Friday, February 21, 2014

சான்றோர் சொல்

 நம்மைத் தூக்கி எறியும் குதிரையைவிட
 நம்மை சுமந்து செல்லும் கழுதையே மேலானது.
        @தாமஸ் புக்கர்

கெட்ட அரசாங்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு
வேலைக் கொடுக்கிறது. ஆனால் நல்ல அரசாங்கம்
தகுதி உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறது.
         @வார்டு ஹாலிபாக்ஸ்

விவசாயிகள் நம் நாட்டின் மாபெரும் சக்தி,
தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசமுள்ள கூட்டணி.
       @ஹோ-சி-மின்


நம்பிக்கை உள்ளவனுக்கு வெற்றிக்கான கதவு
தானாகத் திறந்துவிடும்
    ஈசாப்                       


மனிதனால் அடைய முடியாதது எதுவும் இல்லை

தாயின் இதயத்தில் தான் அன்புமலர்
எப்போதும் மணம்வீசிக் கொண்டிருக்கும்
   @ இங்கர்சால்

இரும்புபோன்ற மனிதனையும் புடம்போட்டு
உருவாக்கும் அக்னிதான் பெண்
தே

பிறரை மகிழ்விப்பதுதன் மகிழ்ச்சிக்கான
வழியாகும்
இங்கர்சால்

ஒரு மனிதனின் நினைப்புகள்தன்
அவனுடைய சாதனைகளாக மாறுகிறது
ஷில்லர்

தியாகிகளின் சமாதிகளே நமது ஆராதனைக்குரிய 
தேவாலயங்கள்  
பிடல் காஸ்ட்ரோ
நிகழ் காலத்தை விலையாகக் கொடுத்துத்தான்
எதிர்காலம் வாங்கப்படுகிறது
@ ஜான்சன்


காந்தாரக் கலை


இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி காந்தாரம் ஆகும். தற்போது காந்தகார் என்று அழைக்கப்படும் பகுதிதான் முந்தைய காந்தாரம் என்று கருதுகின்றனர். வடமேற்குப் பாகிஸ்தானில் மத்திய சிந்து நதியின் இருமருங்கிலும் இப்பகுதி இன்று அமைந்துள்ளது. இதன் முக்கிய நகரங்களாக தட்சசீலமும் (TAXILA) பெஷாவரும் (OESGWAR) விளங்கி வந்துள்ளன. தொன்மைக் காலத்தில் பெர்ஸியப் பேரரசின் கீழ் இப்பகுதி இருந்தது.

கி.மு.327-ல் அலெக்ஸாண்டர்தம் படையெடுப்பின் போது இங்கு வந்துள்ளார். பின்பு கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அவர் இப்பகுதியைப் பௌத்தத்திற்கு மாற்றினார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலிருந்து கி.மு.முதல் நூற்றாண்டு வரை இது பாக்டீரியாவின் பகுதியாக மாறியது. குஷாணர் காலத்தில் (கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டுவரை), குறிப்பாக கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் சிறந்த சிற்பக்கலை மையமாகத் திகழ்ந்தது. பௌத்தக் கலையின் மூன்று முக்கிய கலைக்கூடங்களான காந்தாரம், மதுரா, அமராவதி ஆகியவற்றில் இது முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. காந்தாரம் பல அயல் நாட்டுத்தாக்கங்களுக்கும், பண்பாட்டுத் தாக்கங்களுக்கும் ஆளாயிற்று. கிரேக்க உரோமானிய நாடுகளின் கலைக் கூறுகளைத் தன்னுள் எடுத்துக் கொண்ட காந்தாரம், சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளின் கலைகளில் மாற்றங்களை விளைவிக்கத் தவறவில்லை.

தட்சசீலத்தில் அகழ்வாராய்ச்சி செய்த சர்ஜான் மார்ஷல் காந்தாரக் கலைச் சின்னங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். முதல் பிரிவானது, பெஷாவர் பள்ளத்தாக்கில் உருவான கலைப்படைப்புகள் ஆகும். இங்கு கிடைத்த சிற்பங்கள் இங்கேயே வெட்டி எடுக்கப்பட்ட நுண்துகள் (Finely grained) கட்டமைப்புக் கொண்ட நேர்த்தியான கற்கலால் வடிக்கப்பட்ட வையாகும். இரண்டாவது பிரிவு, காந்தாரத்தில் இல்லாமல் ஆப்கானிஸ்தானத்தில் உருவானது. இதனைச் சார்ந்த சிற்பங்கள் கதை (stucco)யினால் அல்லது களிமண்ணால் செய்யப்பட்டவை. இவை, தட்சசீலம் மற்றும் ஆக்பெஸ் நதிவரையான பரந்த பகுதியில் கிடைக்கின்றன. இப்பிரிவு கி.பி.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 5 ஆம் நூற்றாண்டின் முடிவில், ஹீனர்களின் படையெடுப்பு நிகழும் வரை, செழித்து வளர்ந்தது. ஹீனர்களால் இக்கலைக் கருவூலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
-    முனைவர் கு.சேதுராமன்
( நன்றி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ‘பௌத்த

சமயக்கலை வரலாறு’ எனும் நூல்’

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி: வரிபாக்கி

புதுடில்லி: கார்ப்பரேட்  நிறுவனங்கள் ரூ.2.46 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித்துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
இத்தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி.சீலம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைத் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி ரூ.2,46,416 கோடியாகும், அதில் 45 நிறுவனங்கள் தலா ரூ.500 கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளன. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3,139 சோதனைகளை மேற்கொண்ட வருமான வரித்துறை ரூ.5654 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.2012-13 இடையிலான காலக்கட்டத்தில் 3889 சோதனைகளை மேற்கொண்டு 575.08 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஜனசக்தி
09-02-2014



சில சமூக வழக்கங்கள்


தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சில விந்தையான சமூக வழக்கங்களைச் சங்க இலக்கியங்களில் காணலாம். விருந்தினரை விரைந்து செல்லுமாறு பணிக்கும் மரபு வடமொழியில் “சதபதி” என்று அழைக்கப்பட்டது. இதைப் பற்றி பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடுகிறது. இதன் படி, தன் விருந்தினரை வழியனுப்பச் சென்ற கரிகாலன் ஏழு அடிகள் வைத்தபின், நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக் கொண்டான். ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவன் உணவு உண்ணுமுன் ஒரு கைப்பிடி சோறும் இறைச்சியும் காக்கைகளுக்கு அளித்தான். பசுவதை, கருசிதைவு, அந்தணரைக் கொல்லுதல் ஆகியவை மிகக் கொடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டன. ஆனால் செய்நன்றி மறத்தல் இவற்றை எல்லாம்விட பெரிய குற்றமானது என்று அக்காலத்து நம்பிக்கை நிலவியது.

கணிகையர் பெண்கள் தம் தொழில் நடை முறைக்கு மாறாகத் தவறுகள் இழைப்பார்களேயானால், அவர்கள் தம் தலைமீது ஏழு செங்கற்களைச் சுமந்து பொது அரங்குகளைச் சுற்றிவருமாறு தண்டிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கணிகையர் ஜாதியினின்றே விலக்கப்பட்டனர். பெண்டிர் செய்த பாவங்களை, குமரி முனையில் கடல் நீராடிப் போக்கிக் கொள்ளலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகு, பத்தாம் நாள் இரவு, தாய்மார்கள் ஏரி, குளங்களில் நீராடினர். பேய் பிடித்தல் கண்படுதல் போன்றவற்றை மக்கள் நம்பினர். இவற்றினின்று காத்துக்கொள்ள நெய், வெள்ளைக் கடுகு ஆகியவற்றால் குழந்தைகளின் முடிகளை அலங்கரித்தனர். மந்திரித்தல், சகுனம் பார்த்தல் போன்ற நம்பிக்கைகள் நிலவின. கண்ணகியின் இடதுகண்ணும், மாதவியின் வலது கண்ணும் துடித்தமையால், இந்திர விழா நாளில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி முன்பே அறிய முடிந்தது என்று சிலப்பதிகார ஆசிரியர் விரிவாகக் கூறுகிறார்.
சவ அடக்கம் :
        இறந்தவர்களின் உடல்களை இரு வகையாக அடக்கம் செய்தனர். எரித்தல், அல்லது தாழிகளில் இட்டுப் புதைத்தல் அல்லது தாழிகள் இல்லாமல் புதைத்தல் போன்ற மரபுகள் வழக்கில் இருந்தன. சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்க்கும் மாறுபட்ட வழக்கங்கள் கையாளப்பட்டன. இறந்த முனிவர்களுக்கும், மன்னர்களுக்கும் உடன்கட்டை ஏறிய பெண்டிருக்கும் அவரது உறவினர்களால் வெவ்வேறு அமைப்புகளுடைய சமாதிகள் (செங்கற்களாலான கல்லறைகள்) கட்டப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. இத்தகைய கல்லறைகளின் வடிவம் இறந்தவர்களின் சமூக அமைப்பு ஆகியவற்றுக்குத் தக்கப்படி மாறுபட்டது. சவ ஊர்வளத்தில் கொட்டப்பட்ட இசைக்கருவிகளின் ‘டுண்டுண்’ என்ற ஒலி, கேட்போரின் மனத்தில், “உனக்கும் ஒருநாள் சாவு உண்டு என்ற அச்சத்தை எழுப்பியது என்று இப்பாடலிலிருந்து அறிகிறோம்.

சதி அல்லது உடன்கட்டையேறுதல் :
        உடன்கட்டை ஏறும் பழக்கம் ஓரளவு நிலவிவந்தது. ஆனால், இப்பழக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை கணவனை இழந்த பெண்கள் தாங்களும் உடன்கட்டை ஏறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டனர் என்பதையும், இவ்வழக்கத்தைத் தமிழர்கள் ஊக்குவிக்க வில்லை என்பதையும், பூதப்பாண்டியன் மனைவி வாயிலாக அறியலாம். அவளுடைய சொற்கள் பெரும் புகழுடன் நின்று நிலவுகின்றன. ஆனால் சதியை மேற்கொண்ட பெண்களின் வீரத்தையும் கணவனிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியையும் அனைவரும் பெரிதும் பாராட்டினர். உடன்கட்டை ஏறுவது என்பது பரவலான வழக்கமாக இல்லை. அது விதிவிலக்காகவே இருந்தது கணவனை இழந்த எந்தப் பெண்ணும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக நாம் அறிவவில்லை.

பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
சங்ககால ஆட்சி முறையும்
சமூக வாழ்வும் எனும் நூல்)

ஜனசக்தி 10-02-2014

தேசிய கலாசாரம்

ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பிரிவினருக்கும், கலாசாரத்திற்குமிடையினுள், இணைப்பு என்பது (இனம்,மக்கள்,தேசம், அல்லது கலாசார ஒற்றுமையம்சம் கொண்ட மக்கள் குழுக்கள்) கலாசாரத்திற்கு ஒரு பிரத்தியேகமான வடிவத்தைக் கொடுக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புடன் உள்ள இணைப்பைக் காட்டுவதாக உள்ளது. அதனுடைய வர்க்க நலன்கள் பிறவற்றையும் காட்டுவனவாக இருக்ககூடும்; முரண்பாடுள்ள சமுதாயத்தில், பல நியதிகளும், தராதரங்களும் ஆதிக்கத்தில் இருக்கக் காண்கிறோம். அவை அதிகார ஆதிகத்திலுள்ள வர்க்கத்தின்  நலன்களுக்கு ஏற்றனவாகவே உள்ளன. இதற்கு நேர்மாறாக, எதிரிடையான, தனக்கே உரித்தான லட்சிய அமைப்புகளையும், நியதிகளையும், நியாத்தீர்ப்புகளையும், பழக்கவழக்கத்திற்கான கோட்பாடுகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் உருவாக்கிக் கொள்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் லெனின் கூறுவதை சுட்டிக்காட்டிலாம். “சுரண்டல் சமுதாய அமைப்புள்ள எந்தவொரு நாட்டிலும், அதன் தேசியக் கலாசாரத்தில் இரண்டு வகையான கலாசாரங்கள் இருக்கும். ஆளும் வர்க்கத்தின் கலாசாரம் என்ற ஒன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலன்களோடு இணைப்புக் கொண்ட ஜனநாயக சோஷலிச தன்மைகள் கொண்ட இன்னொன்றுமாக இருக்கும்’’

இந்த லெனினியக் கோட்பாடு, கலாசாரத்தைப் பற்றிய சித்தாந்தத்தை மிகத் தெளிவாக, துல்லியமாகக் கூறுகிறது. இது சீர்திருத்தவாதிகளாலும், வலதுசாரி திரிபுவாதிகளாலும் தாக்கப்படுகிறது. அவர்கள் பூர்சுவா கலாசாரத்தை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏனெனில், கலாசாரத்தைப் பற்றிய  வர்க்கக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள இவர்கள் தவறிவிட்டனர். வர்க்கக் கண்ணோட்டம் இல்லாது, இதுவரை இருந்த பூர்சுவா கலாசாரத்தைக்கூட நாம் ஜீரணித்துக் கொள்ள வேண்டிய பிரச்சனையையும் இவர்கள் சந்திக்காமல் நழுவப் பார்க்கிறார்கள்.

தொழிலாளி வர்க்கம், பிற்போக்குக் கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும். பூர்சுவா ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான இயந்திரங்களைப் பயன் படுத்துவதை நியாயப்படுத்தக்கூடிய கலாசாரத்தையும் நிராகரிக்க வேண்டும். ஆனால், சகல நியாயமான கலாசார சாதனைகளும் உலகு தழுவிய மனிதகுல கலாசாரத்தை சோஷலிச சமுதாயத்தைப் படைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவேதான் இளைஞர்களிடம் பேசுகிறபோது லெனின் மனிதகுலம் கலாசாரப் பாரம்பரியமே ஆகும். இது புதிய கலாசாரத்தை-சோஷலிச சமுதாயத்தைப் படைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
       
        எனவேதான் இளைஞர்களிடம் பேசுகிறபோது லெனின் “மனிதகுலம் படைத்த அறிவுச் செல்வம் அனைத்தையும் கொண்டு உனது மூளையைச் செழுமைப்படுத்திக் கொண்டால்தான், நீ ஒரு கம்யூனிஸ்டாக முடியும்” என்று கூறினார்.
-    வி.கெல்லி,எம்.கவல்ஸோன்
-    தமிழில் : தா.பாண்டியன்
(நன்றி : நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
‘சமுதாயமும் பண்பாடும்’ எனும் நூல்)

       
       
       
       
       
       
       


கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல் அறிமுக அரங்கம்

            விருதுநகர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைபெற்றது.
            விருதுநகர் அருகிலுள்ள ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் விருதுநகர் கிளையின் சார்பில் நூல்கள் அறிமுக அரங்கமும் படைப்பரங்கமும் நடைப்பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் இரா.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் வரவேற்றார்.
            விடுதலைப் போராளி ஜி.ராமசந்திரன் ‘சுயசரிதை, கட்டுரை மற்றும் ஆவணங்கள் என்ற நூலை இரா.பாலசந்திரன் எழுதி உள்ளார். நூலை அறிமுகம் செய்து சாத்தூர் கிளைசெயலாளர் எஸ்.பழனிக்குமார் பேசுகையில், தலைவர் பி.சீனிவாசராவை சந்தித்து விவசாய சங்கம் துவக்க எடுத்த முயற்சி, இராஜபாளையம், வத்திராயிருப்பு மாநில மாநாடு நடத்த துணை நின்ற பின் இராமநாதபுரம் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்தது ஆகியவற்றை படிக்கும்போது உண்மையிலேயே நமது காலப் பணிகள் எல்லாம் மிகச் சுலபமாகத் தெரிகிறது. 14 வயதில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார். அவரது சகோதரி ஜி.நாராயணம்மாள் தமிழ் நாட்டில் இரண்டாவது பெண் தனிநபர் சத்தியாக் கிரகியாக பாடுபட்டுள்ளார். ஜிரா.ராமசந்திரன் மனைவி தலைவர்களுக்கு  கூரியராகவும், உணவு அளித்தும் தலைமறைவு வாழ்க்கையில் செயல்பட்டதை படிக்கும் பொழுது உண்மையிலேயே நம்மை உணர்ச்சிவயப்பட வைக்கிறது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்றார்.
             ‘இராமலட்சுமியின் வாக்குமூலம்’ குறு நாவலை கவிஞர் பஸிரா ரசுலும் மற்றும் கந்தகக்கவி பாண்டூவும், ‘மௌனம் பேசும் வார்த்தைகள்’ கவிதை நூலை சிவகாசி கிளை பொருளாளர் அ.கி.முருகன் ஆகியோர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார்கள்.
            படைப்பரங்கில் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி சிறுகதையையும், குருவிக்கூடு கவிதை நூலை எழுதிய கவிஞர் ராதா மணிக்குமார் கவிதையையும் கந்தகக்கவி பாண்டு, சாத்தூர் வ.நவனீத கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். சேலத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ் தாரணி அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்மை நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் தீனதயாளி, ஆர்.ஆர்.நகர் சி.பி.ஐ பொறுப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படைப்பரங்கத்தில் சிறுகதையாளர் ஸ்வரமஞ்சரி தலைமையுரை நிகழ்த்தினார்.
ஜனசக்தி

04-02-2014

Tuesday, February 11, 2014

பெரியாரால் உருவாக்கப்பட்டவர்களே...

                பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரிய பேச்சாளர்கள் தமிழகத்தை அனேகமாகக் கடந்த நாற்பது ஆண்டுகாலமாகத் தம்முடைய நாவால் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அத்தனை பேரையும் பேச வைத்த பெரியார் தமக்கென மேடைகென்றே ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பேசியதே இல்லை. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பாணி-முறை உண்டு. நான் பேசுகின்றேன் என்றால் எனக்கென்று ஒரு பாணி, ஒரு முறை. நண்பர் வீரமணி அவர்களுக்கு ஒரு பாணி, ஒரு முறை. கலைஞர் கருணாநிதி, அவர்களுக்கென்று ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு முறை. காலஞ்சென்ற அண்ணா அவர்களுக்கு என்று ஒரு நடை, ஒரு முறை-இப்படி எல்லாம் உண்டு.

அவரின் பேச்சு முறை :
தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன? நேரிலும் மேடையிலும் எல்லாம் ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு பேச்சுத்தான்! மேடைக்கு என்று ஒரு தமிழ், அதற்கு என்று இழுத்துப் பிடித்த எதுகை, மோனையெல்லாம் அவரிடம் இல்லை. ஏன்? ஏன்? அவருடைய ஒரே நோக்கம், மக்களிடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும்; அது நெஞ்சில் பதிகின்றாற்போல் சொல்ல வேண்டும். அது கடைசி மனிதனுக்கும் புரிய வேண்டும். சாயம் பூசி, அழகுபடுத்தி அதை ஒரு புலமைக் கலையாக மாற்றக்கூடாது என்பதாகும். தமிழ் நாட்டினுடைய கடைசி மனிதனைத் தூக்கிவிடுவது தான் அவருடைய கடைசி குறி. ஆகவேதான் அவருடைய மேடைப்பேச்சு பூராவும் கடைசி வரைக்கும் இந்த முறையில் அமைந்திருந்தது. வீட்டிலும் வெளியிலும் இயற்கையாகவே என்ன பேசுவாரோ அவையேதான் மேடைப்பேச்சிலும் அமைந்து இருந்தன.

மனோதத்துவவாதிகள் கருத்து :
                மேல் நாட்டில் சைக்காலஜி – மனோதத்துவத்தை ஆராய்ந்தவர்கள் சொல்லுகின்றார்கள்; “யார் வீட்டிலும் வெளியிலும் மேடையிலும் இயற்கையாகவே பேசுகின்றார்களோ, யார்-தாம் நினைக்கின்றபடி, அடுத்தவனுக்குப் புரிகின்றபடி எழுதுகின்றார்களோ அவர்கள் மனத்தில் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்; நேர்மை உடையவர்கள்; அவர்கள் மனிதனை மனிதனாகவே பாவித்து எந்தப் பலனையும் எதிர்பாராது பேசுகின்றவர்கள்; எழுதுகின்றவர்கள் என்று”. அதிகக் கைத்தட்டினை உங்களிடம் இருந்து வாங்கவேண்டும் என்பதற்காக அபிநயத்தோடு ஒரு நாடகப் பாணியில் பெரியார் அவர்கள் பேசவில்லை காரணம், அவர் உங்கள் கைத்தட்டினை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதற்குப் பொருள் கேட்பவர்களைக் கெடுத்த பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் வேண்டாத இடத்தில் கைதட்டி, வேண்டாதவர்களைக் கைத்தூக்கிவிட்டு, என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து, இன்றைக்கு வேண்டாத தமிழகமாக ஆக்கியாகிவிட்டது. ஆனால், பெரியார் அவர்களைப் பொருத்தவரை நீங்கள் கைதட்டினாலும் சரி, நீங்கள் கூட்டத்தில் இருத்து இறங்கிப் போனாலும் சரி, அவர் தாம் சொல்லுகின்றதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
  
வடசென்னையில்... :
                நான் வட சென்னையில் ஒரு சமயம் அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து, அவரது பேச்சினைக் கேட்டேன். கூட்டத்தினைப் பார்த்துச் சொன்னார். “இவ்வளவு முட்டாள்களும் தமிழ்நாட்டில் இருப்பது என்பது ரொம்ப நல்லது. இப்படி எல்லாம் நீங்கள் முட்டாள்களாக இல்லாது இருந்தால் 40 வருடத்திற்குப் பின்பும், இப்படி வந்து உட்கார மாட்டீர்கள்; நான் சொல்லித்தான் பார்க்கிறேன், உங்களுக்குப் புரியவில்லை. ஆகவே மேலும் சொல்லுகின்றேன்’’ என்று சொன்னார்.

அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம் :
                யாராவது கூட்டத்தினைக் கூட்டி வைத்து “நீங்கள் எல்லாம் முட்டாள்கள்’’ என்று சொன்னால் விடுவார்களா? அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம். அவரைப் பின்பற்றி நான் சொன்னால் கல் வந்து விழும். பெரியார் ஏன் சொல்லுகின்றார்? சொல்லுகின்ற உரிமை அவருக்கு உண்டு என்பதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதயத்தின் மொழி அது; வாயும், மூளையும் கற்பிக்கின்றமொழி அல்ல. அது யாருக்கு வரும்? இந்த மனித சமுதாயத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்கு உந்தித் தழைக்கின்றதோ அவருக்குத்தான் அந்த மொழியே வரும் எழுத்திலும் பேச்சிலும்!
தா.பாண்டியன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை ‘பெரியார் என்னும் ஆளுமை’ எனும் நூல்)
நன்றி : ஜனசக்தி – 29.01.2014


               
       
       


Monday, February 10, 2014

ம.சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று...

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 

153 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (18.02.2014).


நிழலில் இருப்பவனுக்கு வெயில் கஷ்டம் தெரி யாது. புளிச்சயேப்பக்காரனுக்கு அகோர பசியின் கொடுமை விளங்காது. தரித்திரத்தில் வாழும் ஏழை கூலியின் தவிப்பு ஒய்யார உல்லாச வாழ்வில் புரளும் முதலாளிகளின் கடின சிந்தனையில் படாது
இந்திய சுதந்திரப் புரட்சியாளர்களிலே மூத்தவர் மட்டுமல்லமுதிர்ந்தவர் ம.சிங்காரவேலர். சிலரே இவரினும் மூத்தவர்கள். அண்ணல் மகாத்மாகாந்திஷ்யப் புரட்சி வீரர் லெனின்இவர்களினும் மூத்தவர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர். 18-2-1860ல் பிறந்த இந்த மேதை 1946 பிப்ரவ இவர் மறைவை இராஜாஜி அவர்கள் சுதந்திரப் பித்தரும்,யோக்கியர்களில் ஒருவரும் மறைந்தார்” என்று குறிப்பிட்டார்.
இதனால் ம.சிங்கார வேலரின் ஒழுக்கமான அரசியல் செயல் பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில் சிங்காரவேலரை-புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சிங்காரவேலர் இந்தியா சுதந்திரம் பெறுவ தற்குஓராண்டிற்கு முன்னமேயே மறைந்தார். செய்திகளை வகைதொகைப்படுத்திச் சொல்வதில் ம.பொ.சி விற்பன்னர். இந்தியாவில் உருவாகிய இயக்கங்கள் நான்கு. இந்திய தேசிய காங்கிரஸ்சம தர்ம இயக்கம்,சுயமரியாதை இயக்கம்தொழிற்சங்க இயக்கமென நான்கு. இந்த நான்கு இயக்கங்களிலும் நீக்கமறநெருக்கமாக இடம்பெற்றவர் சிங்காரவேலர் மட்டுமே” என்பார் ம.பொ.சி. தொழிற்சங்கங்கள் தந்த சிங்கார வேலர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ம.சிங்காரவேலர் ஆவார். பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வெ.ரா.வுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராசருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

உழைப்பாளர் தினமான மே தினத்தை இந்தியாவிலேயே - ஏன் ஆசியாவிலேயே - முதன்முறையாகக் கொண்டாடிவழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் இயக்கத்தவர்களை தோழர் என்று முதன்முதலாக அழைத்தவர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் ம. சிங்காரவேலர்.தமிழகத்தையே உலுக்கிய நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள்போராட்டத்தை பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னின்று நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது அதனைத் துவக்கி வைத்தார்.

கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் பங்குகொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சியாக மதிக்கப்படுகிறது. அவர் உரைநிகழ்த்தும்போது கூட்டத்தினரை ‘‘காம்ரேட்ஸ்’’ என்று அவர் அழைத்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர் காங்கிரஸ்காரர்களால் காம்ரேட்’ என்றே அழைக்கப்பட்டார். மரியாதையும் முக்கியத்துவமும் நிறைந்த தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்விடுமோ என்றும்பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று இளம் தலைமுறையினரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் தன்னை மிகவும் துணிச்சலுடன் ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்ட துணிச்சலை அங்கு வியந்து பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று 1923இல் வேன்கார்டு இதழில் எம்.என்.ராய் பதிவு செய்திருக்கிறார்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெறவேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.

1917இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர்இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாட வைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதுஅதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சிங்காரவேலர். போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு சாப்பிடுவதுபோல’ என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக்  வெறியாட்டத்தைக் கண்டித்துஅவர் தமிழகத்தில் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக்கடைக்காரர்களும்இறைச்சிக் கடைக்காரர்களும்கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக்கோட்டினை தெருவில் எரித்தார். அதன்பின் அவர் வழக்கறிஞர் தொழிலையே கைவிட்டுவிட்டார்.உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்னும் ஊரில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்மீது காவல்துறையினர்துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பேரணியில் வந்தோர் காவல்துறையினரைத் திருப்பித்தாக்கிகாவல்நிலையத்திற்குத் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு சென்னையில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் பலருக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் காரணமாக வைத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார். அதனைக் கண்டித்து சிங்காரவேலர் மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளிதழுக்கு எழுதினார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது சிங்காரவேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ‘‘நான் இன்று எனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டேன். நாட்டின் மக்களுக்காக உங்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி முடித்தபோது அதனைக் கண்டித்தும் காந்திக்கு சிங்காரவேலர் கடிதம் எழுதினார்.தமிழகத்தில் முதன்முறையாக தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிகசக்கரைச் செட்டியார் ஆகியோர் தோளோடு தோள் நின்று இவருக்குத் துணை புரிந்தனர். சென்னை தொழிலாளர் சங்கம்நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் யூனியன்கோவை நகரத் தொழிலாளர் சங்கம்மின்சாரத் தொழிலாளர் சங்கம்மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம்அச்சுத் தொழிலாளர் சங்கம்அலுமினியத் தொழிலாளர் சங்கம் போன்று பல்வேறு தொழிற்சங்கங்களை தொடங்கினார்.

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 6 - 13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இறுதி நாளான ஏப்ரல் 13 அன்று சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெறும். 1925ஆம் ஆண்டுசென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 13வது வட்டம் யானைக்கவுனி பகுதியிலிருந்து அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் தமிழிலேயே பேசினார். அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தார். அதேசமயத்தில்  தனிப்பட்ட முறையில் ஜெர்மன்பிரெஞ்சுஇந்தி முதலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். சவஊர்வலத்தில் சென்ற சிங்காரவேலரை குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன்மார்பை நிமிர்த்துக்காட்டித் தன்னைச் சுடுமாறு சிங்காரவேலர் சொன்னார். இச்சவஊர்வலம் குறித்து குடியரசு இதழில் அவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றது.1943ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதில் தள்ளாதவயதிலும் சிங்காரவேலர் தந்தை பெரியாருடன் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும்.அந்தக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.அவரும் அவருடைய முன்னோர்களும் ஈட்டிய சொத்துக்களின்மதிப்பு அந்நாளிலேயே சுமார் 200 கோடியாகும்.

அந்த திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதிவரை ஏழைத் தொழிலாளர்களுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார்.

மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப்பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாகசிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதா மாதம் தவறாமல் உதவித் தொகை அனுப்பி வருகிறது. ஆனால் உதவித் தொகையின் அளவு வெறும் ரூ.50 என அறிகிறோம். அத்தொகை உயர்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை...

நன்றி : http://rajaphilipsingarayar.hpage.co.in/_75761294.html

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..


பிப்ரவரி 11: ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை 

-பூ.கொ.சரவணன்
பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.


ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை 



-பூ.கொ.சரவணன்
நன்றி : Vikatan EMagazine
11.02.2014