Friday, February 21, 2014

காந்தாரக் கலை


இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி காந்தாரம் ஆகும். தற்போது காந்தகார் என்று அழைக்கப்படும் பகுதிதான் முந்தைய காந்தாரம் என்று கருதுகின்றனர். வடமேற்குப் பாகிஸ்தானில் மத்திய சிந்து நதியின் இருமருங்கிலும் இப்பகுதி இன்று அமைந்துள்ளது. இதன் முக்கிய நகரங்களாக தட்சசீலமும் (TAXILA) பெஷாவரும் (OESGWAR) விளங்கி வந்துள்ளன. தொன்மைக் காலத்தில் பெர்ஸியப் பேரரசின் கீழ் இப்பகுதி இருந்தது.

கி.மு.327-ல் அலெக்ஸாண்டர்தம் படையெடுப்பின் போது இங்கு வந்துள்ளார். பின்பு கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அவர் இப்பகுதியைப் பௌத்தத்திற்கு மாற்றினார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலிருந்து கி.மு.முதல் நூற்றாண்டு வரை இது பாக்டீரியாவின் பகுதியாக மாறியது. குஷாணர் காலத்தில் (கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டுவரை), குறிப்பாக கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் சிறந்த சிற்பக்கலை மையமாகத் திகழ்ந்தது. பௌத்தக் கலையின் மூன்று முக்கிய கலைக்கூடங்களான காந்தாரம், மதுரா, அமராவதி ஆகியவற்றில் இது முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. காந்தாரம் பல அயல் நாட்டுத்தாக்கங்களுக்கும், பண்பாட்டுத் தாக்கங்களுக்கும் ஆளாயிற்று. கிரேக்க உரோமானிய நாடுகளின் கலைக் கூறுகளைத் தன்னுள் எடுத்துக் கொண்ட காந்தாரம், சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளின் கலைகளில் மாற்றங்களை விளைவிக்கத் தவறவில்லை.

தட்சசீலத்தில் அகழ்வாராய்ச்சி செய்த சர்ஜான் மார்ஷல் காந்தாரக் கலைச் சின்னங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். முதல் பிரிவானது, பெஷாவர் பள்ளத்தாக்கில் உருவான கலைப்படைப்புகள் ஆகும். இங்கு கிடைத்த சிற்பங்கள் இங்கேயே வெட்டி எடுக்கப்பட்ட நுண்துகள் (Finely grained) கட்டமைப்புக் கொண்ட நேர்த்தியான கற்கலால் வடிக்கப்பட்ட வையாகும். இரண்டாவது பிரிவு, காந்தாரத்தில் இல்லாமல் ஆப்கானிஸ்தானத்தில் உருவானது. இதனைச் சார்ந்த சிற்பங்கள் கதை (stucco)யினால் அல்லது களிமண்ணால் செய்யப்பட்டவை. இவை, தட்சசீலம் மற்றும் ஆக்பெஸ் நதிவரையான பரந்த பகுதியில் கிடைக்கின்றன. இப்பிரிவு கி.பி.4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 5 ஆம் நூற்றாண்டின் முடிவில், ஹீனர்களின் படையெடுப்பு நிகழும் வரை, செழித்து வளர்ந்தது. ஹீனர்களால் இக்கலைக் கருவூலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
-    முனைவர் கு.சேதுராமன்
( நன்றி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ‘பௌத்த

சமயக்கலை வரலாறு’ எனும் நூல்’

No comments:

Post a Comment