Tuesday, February 11, 2014

பெரியாரால் உருவாக்கப்பட்டவர்களே...

                பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரிய பேச்சாளர்கள் தமிழகத்தை அனேகமாகக் கடந்த நாற்பது ஆண்டுகாலமாகத் தம்முடைய நாவால் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அத்தனை பேரையும் பேச வைத்த பெரியார் தமக்கென மேடைகென்றே ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பேசியதே இல்லை. அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பாணி-முறை உண்டு. நான் பேசுகின்றேன் என்றால் எனக்கென்று ஒரு பாணி, ஒரு முறை. நண்பர் வீரமணி அவர்களுக்கு ஒரு பாணி, ஒரு முறை. கலைஞர் கருணாநிதி, அவர்களுக்கென்று ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு முறை. காலஞ்சென்ற அண்ணா அவர்களுக்கு என்று ஒரு நடை, ஒரு முறை-இப்படி எல்லாம் உண்டு.

அவரின் பேச்சு முறை :
தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன? நேரிலும் மேடையிலும் எல்லாம் ஒரு தமிழ், ஒரு நடை, ஒரு பேச்சுத்தான்! மேடைக்கு என்று ஒரு தமிழ், அதற்கு என்று இழுத்துப் பிடித்த எதுகை, மோனையெல்லாம் அவரிடம் இல்லை. ஏன்? ஏன்? அவருடைய ஒரே நோக்கம், மக்களிடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும்; அது நெஞ்சில் பதிகின்றாற்போல் சொல்ல வேண்டும். அது கடைசி மனிதனுக்கும் புரிய வேண்டும். சாயம் பூசி, அழகுபடுத்தி அதை ஒரு புலமைக் கலையாக மாற்றக்கூடாது என்பதாகும். தமிழ் நாட்டினுடைய கடைசி மனிதனைத் தூக்கிவிடுவது தான் அவருடைய கடைசி குறி. ஆகவேதான் அவருடைய மேடைப்பேச்சு பூராவும் கடைசி வரைக்கும் இந்த முறையில் அமைந்திருந்தது. வீட்டிலும் வெளியிலும் இயற்கையாகவே என்ன பேசுவாரோ அவையேதான் மேடைப்பேச்சிலும் அமைந்து இருந்தன.

மனோதத்துவவாதிகள் கருத்து :
                மேல் நாட்டில் சைக்காலஜி – மனோதத்துவத்தை ஆராய்ந்தவர்கள் சொல்லுகின்றார்கள்; “யார் வீட்டிலும் வெளியிலும் மேடையிலும் இயற்கையாகவே பேசுகின்றார்களோ, யார்-தாம் நினைக்கின்றபடி, அடுத்தவனுக்குப் புரிகின்றபடி எழுதுகின்றார்களோ அவர்கள் மனத்தில் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்; நேர்மை உடையவர்கள்; அவர்கள் மனிதனை மனிதனாகவே பாவித்து எந்தப் பலனையும் எதிர்பாராது பேசுகின்றவர்கள்; எழுதுகின்றவர்கள் என்று”. அதிகக் கைத்தட்டினை உங்களிடம் இருந்து வாங்கவேண்டும் என்பதற்காக அபிநயத்தோடு ஒரு நாடகப் பாணியில் பெரியார் அவர்கள் பேசவில்லை காரணம், அவர் உங்கள் கைத்தட்டினை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதற்குப் பொருள் கேட்பவர்களைக் கெடுத்த பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் வேண்டாத இடத்தில் கைதட்டி, வேண்டாதவர்களைக் கைத்தூக்கிவிட்டு, என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து, இன்றைக்கு வேண்டாத தமிழகமாக ஆக்கியாகிவிட்டது. ஆனால், பெரியார் அவர்களைப் பொருத்தவரை நீங்கள் கைதட்டினாலும் சரி, நீங்கள் கூட்டத்தில் இருத்து இறங்கிப் போனாலும் சரி, அவர் தாம் சொல்லுகின்றதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
  
வடசென்னையில்... :
                நான் வட சென்னையில் ஒரு சமயம் அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து, அவரது பேச்சினைக் கேட்டேன். கூட்டத்தினைப் பார்த்துச் சொன்னார். “இவ்வளவு முட்டாள்களும் தமிழ்நாட்டில் இருப்பது என்பது ரொம்ப நல்லது. இப்படி எல்லாம் நீங்கள் முட்டாள்களாக இல்லாது இருந்தால் 40 வருடத்திற்குப் பின்பும், இப்படி வந்து உட்கார மாட்டீர்கள்; நான் சொல்லித்தான் பார்க்கிறேன், உங்களுக்குப் புரியவில்லை. ஆகவே மேலும் சொல்லுகின்றேன்’’ என்று சொன்னார்.

அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம் :
                யாராவது கூட்டத்தினைக் கூட்டி வைத்து “நீங்கள் எல்லாம் முட்டாள்கள்’’ என்று சொன்னால் விடுவார்களா? அவர் ஒருவர்தான் அப்படிச் சொல்லலாம். அவரைப் பின்பற்றி நான் சொன்னால் கல் வந்து விழும். பெரியார் ஏன் சொல்லுகின்றார்? சொல்லுகின்ற உரிமை அவருக்கு உண்டு என்பதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதயத்தின் மொழி அது; வாயும், மூளையும் கற்பிக்கின்றமொழி அல்ல. அது யாருக்கு வரும்? இந்த மனித சமுதாயத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்கு உந்தித் தழைக்கின்றதோ அவருக்குத்தான் அந்த மொழியே வரும் எழுத்திலும் பேச்சிலும்!
தா.பாண்டியன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை ‘பெரியார் என்னும் ஆளுமை’ எனும் நூல்)
நன்றி : ஜனசக்தி – 29.01.2014


               
       
       


No comments:

Post a Comment