு புரிந்து கொண்டவர் ஷேக்ஸ்பியர். மார்க்ஸ் கூறுகிறார், “பணத்தின் உண்மையான தன்மையையே, ஷேக்ஸ்பியர் சிறப்பாக இந்த பகுதியில் வர்ணிக்கிறார். ஷேக்ஸ்பியர் பணத்தின் இரு பண்புகளையும் வலியுறுத்திக் கூறுகிறார்.
1. பணம் கண்ணுக்குத் தெரியும் கடவுள். மனிதனது பண்புகளை நேர் எதிராக மாற்றுகிறது. பொருள்களைச் சிதைக்கிறது. ஒட்ட முடியாதவற்றை அது ஒட்டுகிறது.
2. உலகப் பொதுவான பரத்தை. மக்களையும், நாடுகளையும் அது விலைக்கு வாங்குகிறது.

பணமானது மனிதனது இயல்பான பண்புகளைச் சிதைக்கிறது. அது மனிதனுக்கு மேலாக நின்று ஆதிக்கம் செலுத்துகிறது. “என்னால் செய்ய முடியாததை பணத்தின் மூலம் செய்ய முடியும்... எனக்கு பிடித்தமான  உணவு வேண்டும் என்றால் அல்லது கோச்சு வண்டியில் செல்ல வேண்டும் என்றால் பணம் அவற்றைக் கொண்டு வருகிறது. நான் கற்பனை செய்வதை அது நனவாக்கிக் காட்டுகிறது.

பணம் இல்லாதவனுக்கும் தேவை உள்ளது. ஆனால் அவனது தேவை கற்பனையானதே ஆகும்... பயணம் செய்வதற்க்குப் பணம் இல்லை என்றால் அது உண்மையான தேவை இல்லை. படிப்பதற்கு விருப்பம் உள்ளது. பணம் இல்லை என்றால் படிக்க முடியாது. பணம்தான் கற்பனையை உண்மையாக மாற்றும். மனிதனது உண்மையான சக்திகளை மழுங்கடிக்கும். இவ்வாறு மார்க்ஸ் இந்தப் பகுதிக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்கிறார்.

இதே பகுதியை அவருடைய ‘ஜெர்மானியக் கருத்தியல்’ என்ற நூலில் மறுபடியும் மேற்கோளாகக் காட்டிகிறார். இங்கு அவர் கூறுகிறார், “சொத்தின் பொதுவான வடிவமான பணத்திற்க்கும், மனிதனது பண்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை ஒன்றிற்க்கு ஒன்று எதிர் எதிராக உள்ளன. இது நமது குட்டி பூர்ஷ்வாக் கொள்ளையர்களை விட ஷேக்ஸ்பியருக்கு நன்றாகவே தெரியும். இந்த மேற்கோள் மறுபடியும் ‘மூலதனம்’ பாகம் ஒன்றில் இடம் பெறுகிறது (123) பண்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பணத்தில் மறைந்து விடுகின்றன. பணமானது புரட்சிகரமான எல்லாவற்றையும் சம நிலைப்படுத்துகிறது.

ஷேக்ஸ்பியரது நாடகம் ‘வெனிஸ் நகர வணிகன்’ என்பது. அந்தோனியா என்ற வனிகன் ஷைலக் என்ற கந்துவட்டிக்காரனிடம் மூவாயிரம் ரொக்கப் பணம் கடனாக வாங்குகிறான். மூன்று மாதங்கள் கழித்து கடனைத் திருப்பித் தராவிட்டால் அந்தோனியாவின் இடது மார்பிலிருந்து ஒரு பவுண்ட் தசையை அறுத்துக் கொள்ள அவனுக்கு உரிமை உண்டு என்று ஒரு பத்திரம் எழுதி வாங்கிக் கொள்கிறான். பணம் குறிப்பிட்ட காலத்திற்குள் வரவில்லை. ஷைலக் நீதிமன்றம் செல்கிறான். ஒரு பவுண்ட் தசையைக் கேட்கிறான். நீதிபதியாக வந்த போர்ஷியா இரக்கம் காட்டுமாறு கேட்கிறாள். இரக்கம் பற்றி போர்ஷியா பேசுவதை அந்த கால மாணவர்கள் மனப்பாடம் செய்வர். இன்று நிலை வேறு ஆனால் ஷைலக் மசியவில்லை சட்டப்படி உள்ளதை அவன் கேட்கிறான்.
  
ஷைலக் கூறுகிறான், “நான் என் பத்திரங்களை மதிக்கிறேன்’’ இங்கு மார்க்ஸ் ஷைலக்கை பண்டங்களைப் பதுக்கி வைப்பவனாகக் காண்கிறார். அவன் கொடூரமானவனாகக் உள்ளதைக் காண்கிறார். ஏனென்றால் அவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் ஒரு பண்டமே. ஷைலக்கிற்கு அந்தோனியா ஒரு பண்டம் அவ்வளவுதான். அதன் மதிப்பு மூவாயிரம் டக்ட்கள் பரிவர்த்தனை மதிப்பாக மட்டுமே, ஷைலக் அந்தோணியோவைக் காண்கிறார். இப்பொழுது ஷைலக் சட்டத்தினை விடாப் பிடியாகப் பற்றிக் கொள்கிறான். சட்டப்படியான ஒரு பவுண்ட் தசைதான் வேண்டும் என்பதில் அவன் விடாப்பிடியாக இருக்கிறான். இது பூர்ஷ்வா சமுதாயத்தில் மனிதனையும் பண்டமாகக் காணும் போக்கு ஆகும்.

இதே கருத்து மூலதனம் – பாகம் 2 ஒன்றில் இடம் பெறுகிறது. 1844 – ஆவது ஆண்டில் இங்கிலாந்தில் குழந்தை உழைப்பாளிகள் பற்றி ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் இயற்றுவதற்குக் காரணம், குழந்தைகள் தொழிற்சாலைகளில் சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டார்கள். பல மனிதநேயவாதிகள்  இதனை எதிர்த்ததன் காரணமாக இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி குழந்தைகளை மதியம் ஒரு மணிக்கு மேல் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. இதனைப் பெரும்பான்மையான முதலாளிகள் பின்பற்ற வில்லை. ஒரு மணிக்கு பிறகும் வேலை கொடுத்தனர். சட்டம் இருந்தாலும் அதனை மதிக்கவில்லை. ஆனால் மதிப்பது போல் காட்டிக் கொண்டனர். இதனைப் பலர் எதிர்த்தபோது “நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டப்படி ஒரு மணிக்கு மேல் வேலைக் கொடுக்கவில்லை’’ என்று கூறி தங்களை உத்தமர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இதனை மார்க்ஸ் மூலதனம், (முதலாளிகள்) கூறுவது போன்று பின்வரும் மேற்கோளைக் காட்டுகிறார்.

“எனக்குச் சட்டம்தான் உண்டு
நான் சட்டப்படி நடக்க வேண்டும்
எனது ஒப்பந்தபடி எனக்கு நீதி வேண்டும்
அவளது இருதயம் வேண்டும்
பத்திரம் அவ்வாறு தானே கூறுகிறது.’’

இது மேலே கூறப்பட்ட வெனிஸ் நகர வணிகன் என்ற நாடகத்தில் நீதிமன்றத்தில் ஷைலக் கூறுவதாகும். இந்த நாடகத்தில் ஷைலக் அந்தோணியாவின் இடது மார்பில் இருந்து ஒரு பவுண்ட் தசை வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பது போல முதலாளிகள் சட்டத்தினை மதிக்கிறேன் என்று நடித்து கள்ளத்தனமாக குழந்தைகளை ஒரு மணிக்கு மேல் வேலை வாங்குவதில் குறியாக இருந்தனர் என்று மார்க்ஸ் கூறுகிறார். இதற்கு அவருக்குத் துணையாக ஷேக்ஸ்பியர் உள்ளார்.

மார்க்ஸ் அவரது எழுத்துகளில் ஷேக்ஸ்பியரது நாடகத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவற்றில் பணத்தின் ஆதிக்கம், பூர்ஷ்வாச் சட்டத்தின் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். மார்க்ஸ் கருத்துப்படி, மனிதனும் ஒரு பண்டமாகிறான் அதன் காரணமாக பண்டத்திற்கு மாற்றாக உள்ள பணத்தினைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் சிந்திக்கிறார்.

கட்டுரையாளர் : எஸ். தோத்தாத்ரி,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினர். பேராசிரியர் நா.வானமாமலையின்மாணவர்.

தொடர்புக்கு: 9894783657