Monday, February 10, 2014

அறிவியல் புரட்சியாளர் சார்லஸ் டார்வின்


        இயற்கை அறிவியலின் ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் டார்வின்  1859 நவம்பர் 2 இல் ‘உயிருனங்களின்  தோற்றம்’ (on the ori-gin of species) என்ற நூலை உடனேயே அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவை கொண்ட பத்திரிக்கைகளும்  இதைக் காழ்ப் புணர்ச்சியுடன் திட்டித் தீர்த்தன. கிருத்துவத் திருச்சபைகள் சாபமிட்டன. அதே சமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாகத் தோன்றியதே தவிர கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்று இவற்றில் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது. மனிதன் விலங்குலகிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டுபிடித்ததானது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞானக் கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.




        மாறுபடும் தன்மை, பரம்பரையாக வரும் பண்புகள், இயற்கைத் தேர்வு ஆகியவைதான் விலங்குலகின் முற்போக்கான பரிணாம வளர்ச்சியின் இயக்குச் சக்திகள் என டார்வின் காட்டினார். வலிமையான அந்தந்த இயற்கை சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்ற வகையினங்கள், உயிருனக் குழுக்கள், தனிபட்ட உயிரினங்கள், இயற்கைப் பரிணாம வளர்ச்சியின் பொருளில் மிகவும் நெளிவு சுழிவானவைகளுந்தான் உயிர் பிழைத்தன. தம் சந்ததிகளை விட்டுச் சென்றன. பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. இந்தப்படியான பரிணாம வளர்ச்சி மெதுவாகவும் அதே நேரத்தில் உறுதியானதாகவும் நிகழ்ந்தது. ஒருவகை உயிரினத்தில் காலங்காலமாக ஏற்பட்ட மாறுதல்களினால் அது புதிய உயிரினமாக மாறியது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதை பிற்போக்காளர்களின் பலத்த கூச்சல்களுக்கிடையில் அறிவுலகம் அதை ஏற்றுக் கொண்டது.

சார்லஸ் டார்வினின் பாட்டனார் எராஸ்மஸ் டார்வின் கேம்பிரிட்ஜ்,எடின்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று மருத்துவரானவரே. அவர் இயற்கை அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய  ‘ஸினோமியா’ (zoonomia) என்ற நூல் பின்னாட்களில் பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டினை முன் வைத்த நூலாகும். அவர் அக்காலத்தில் அடிமைமுறை எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார். பிரான்சில் 1789-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியை, உற்சாகமாக வரவேற்றார். இத்தகைய பின்னணியில் பிறந்த சார்லஸ் டார்வின் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் பாடத்திட்டங்கள் பழங்காலத்தியதாகவே இருந்தது. அது சார்லஸ் டார்வினை ஈர்க்க வில்லை. சிறுவன் டார்வின் இயற்கை சம்மந்தமான விபரங்களை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 

1825-ம் ஆண்டு சார்லஸ் டார்வினை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். சார்லஸ் டார்வினுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வமில்லை. எனவே வேறு கல்வியில் சேர விரும்பினார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அதே எடின்பர்க்  பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞானப் படிப்பில் சேர்ந்தார். இயற்கை விஞ்ஞானத்தில் தமது பரிசோதனை ஆய்வைத் தொடங்கும் வகையில் ‘நியூ ஹேபன்’ என்ற கிராமத்திலிருந்து கடற்கரையோரப் பகுதிகளில் கடல்பிராணிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

டார்வினின் தந்தை அவரை கிருத்தவப் பாதிரி ஆக்க விரும்பினார். கிருத்தவப் பாதிரி ஆகவேண்டுமென்றால் ஏதாவது பல்கலையில் பயின்று பட்டப்படிப்பில் தேறி இருக்க வேண்டும். எனவே டார்வின் மீண்டும் 19-வது வயதில் 1828-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கே ‘வில்லியம் பேலி’ என்பவர் எழுதிய  ‘இயற்கை சார்ந்த மறையியல்’ (Natural Theology) என்ற நூலைப் படித்தார் அதில் பேலி முன்வைக்கும் கண்ணோட்டம் என்னவென்றால் ஒரு கடிகாரத்தை வடிவமைப்பது போன்றே இந்த உலகத்தை ஒருவர் திட்டம் தீட்டிப் படைத்திருக்க வேண்டும். அவர் படைப்பாளர் என்ற கடவுள் என்பதுதான். டார்வின் தனது ஆய்வு நோக்கு உள்ளிட்ட தம்முடைய தனித்தன்மை காரணமாக பேராசிரியர்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார். கிருத்தவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஆடம்ஜெட்ஸ்விக் நார்த்வேல்ஸ் பிராந்தியத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவிருந்தார் நில அமைப்பியல் தலைவர் ஆடம்ஜெஸ்விக்குடம் ஆய்வுப் பயணம் மேற்கொள்ள டார்வினை பேராசிரியர் ஹென்ஸ்லோ பரிந்துரைத்தார். 1830-ம் ஆண்டு ஒருவார கால ஆய்வின்போது டார்வின் மேற்கொண்ட பணிகளும் அவருடைய கண்டுபிடிப்புகளும் அதன் முக்கியத்துவத்தையும் ஜெட்ஸ்விக் மிகவும் பாராட்டினார் பின்னர் தந்தையிடம் கொடுத்தவாக்கின்படி பாதிரியாராகப் பணியாற்ற ஊர் வந்து சேர்ந்தார் ஆனால் ஊர்வந்து சேர்ந்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஊருக்கு அவருடைய அன்பு பேராசிரியர் ஹென்ஸ்லோ கடிதம் எழுதியிருந்தார். “தென் அமெரிக்காவை அளவாய்வு (survey) செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்குக் கேப்டன் பீட்ஸ்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரிய இயற்கை மற்றும் உயிரின ஆராய்ச்சியாளர் தேவைப்படுகிறது. நான் உன்னைப் பரிந்துரைத்துள்ளேன். உன் தகுதிபற்றி சந்தேகமோ, அச்சமோ கொள்ள வேண்டாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்” என எழுதியிருந்தார். பேரார்வம் கொண்ட டார்வின் தனது தந்தையை சமாதானப்படுத்தி பல ஆண்டுகள் நடக்கும், பலநாடுகள் செல்லும் அப்பயணத்தை ஒப்புக்கொண்டார். டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை அடைந்தார். ஹென்ஸ்லோவின் ஆலொசனைப்படி பீட்ஸ்ரோயைச் சந்தித்தார். ஆய்வின் நோக்கத்தை விளக்கினார் பீட்ஸ்ரோய். தென் அமெரிக்காவின் தென் பிராந்திய கடலோரப்பகுதிகளை முழுமையாக அளவாய்வைச் செய்வதும், கடலோரம், அதனை ஒட்டியுள்ள தீவுகள் ஆகியவற்றின் வரைபடம் தயாரிப்பதும் ஆகும். இதற்காக ஹெச்.எம்.எஸ்.பீகிள் என்ற கப்பல் 1831 டிசம்பர் 27 அன்று பிற்பகல் 2 மணிக்கு டோவன்போர்ட் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. டார்வின் கடல் பயணத்தை 22-ம் வயதில் மேற்கொண்டார். அப்போது அவர் மூன்று உலகப் பெருங்கடல்கள் வழியாக அறிவுப் பயணத்தை 4 ஆண்டுகள் 9 மாதங்களில் நடத்தி முடித்தபோது அவரது வயது 27 இந்த இளைஞன் ஒரு முதிர்ந்த ஆய்வாளருக்குரிய சாதனைகளைப் புரிந்திருந்தார். ஆய்வுகளை முடித்து பீகிள் கப்பல் 1836 அக்டோபர் 26 அன்று பிரிட்டனை அடைந்தது. “சார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில் செய்த பயணம் 40 ஆயிரம் மைல்கள் நிலவழிப் பயணம் 2000 மைல்கள் நில அமைப்பியல் மற்றும் தாவரவியல்  குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள். நாட்குறிப்பு 800 பக்கங்கள் எலும்புகள் உலர்ந்த உயிரின மாதிரிகள் 4000 அதேபொருட்கள் சாராயத்தில் பக்குவப்படுத்தப்பட்டது 1500 பயணத்தின் செலவு 1000 பவுண்டுகள் இது மாபெரும் சாதனையல்லவா?




இதற்கிடையில் டார்வின் தனது 5 ஆண்டுகள் பயணத்தின்போது எழுதிய கடிதங்கள், ஆய்வுக் குறிப்புகளை பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவைகளை அவ்வப்பொழுது பத்திரிகைகளில் வெளியிட்டுப் பெரும் புகழ்பெற்றிருந்தார் டார்வின் அறிவியலாரின் கவனம் டார்வின் மேல் பதிந்திருந்தது. தாம் சேகரித்திருந்த 450 உறுப்படிகளை 1837 ஜனவரி அன்று நில அமைப்பியல் அறிவாளர்கள் அமைப்பிடம் ஒப்படைத்தார். அமைப்பின் கவுன்சில் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1877 நவம்பரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவருக்கு  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது. தனது ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து அவற்றின் அடிப்படையில் நூல்களை எழுதிவெளியிட்டார். தென் அமெரிக்காவில் சேகரித்த பொருள்களின்  அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைத் தற்போதைய உயிரினங்களோடு ஒப்பிட்டு அவர் செய்த ஆராய்ச்சி அவரைப் பரிணாம வளர்ச்சி என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன டார்வினிடம் ஏற்பட்ட இந்தக் கருத்துக்கள் பொருள் முதல்வாதத்திலிருந்து விசுவாசமாக இருப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியப்பட்டார். அன்று அவர் தலைமுறையைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் கருத்து முதல்வாதத்தை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். எனவே டார்வினின் பொருள்முதல்வாத முடிவு கார்ல் மார்க்ஸின், ஏங்கல்ஸின் பாராட்டுக்குரியதாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் இருதரப்பினருக்கும் கடிதத் தொடர்புகள் ஏற்பட்டன. குரங்கிலிருந்து மாற்றமடைந்த தொடர்ச்சிதான் மனிதன் என்ற டார்வினின் விளக்கம் அறிவியல் உலகின் பாதையை வெளிச்சமாக்கியது. 1882 ஏப்ரல் 19 மாலை சார்லஸ் டார்வின் காலமானார். அவருடல் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகளின் நினைவிடத்தில் அறிவியல் அறிஞர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க அவர் புகழ் உலகு உள்ளவரை !
(09.02.2014 சார்லஸ் டார்வின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: ஆர்.பாலச்சந்திரன்,
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
 விருதுநகர் துணைத் தலைவர்.
தொடர்புக்கு:9486207060
நன்றி : ஜனசக்தி : 09-02-2014




No comments:

Post a Comment