Friday, November 30, 2012

ஜனநாயகத்தை மென்று விழுங்கும் சாதி

மிகச் சாதாரணமாய் நடந்து முடிந்த
அசுரவேட்டையிது
சாதியின் எரிதழல் கொண்டு நீ
எரியூட்டிய‌ நெருப்பில்
உருசிதைந்து போனது நத்தம் சேரிக்குடிசைகள்
நடமாடும் மனிதர்களைத் தவிர
வேறெதுவும் மிஞ்சிடவில்லை
ஜனநாயகத்திற்கெதிராக எழுதப்பட்ட
உன் வாய்ச்சவுடாலில்
எரிந்து சாம்பலாகிப் போனது
சேரி மக்களின் உடைமையும் வாழ்க்கையும்
எதற்கும் பயன்படாத சாதியை
வெஞ்சினம் மூட்டி
தீயிட்டுக் கொளுத்துவதன் மூலம்
நிலைநிறுத்த முயற்சிக்கிறாய்
உடைமையிழந்தவர்களை நிம்மதியிழந்தவர்களை
தேற்றுவதற்கோ, ஆறுதல் சொல்வதற்கோ
நம்மிடையே யாருமில்லை
எங்கோ நடந்து முடிந்ததாய்
பெருமூச்செறியும் தாழ்த்தப்பட்டோர் ஒருபுறமிருக்க
சாதி கடந்து கைகுலுக்கி தலித்அரசியலை
நிலைநிறுத்திய தலித் அரசியல் கட்சிகள் மறுபுறமிருக்க
இரணங்களின் காயம் வடுக்களாய் மாறி
நம்மீது எச்சிலை உமிழ்கிறது.
எரியூட்டப்பட்ட நெருப்புக்குக் காரணம்
சாதி மறுப்புத் திருமணமென்று நியாயம் பேசுகிறது
ஊடகங்களும் உளவாளிகளும்…
சனநாயகத்தை மென்று விழுங்கும்
சாதி வன்மம் மறந்து,
சாதி ஆதிக்கம் மறந்து.
இதுவரை நடந்தேறிய வன்முறைகளுக்கெல்லாம்
சாதி மறுப்புத் திருமணம் தான் காரணமெனில்
சூளுரையேற்போம்…
இனி நடக்கவிருக்கும் திருமணங்கள்
சாதி மறுப்புத் திருமணங்களாய்
விதைத்தெழுவோம்!!
- வழக்கறிஞர் நீதிமலர்

தமிழினத்திற்குத் தலைகுனிவு -த‌.தே.பொ.க.


தர்மபுரி மாவட்டத்தில் நடந்துள்ள சாதி வெறியாட்டம் தமிழ் இனம் தலைகுனிய வேண்டிய வெட்கக் கேடான நிகழ்வாகும். இது சாதி மோதல் அன்று. ஒரு சாதியில் உள்ள வெறியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இன்னொரு சாதி மக்கள் மீது நடத்திய அட்டூழியமும், அழிவு வெறியாட்டமும் ஆகும்.
நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள் பெட்ரோல் குண்டு வீச்சாலும், தீ வைப்பாலும், கடப்பாறை போன்ற கருவிகளால் தாக்கப்பட்டதாலும் வெந்தும், தகர்ந்தும் நிர்மூலமாகக் கிடந்ததை நேரில் பார்த்து நெஞ்சு பதைத்த பின் இவ்வாறு எழுதுகிறோம்.
இருபத்தோராம் நூற்றாண்டில் நம் மண்ணில் இப்படியுமா நடக்கும்? இதைக் காட்டுமிராண்டித்தனம் என்றால் காட்டுமிராண்டிகளைக் கொச்சைப்படுத்தியதாகும். அத்தனை கயமைத்தனம், வன்மம், பழிவாங்க வேண்டும் என்ற வெறி அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இத்தனை வெறியாட்டம் நடத்தும் அளவுக்கு அந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், மேல் சாதிக்காரர்களுக்கு எதிராக என்ன தீங்கு செய்தார்கள்? எதுவும் இல்லை.
நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட(பறையர்) வகுப்பு இளைஞர் இளவரசன் பக்கத்து ஊரான செல்லன்கொட்டாய் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த நாகராசு மகள் திவ்வியாவைக் காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். நாகராசு, தன்மகளை இளவரசன் கடத்திக் கொண்டு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
காவல்துறையினர் மணமக்கள் இருவரையும் விசாரித்து உண்மை நிலை அறிந்து கொண்டனர். இது கடத்தல் இல்லை, உரிய வயது வந்த இருவர் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களைப் பிரிக்க சட்டத்தில் இடமில்லை என்றனர்.
திவ்வியாவின் தந்தை நாகராசு அதற்குமேல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. அவர் வகுப்பைச் சேர்ந்த தீவிர சாதிவாதிகள், அவரை நச்சரித்து, மீண்டும் மீண்டும் தூண்டி, எப்படியாவது பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கடைசியாக 2012 நவம்பர் 8 அன்று தொப்பூரில் இரு தரப்பினரும் சந்தித்துப் பஞ்சாயத்தாகப் பேசித் தீர்வு காண்பது என்று முடிவானது. ஒரு தரப்புக்கு ஏழு பேர் என்று இரு தரப்பினரும் பேசினர். “தன் கணவனைப் பிரிந்து வர முடியாது” என்று திவ்வியா உறுதியாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் சொந்த ஊரில் சொந்த சாதியினர்க்கு என்ன விடை சொல்வது என்று குழம்புகிறார் நாகராசு. தூக்கு மாட்டிக் கொள்கிறார். ஒருவகையில் அவரைத் தற்கொலை நோக்கித் தூண்டியவர்கள் சொந்த சாதியினர்தான் என்றே கூறலாம்.
அதன்பிறகு அவர் பிணத்தை சாலையில் போட்டு, சாதிக்காரர்களுக்கு வெறியேற்றி ஆயிரக்கணக் கானோரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சூறையாடவும் தீக்கீரையாக்கவும் கிளம்பினர். பெட்ரோல் குண்டுகள் வீசினர். தீ வைத்தனர். கடப்பாறை போன்ற கருவிகளால் வீடுகளை இடித்துத் தகர்த்தனர். பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். கொள்ளையடிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றைக் குறிபார்த்து எரித்துள்ளனர்.
சிங்களப் படையினர் ஈழத்தமிழர் கிராமங்களைக் கொளுத்திச் சூறையாடியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அங்கு பகையினத்தைச் சேர்ந்த வெறியர்கள், தமிழர்கள் குடியிருப்புகளைத் தகர்த்தனர். இங்கோ ஒரே தமிழினத்தைச் சேர்ந்த ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினர் குடியிருப்புகளைத் தீவைத்துச் சூறையாடியுள்ளனர். தமிழினத்திற்கு இதைவிட மானக்கேடு என்ன உள்ளது?
தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், வன்னியர் வகுப்பினரை இழிவாகப் பேசி ஆத்திரமூட்டினார்கள்; அதனால் ஏற்பட்ட திடீர் ஆவேசத்தால், இப்படிப்பட்ட தீ வைப்புச் சூறையாடலில் ஈடுபட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி மூன்றும் வெவ்வேறு கிராமங்கள். நத்தத்திற்கும், கொண்டம்பட்டிக்கும் இடையே மூன்றரைக் கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.
ஏற்கெனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த பொறாமை கொண்டோர், இந்தக் கலப்புத் திருமணத்தை சாக்காக வைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தைத் தாக்கிக் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் பலர் அரசுப்பணிகளில் இருக்கின்றனர். ஓரளவு வசதியுடன் உள்ளனர். படித்துள்ளனர். இவ்வளர்ச்சி அப் பொறாமைக்காரர்களின் கண்ணை உறுத்தியுள்ளது. தங்களுக்குச் சமமாக அவர்களும் வந்து விடுவார்களோ என்று கவலைப்பட்டிருக்கிறார்கள்.
சாதியைப் பயன்படுத்தி இந்த அழிவு வேலையில் ஈடுபட்ட அரம்பத்தனத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட நாசவேலை இது. இதில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தளைப்படுத்த வேண்டும்.
தங்கள் சாதிப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்யும் பிற சாதியினரை வெட்ட வேண்டும் குத்த வேண்டும் என்று பேசும் பிற்படுத்தப்பட்ட சாதி சங்கத் தலைவர்கள் மீது நடவடிக்கை தேவை.
ஒரு மாதத்திற்கு மேல் இக்கலப்புத் திருமணத்தால் நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் சாதிப் பதற்றம் இருப்பது காவல்துறைக்குத் தெரியும். காவலர்கள் சிலரையும் அங்குக் காவலுக்கு நிறுத்தியுள்ளார்கள். இவ்வாறு முன்தகவல்கள் இருந்தாலும் மூன்றரை மணி நேரம் இந்த அரம்பத்தனம் அரங்கேறும் போது, கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினரை உடனடியாக அனுப்பி அதைத் தடுக்கவில்லை மேலதிகாரிகள்.
தர்மபுரியிலிருந்து 10 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். காவல்துறை உயரதிகாரிகள் கடமை தவறியது ஏன்? அலட்சியமா? கெட்ட உள்நோக்கமா? விடை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு.
பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அனைத்து முனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் ஆய்வறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழக அரசு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், புதுவீடுகள் கட்டித் தர வேண்டும். எல்லாப் பொருள்களையும் இழந்து நிற்கும் மக்களுக்கு குடும்பச் செலவுகளுக்காக நிதி வழங்க வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே குருதி என்ற சமத்துவப் பண்பாடு வளர வேண்டும். தமிழ்த்தேசியம் தமிழின உரிமைகளை மீட்கப் போராடும் அதே வேளை, தமிழினத்திற்குள் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை முறியடிக்கவும் போராடும்.
நினைவுநாள் படுகொலைகள்
ஈகி இமானுவேல் சேகரன் (செப்டம்பர் 11) நினைவு நாளும், முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளும் (அக்டோபர் 30) ஒவ்வொரு ஆண்டும் பதற்றத்தோடுதான் நடக்கின்றன. சில ஆண்டுகளில் படுகொலைகளும் சேர்ந்து கொள்கின்றன.
கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு இருநாள் முன்னதாக பழனிக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவனை அடித்துக் கொன்றனர் மேல்சாதி வெறியர்கள்.
இவ்வாண்டு, முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளை ஒட்டித் தேவர் வகுப்பினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளில் பசும்பொன் கிராமத்தில், அவரது நினைவிடத்திற்குச் செல்வோர் எந்தெந்தப் பாதைகளில் போக வேண்டும், வரவேண்டும் என்று காவல்துறையினர் தடம் வகுத்துள்ளனர். அப்பாதையில் செல்லாமல் பரமக்குடி பொன்னையாபுரம் வழியாகவும், பாம்புவிழுந்தான் கிராமம் வழியாகவும் சென்றவர்களில் மூன்று பேர் அப்பகுதியில் வசிக்கும் தேவேந்திரர் வகுப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஒரு டாட்டா சுமோ ஊர்தியில் பசும்பொன் சென்று திரும்பியவர்கள் மீது தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை அருகே, பெட்ரோல் குண்டு வீசினர். அதில், படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் இதுவரை ஆறு பேர் இறந்துபோயினர். இவை அனைத்தும் கொடுமையான பச்சைப் படுகொலைகள் ஆகும். கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தலைவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்ற பெயரில் இருவகுப்பினரும் தங்கள் தங்கள் சாதி வலிமையைக் காட்டிக் கொள்ளவே முனைகின்றனர். இவ்விரு தலைவர்களின் நினைவு நாளுக்கு அங்கு செல்லும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த சாதி வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே செல் கின்றனர். அதனால்தான், அண்ணா, பெரியார், காமராசர் நினைவிடங்களைவிட மேற்கண்ட இருவரின் நினைவிடங்கள் “புகழ்” பெற்று விளங்குகின்றன.
தாங்கள் போற்றும் தலைவர்களை சாதி மோதலுக்குரிய சின்னங்களாக மாற்றுவது அத்தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை அன்று அவமரியாதை.
 நன்றி :http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22155:2012-11-30-10-04-09&catid=1541:162012&Itemid=786

Monday, November 19, 2012

துணங்கைக் கூத்து - நூல் அறிமுகம்

(நவம்பர் 18,2012 ஜனசக்திில் வெளியான நூல் அறிமுகம் பகுதியில்)
     இந்நூல் உலகியலை நடப்பியலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. இலங்கையில் போர்களத்தில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளபோது,பிணங்களை மட்டுமல்லாது பேய்களையும்  பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. பிணங்களையும் பேய்களையும் விடாத பேய்பயல்கள் மக்களை என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யத் தோன்றுகிறது.கலிங்கத்துப் பரணியில் காளியும் கூளியும் பிண்ந்தின்னக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் கதையாசிரியர்.
    
     சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போரிட்ட ஒரு வீரனின் புதைவிடத்தில் சடங்குகள் நடத்துவதற்குப் பிராமணப் புரோகிதரின்  எதிர் பார்த்திருப்பது காலத்தின் கோலத்தைக் காட்டுவதாகும். ஒரு காலத்தில் ஆரிய ஆதிக்கம், சமஸ்கிருத மயமாக்கம் என்றெல்லாம் அபயக்குரல் எழுப்பியதுடன்  இந்தி எதிர்ப்புப் போர் நடத்திய தமிழகத்தில் அமைதியாக சமஸ்கிருத மயமாக்கம் பெயர் சூட்டும் முறையில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாமாகவே முன்வந்து வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம்.
     பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று அலைந்துகொண்டிருக்கும் இளைங்கர்களின் வெளிநாட்டு வேலைக்கனவு எவ்வளவு கொடுமையானது என்பதை ஒரு கதை விளக்குகிறது. காய்ச்சலில் கிடந்தால் வெந்நீர் வெதுப்பித் தருவதற்குக் கூட ஆள் கிடையாது. பணம் மட்டும் இருந்து எதற்கு என்று வினாத் தொடுக்கிறது ஒரு கதை. நம் நாட்டில் கிடைக்கும் சம்பளத்துடன் வெளிநாட்டில் கிடைப்பதை ஒப்பிடும்போது அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால் அந்த நாட்டில் ஒருவனுக்கு கொடுக்கப்படுவதை ஒப்பிடாமல் இது மிகக் குறைவு என்று தெரியும். அப்படித் தெரிய வரும்போது மனம் உடைந்துபோகிறது.
     காதல், ஆன்மீகம், மாயம், அதிவிரைவான முன்னேற்றம், கனவுப் பாட்டுடன் ஒரேநாளில் உச்ச நிலைக்குச் செல்லுதல் இப்படிச் செல்லும் இப்போதைய தமிழகக் கதைக்களகத்தில் உண்மையையும் நடப்பையும் மக்களறிய எடுத்தியம்பியுள்ளது இந்நூல்.
     காதல் கதையிலும் ஒரு மென்மையான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மனத்தில் உள்ளதை வெளியில் சொல்லிவிட்டால் உறவு கெட்டுவிடுமோ என்று எண்ணும் வகையைச் சேர்ந்தது.
     வெயிலில் அலையும்போதுதான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள். அதுபோல ஒருவருக்கு உணவு கொடுத்து உடை துவைத்து, உடல் நலம் பேணி எப்படியெல்லாம் அவர் மனைவி பணிவிடையாற்றுகிறாள் என்பது ஒரு கதையில் விளக்கப்பட்டுள்ளது. அவள் இறந்தபோதுதான் அருமை அவருக்குப் புலப்படுகிறது.
     இலக்கிய நடையில் சில கதைகள் மிளிர்கின்றன. வட்டார நடையில் சில கதைகள் விளங்குகின்றன. எளிய இனிய சொற்களில் இக்காலத்து மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியவற்றை எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். யார் மனமும் புண்படாதபடி மனிதர்களின் உணர்வுகளை நிகழ்வுகளாலும் எண்ணங்களாலும் விவரித்துள்ளார். 
- சே. பச்சைமால் கண்ணன்

Thursday, October 25, 2012

முதல் இந்திய விடுதலைப் போர் எது?

முதல் இந்திய விடுதலைப் போர் எது? 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போரே "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று வடநாட்டரால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் மதங்களின் சாயலோடு வெளிப்பட்ட போர். ஆனால் இந்தப் போருக்கு 57 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மத பேதங்களைக் கடந்து, உழைக்கும் மக்களை பெரும் திரளாக அணிதிரட்டி வெள்ளையர் படைக்கு எதிராக போரிட்டவர்கள் ம
ருது பாண்டியர்கள் ஆவார். தூந்தாஜி வாக் (கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), ஆகியோரோடு இணைந்து "ஜம்புத்தீவு -தென்பகுதி- கூட்டமைப்பை" உருவாக்கி வெள்ளையருக்கு அதிக உயிர் சேதத்தை உருவாக்கிய மன்னர்கள் மருதிருவர் என்று ஜேம்ஸ் வெல்ஷ் என்பவன் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளான். சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "ஜம்புத்தீவு புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற வெள்ளையர் அரசு சின்னமருது உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் 500 பேரை கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலேற்றியது. 1800- களில் இதுபோன்றதொரு வரலாற்றுப் பதிவு வடநாட்டில் கிடையவே கிடையாது. வீரஞ்செறிந்த மருதிருவர் நடத்திய தமிழர் போராட்டத்தை தில்லியரசு திட்டமிட்டு மூடி மறைத்து விட்டது. இந்திய தேசியக்கட்சித் தலைமைகள் வடநாட்டார் கையில் இருப்பதால் 1857- ஆம் ஆண்டுப் புரட்சியை வெட்கமின்றி "முதல்ப் புரட்சி" யென்று முன்மொழிகின்றன. திராவிடக்கட்சிகளும், சாதிய இயக்கங்களும் இந்திய தேசியம் வாந்தியெடுத்ததையே இப்போதும் வாங்கி விழுங்குகின்றன. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியைக் கூட "தென்னிந்திய புரட்சி" என்று சொல்லும் பாரதமாதா பஜனைகள் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை "வட இந்தியப் புரட்சி" என்று சொல்வது தானே பொருத்தமானது. வரலாறு என்பது கங்கை கரையிலிருந்து தொடங்கக் கூடாது. காவிரிக் கரையிலிருந்து தொடங்க வேண்டும் என்பார் அறிஞர் அண்ணா. திருத்தப் பட்ட வரலாற்றை தமிழர்களே! திருத்தியெழுதுவோம்! ||மருதுபாண்டியர் தூக்கிலிட்ட நாள்|| *24.10.1801*

Monday, September 17, 2012

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!
(முழுமையாக படிக்கவும்!!)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவுதகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

Tuesday, September 4, 2012

தண்ணீர்,,,,தாகம் தீர்க்குமா?


தண்ணீர்,,,,

---------------------
பொலிவியா தரும் படிப்பினை 
 ---------------------------------------------------------------                                                                                                                                                   -தே. இலட்சுமணன்
தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், மத்திய அரசு தன் பொறுப்பு அல்ல என்று தட் டிக்கழித்துவிடவும் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரத் தயாராகி விட்டது. இதுபற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 
பொலிவிய ஏரி ஒன்றின் அழகு.



தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. உயிர் வாழ்வதற்கான ஆதாரம் அது. அரசு, மனிதர்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டியது, அதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப் படை கடமை. ஆனால் இப்போதைய மத்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் காரண மாக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட் டத்தை தனியார் கையில் தாரைவார்க்க ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சதி நிறை வேறினால், அடுத்து இயற்கை தந்த வரமான காற்றையும் ஒரு பண்டம் என்று கூறி அதன் மீதும் தனியார் கம்பெனிகள் பாத்தியதைத் கொண்டாட தனியாருக்கு சொந்தமாகச் சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மக்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகப் பயன்படும் வகையில் இயற்கை தந்துள்ள வளங்களை - குறிப்பாகத் தண்ணீரை சந்தைச் சரக்காக ஆக்க ஐந் தாண்டுகளுக்கு முன்னாலேயே உலக வங்கி ஆணையிட்டுள்ளதைத்தான் இந்திய அரசும் அகமகிழ்வோடு அமல்படுத்திட விழைகிறது. இது இயற்கை நீதிக்கே எதிரானது.
 
டிடிகாகா வில்மூடி ஏரி[பொலிவியா]


மாளிகையில் வாழ முடியாத மனிதன் மண்குடிசையில் வாழ முடியும், உடல் நலம் கெட்டவன் கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் பச்சை இலை மருந்தையாவது தின்று நோய் குண மாக்க முடியும். ஆனால் வறியவனிடமிருந்து குடிக்கும் தண்ணீரையும் பறித்து விட்டால், தண்ணீருக்கு மாற்றாக அவன் எதை நாடமுடியும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசை மாற் றுவதைத் தவிர மக்களுக்கு வேறு மாற்றே இல்லை. இதற்கு உதாரணம், நம் முன்பாக பொலிவியா நாட்டில் நடந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல பாடமாக உள்ளன.

பொலிவியாவில் எல்லா பொது நிறுவனங் களும், மின்சாரம், ஆகாயப் போக்குவரத்து, சுரங்கம், காடுகளில் கிடைக்கும் எல்லா வளங்களும் மற்றும் செய்தித் தொடர்புகள், ஹைட்ரோ கார்பன் இப்படி - அனைத்தும் முழுக்க, முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டன. அந்த நாட்டில் மிச்சமிருந்த தண்ணீர் ஒன்று தான் தனியார்மயமாகாமல் இருந்தது. அதைப் பொறுக்காத உலக வங்கி தண்ணீரையும், தனி யாருக்குத் தாரை வார்க்க பொலிவியா அரசை நிர்ப்பந்தித்தது. ஆசை வார்த்தைகள் பல வற்றை அள்ளி வீசியது. பொலிவியா அரசும் மயங்கி பேரம் பேசி ஒப்பியது. பொலிவியாவின் நீர் வளங்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்து விட்டால், பொலிவியா அரசு உலக வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் 600 மில்லியன் டாலரை ரத்து செய்து விடுவதாக தாஜா செய்தது. அர சும் ஏற்றது. குழியில் வீழ்ந்தது. ஆம். ஆண்டு கள் பலவாக, பல தலைமுறைகளாக சமூகத் தின் ஆளுமையின் கீழ் சொந்தம் கொண்டா டப்பட்ட நீர் “சரக்கு - பண்டம்” என நாமகரணம் சூட்டப்பட்டு, தனியார் கம்பெனிகளின் ஆளு கையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது.மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு ஜீவாதாரத் தோடு பொலிவியா எதேச்சதிகார அரசு விபரீத விளையாட்டைத் துவக்கி விட்டது. குடிநீர் மட்டுமல்ல, விவசாயத்துக்குப் பயன்படும் பாசன நீரும் அளவின் அடிப்படையில் விலைக்கு விற்கப்பட்டது.

மனித வாழ்க்கையோடு இணைந்து இருந்த தண்ணீர் இப்போது அந்நியப்படுத்தப் பட்டு விட்டது. பொலிவியாவின் ஜனாதிபதி யாக இருந்த ஒரு சர்வாதிகாரி - ‘யூகோ பேன் சர்’ என்ற தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியவர் தான் இந்தக் கொடுமையைச் செய்தவர்.
 


லண்டனை இருப்பிடமாகக் கொண்ட அந்நிய கம்பெனிகளான இண்டர்நேஷனல் வாட்டர் லிமிடெட், அதோடு இணைந்து செயல்படும் இத்தாலியன் யுடிலிட்டி எடிசன் மேலும் அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட பாச்டட் எண்டர்பிரைசஸ் - பொலி வியாவுக்கு சொந்தமான தண்ணீரை மொத்த மாக குத்தகைக்கு எடுத்து விட்டன. எடுத்த எடுப்பில் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மாதம் உணவுக்கு ஆகும் செலவை விட தண்ணீருக்கு ஆகும் செலவு அதிகரித்தது. நீரின் விலை திடீரென 35 சத விகிதம் ஏற்றப்பட்டு விட்டது.

உதாரணமாக ஒரு குடும்பம் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வந் ததால், வருமானத்தில் 10 நாளைக்கு உண வுக்குச் செலவாகும் தொகைக்கு ஈடாக தண் ணீருக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. சென்ற மாத செலவை விட இந்த மாதச் செலவு 300 சதவிகிதம் உயர்ந்து விட்டது.
 


இந்தக் கொடுமையை ஏழை, எளிய மக் கள் எப்படி சமாளிக்க முடியும்? விவசாயி களின் வேதனை சொல்லி மாளாது. எனவே, எரிமலை வெடித்தது.

2000 ஜனவரி மாதம் கொதித்தெழுந்த மக் கள், வேலைநிறுத்தம் செய்தார்கள். சாலை கள் மறிக்கப்பட்டன. நான்கு நாட்கள் கோச்ச பாம்பினாஸ் நகரம் ஸ்தம்பித்தது. வேலை நிறுத்தத்தின் வீச்சு, மேலும் சாலை மறியல் அரசை அதிர வைத்தது. உடனே தண்ணீர் விலையைக் குறைப்பதாக அரசு செய்தி வெளி யிட்டது. ஆனால் வாக்குறுதி அமல்படுத்தப் படவில்லை.

மறுபடியும் பிப்ரவரி 4ம் தேதி ஆயிரக் கணக்கான மாக்கள் திரண்டு அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். இதைப் பொறுக்க மாட்டாத சர்வாதிகாரி பேன்சர் போலீசை ஏவினார். இரண்டு நாட்கள் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் மக்களில் 175 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு பேர் பார்வை இழந்தனர்.

கிராமப்புற மக்கள் எழுப்பிய சாலை தடை களால் நகரங்களுக்குப் போய்ச் சேர வேண் டிய உணவுப்பொருட்கள் தடுக்கப்பட்டன. போக்குவரத்து முற்றாக முடங்கின. சினம் கொண்ட மக்கள் தடி கொண்டு போலீசை தாக்கினர். கற்களையும் சரமாரியாக வீசினர். போராட்ட வீச்சு கொழுந்து விட்டு எரியவே ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

மக்களும் போராட்டக்குழுவை உரு வாக்கி விட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார விற்பன்னர்கள், வழக்கறிஞர் கள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் சங் கங்கள், இளைஞர்கள், பண்ணை விவசாயி கள், கோகோ பயிரீட்டாளர்கள் என பெரிய கூட்டணி உருவாகிவிட்டது.
 


உருவாகி விட்ட பலமான கூட்டணியை முறியடிக்க ஜனாதிபதி ராணுவ சட்டத்தைப் பிரகடனப் படுத்தினார். விளைவு, இது உள் நாட்டுப்போராக மாறி விட்டது. இதற்கு வாட் டர் வார் எனப்பெயர் சூட்டப்பட்டது. இந்தச் சொல் உலகம் முழுவதும் ஒலித்தது.

ராணுவ சட்டம் அமலுக்கு வந்து விட்ட தால் எல்லா சிவில் உரிமைகளும் ரத்தாகி விட்டன. வீதியில் நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட் டது. வானொலி நிலையம் ராணுவ அதிகாரத் தின் கீழ் வந்து விட்டது. பத்திரிகை நிருபர்கள் கூட கைது செய்யப்பட்டார்கள். வீடுகள் சோதனையிடப்பட்டன.

அவசரகால அட்டூழியங்களை அட்டி யின்றி அமல்படுத்திட அரசு மூன்று பேர்களைக் கொண்ட ஓர் அதிகாரமையத்தை உருவாக்கியது.

ஜனாதிபதி யுகோ பேன்சர், ஆளுநர் (இவர் போலீஸ் தலைமை அதிகாரி, ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டவர்), மேயர் மேன்பிரட் ரோயல் வில்லா. இந்த மூவரின் பூர்வீக வர லாறு என்பது ஜார்ஜீயாவில் உள்ள அமெரிக்க கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த நிறுவனம் வெளிநாட்டு ராணுவ அதி காரிகளுக்கு சதி செய்து கொலை செய்வது எப்படி, சதி செய்து கலவரங்களை உருவாக்கு வது எப்படி என பயிற்சி கொடுக்கும் இடமாகும்.
 


மனிதநேயமற்ற இந்த மூவர் கொண்ட அதிகார மையத்தாலோ, ராணுவத்தாலோ, போலீஸ் அடக்குமுறையாலோ மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

செப்டம்பர் 2000ம் ஆண்டில் பொலி வியாவின் மற்றொரு நகரமான ‘லா பாஸ்’ என்ற இடத்திலும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 20 நாட்கள் முற்றுகைப் போராட் டம் நடந்தது. அரசாங்க அடக்குமுறையால் அங்கும் போராட்டத்தை அடக்கவே முடிய வில்லை. போராட்டத்தால் - சிவில் வார் நடந் ததின் விளைவால் அரசுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டது. மக்கள் நடத்திய சாலை முற்று கைப் போராட்டத்தில் நெடுஞ்சாலைகள் சேதாரம் செய்யப்பட்டன. அதனால் ஏற்பட்ட இழப்பு 90 மில்லியன் டாலர். விற்பனைக்கான பொருள்கள் போக்குவரத்து இன்றி தேங்கி விட்ட தால் ஏற்பட்ட நஷ்டம் 70 மில்லியன் டாலர்.

உலக வங்கி இயக்குநர் தண்ணீர் யுத்தம் பற்றி எதிர்த்து குரல் கொடுக்கிறார், சர்வதேச நிதி நிறுவன இயக்குநர் கர்ஜிக்கிறார். அத னால் எந்தப்பயனும் ஏற்படவில்லை. 2000ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தண்ணீர் யுத்தத்தின் வீச்சால் ஒப்பந்தம் நான்கு மாதத் திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. ஆட் சியை பணியவைத்துவிட்டது. அந்நிய நாட்டு கம்பெனிகளுடன் போட்ட ஒப்பந்த ஷரத் துக் களை அரசு ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
 


அந்நிய நாட்டு கம்பெனிகள் கடையை மூடிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. வங்கியில் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை மொத்தமாக சுற்றிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. குறிப்பாக அமெரிக்க கம் பெனி பாச்டட் பொலிவிய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1,50,000 டாலரை பட்டுவாடா செய்யாமலேயே பறந்து போய் விட்டது. மாறாக இந்த கம்பெனி தனக்கு நஷ்ட ஈடாக 12 மில்லியன் டாலர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. நஷ்ட ஈடாவது, மண்ணாவது, அடித்த கொள்ளை போதாதா? ஒரு வாய் தண்ணீருக்கும் காசு கேட்ட கம் பெனியை ஓட ஓட விரட்டி வெளியேற்றியதும் ஒன்றுதிரண்ட மக்கள் எழுச்சியே. அமெரிக் காவிற்கு தாசானு தாசானாக நடந்து கொண்ட பொலிவியாவின் சர்வாதிகாரியை பணிய வைத்ததும் மக்கள் எழுச்சியே. நடந்த போராட் டமோ 7 நாட்கள்தான். இது ஓர் அற்புதம், அதி சயம். அடுத்து அந்த மக்கள் தண்ணீர் யுத்தத் தில் கண்டு கொண்ட மற்றொரு அனுபவம் -

‘நாங்கள் பெற்ற இந்த வெற்றி உறுதிப்பட வேண்டுமென்றால், தாராளமயத்தை, தனியார் மயத்தை அமல்படுத்தும் ஆட்சியை மாற்ற வேண்டும், இந்த நாசகர கொள்கையை எதிர்க்கும் ஒரு மற்றொரு ஆட்சியை உரு வாக்கிட வேண்டும். இதில் நாங்கள் தெளி வாக உள்ளோம்’ என்றார்கள்.

ஆம், ஆட்சி மாற்றப்பட்டது.அங்கு இடது சாரி ஆட்சி பீடம் ஏறியுள்ளது.

பொலிவியா, இந்திய மக்களுக்கு தெரி விக்கும் படிப்பினையும் இதுதான்.
இது தண்ணீரை வைத்து அரசியல் நடத்த தயாராகும் காங்கிரசுக்கும் நல்ல படிப்பினையைத்தரும்.
                                                                                                                                                        கட்டுரை உதவி:நன்றி;தீக்கதிர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: http://suransukumaran.blogspot.in/2012/02/blog-post_27.html

Wednesday, August 29, 2012

கார்ல் மார்க்ஸின் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்

ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்
(கார்ல் மார்க்ஸ்)
1
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் உட்பட இதுவரை இருந்துவந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தின் பிரதானமான குறைபாடு இதுதான்: பொருள் (Gegentand), எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருளின் (Objekt) வடிவம் அல்லது ஆழ்சிந்தனையின் (Anschauung) வடிவமாக மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மனிதப் புலனுணர்வுச் செயல்பாடு அல்லது நடைமுறை என்று கொள்ளப்படவில்லை. இது அகநிலையானது இல்லை. எனவே பொருள்முதல்வாதத்துக்கு எதிராக, வேறுபட்டதாகப் பொருள்முதல்வாதத்தின் செயலாக்கமுள்ள பகுதியைக் கருத்துமுதல்வாதம் வளர்க்க நேரிட்டது, ஆனால் அருவமாக (abstractly) மட்டுமே. ஏனெனில், உண்மையில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலனுணர்வுள்ள செயல்பாட்டினை உள்ளபடியே அறியாது. சிந்தனைப் புறப்பொருள்களிலிருந்து (thought objects) உண்மையிலேயே வேறுபடுத்தப்பட்ட புலனுணர்வுள்ள புறப்பொருட்களை (sensuous objects) ஃபாயர்பாக் விரும்புகிறார். ஆனால் அவர் மனிதச் செயல்பாட்டையே புறநிலைச் செயல்பாடாக (obective activity) கருத்தில் கொள்ளவில்லை. எனவே, கிறிஸ்துவ மதத்தின் சாரம் (Essence of Christianity) என்னும் நூலில், கோட்பாட்டு மனப்போக்கை (theoritical attitude) மட்டுமே மெய்யான மனித மனப்போக்காகக் (human attitude) கருதுகிறார். நடைமுறை (practice) என்பது அதன் அசிங்கமான–யூதத் தோற்ற வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, “புரட்சிகரமான” செயல்பாடு, “நடைமுறை–முக்கியத்துவச்” செயல்பாடு என்பனவற்றின் முக்கியத்துவத்தை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
2
புறநிலை உண்மை (objective truth) என்பது மனித சிந்தனையின் பண்புக்கூறா என்னும் பிரச்சினை, கோட்பாடு சார்ந்த பிரச்சினையல்ல (question of theory), அது ஒரு ,நடைமுறைப் பிரச்சினை (practical question) ஆகும். நடைமுறையில் மனிதன் தன்னுடைய சிந்தனையின் உண்மையை – அதாவது, அதன் எதார்த்தத்தையும் ஆற்றலையும், அதன் இப்பக்கத்தன்மையையும் (this-sidedness) – நிரூபிக்க வேண்டும். நடைமுறையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிந்தனையின் எதார்த்தத் தன்மை அல்லது எதார்த்தமற்ற தன்மை பற்றிய விவாதம் முற்றிலும் ஓர் ஏட்டறிவுவாதப் பிரச்சினை (scholastic question) ஆகும்.
3
சூழ்நிலைமைகள், வளர்ப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படுபவர்கள் மனிதர்கள். எனவே, [பல்வேறு வகையாக] மாறுபடும் மனிதர்கள் வேறுபட்ட சூழ்நிலைமைகளாலும் மாறுபட்ட வளர்ப்பு முறையாலும் உருவாக்கப்பட்டவர்களாவர் என்னும் பொருள்முதல்வாதப் போதனை, மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் தவிர்க்க முடியாதவாறு வந்து சேர்கிறது. அவ்விரண்டு பகுதிகளில் ஒன்று சமுதாயத்துக்கு மேம்பட்டதாக உள்ளது. (எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவன் நூலில்).சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.
4
உலகத்தை மத வழிப்பட்ட கற்பனை உலகம், எதார்த்தமான உலகம் என இரண்டுபடுத்தலை (duplicate) மத ரீதியான சுய–அந்நியமாக்கம் (self-alienation) என்னும் உண்மையிலிருந்து ஃபாயர்பாக் தொடங்குகிறார். அவருடைய பணி, மத வழிப்பட்ட உலகத்தை அதன் மதச்சார்பற்ற அடிப்படைக்குள் கரைத்து விடுவதிலே அடங்கியுள்ளது. இப்பணியை முடித்தபின், பிரதானமான விஷயம் இனிமேல்தான் செய்யப்பட வேண்டியுள்ளது என்னும் உண்மையை அவர் பார்க்கத் தவறுகிறார். மதச்சார்பற்ற அடித்தளம் தன்னிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, ஒரு சுதந்திரமான மண்டலமாக மேகங்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்னும் உண்மையை, இந்த மதச்சார்பற்ற அடிப்படையின் சுய–பிளவையும் சுய–முரண்பாட்டுத் தன்மையையும் வைத்து மட்டுமே உண்மையில் விளக்க வேண்டும். ஆகவே, பின்னதை முதலில் அதன் முரண்பாட்டில் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் அந்த முரண்பாட்டை அகற்றுவதன் மூலமாக நடைமுறையில் அதைப் புரட்சிமயமாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பூவுலகைச் சேர்ந்த குடும்பமே புனிதக் குடும்பத்தின் இரகசியம் எனக் கண்டறிந்தவுடன், முன்னதைக் கோட்பாட்டு ரீதியாக விமர்சிக்க வேண்டும், நடைமுறையில் புரட்சிமயமாக்க வேண்டும்.
5
ஃபாயர்பாக் அருவமான சிந்தனையுடன் (abstract thinking) திருப்தியடையாமல் புலனுணர்வுள்ள ஆழ்சிந்தனைக்கு (sensuous contemplation) வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் புலனுணர்வை நடைமுறை ரீதியான (practical), மனிதப்–புலனுணர்வுச் செயல்பாடாக (human-sensuous activity) அவர் கருதவில்லை.
6
ஃபாயர்பாக் மதச் சாராம்சத்தை மனித சாராம்சமாக முடிவு செய்கிறார். ஆனால் மனித சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரிலும் உள்ளார்ந்து இருக்கின்ற அருவமான விஷயம் அல்ல. அதன் எதார்த்த நிலையில் அது சமுதாய உறவுகளின் கூட்டுத் தொகுப்பே ஆகும். இந்த உண்மையான சாராம்சத்தைப் பற்றிய விமர்சனத்துக்குள் புகாத ஃபாயர்பாக் அதன் விளைவாக: (1) மத உணர்ச்சியை (religious sentiment) வரலாற்று நிகழ்வுப்போக்கிலிருந்து பிரித்தெடுக்கவும், அதனைத் தன்னிலையான ஒன்றாக நிலைப்படுத்தவும், ஓர் அருவமான – தனிமைப்படுத்தப்பட்ட (isolated) – மனிதத் தனிநபரை முன்அனுமானித்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார். (2) ஆகவே, அவரைப் பொறுத்தவரை மனித சாராம்சத்தை ஓர் “இனம்” (“genus”), பல தனிநபர்களை வெறுமனே இயற்கை ரீதியாக ஒன்றுபடுத்துகிற ஓர் அகநிலையான, ஊமையான பொதுநிலை என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
7
அதன் தொடர்ச்சியாக, “மத உணர்ச்சி” (“religious sentiment”) என்பதே ஒரு சமூக உற்பத்திப் பொருள் (social product) என்பதையும், அவர் பகுத்தாயும் தனிநபர் (abstract individual) எதார்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வடிவத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஃபாயர்பாக் பார்க்கவில்லை.
8
சமுதாய வாழ்க்கை என்பது சாராம்சமாக நடைமுறை ரீதியானது. கோட்பாட்டினைத் தவறாக மாயாவாதத்துக்கு (mysticism) இட்டுச்செல்லும் மர்மங்கள் (mysteries) அனைத்தும், தம்முடைய பகுத்தறிவு பூர்வமான தீர்வினை, மனித நடைமுறையிலும், இந்த நடைமுறை பற்றிய புரிதலிலும் கண்டு கொள்கின்றன.
9
ஆழ்சிந்தனைப் பொருள்முதல்வாதம் (contemplative materialism), அதாவது, புலனுணர்வை நடைமுறைச் செயல்பாடாகப் புரிந்து கொள்ளாத பொருள்முதல்வாதம் எட்டிய மிக உயர்ந்த கருத்துநிலை, “குடிமைச் சமுதாயத்தில்” (civil society) உள்ள தனிப்பட்ட நபர்களின் ஆழ்சிந்தனையே (contemplation of single individuals) ஆகும்.
10
பழைய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை “குடிமைச்” சமுதாயம் (“civil” society) ஆகும்; புதிய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை மனிதச் சமுதாயம் (human society) அல்லது சமுதாய மயமாக்கப்பட்ட மனிதகுலம் (socialised humanity) ஆகும்.
11
தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர்; ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change)அமைப்பதாகும்.
[1845 வசந்த காலத்தில் மார்க்ஸ் எழுதியது]

Sunday, August 12, 2012

"ஜீவாவின் கவிதைப் பயணம்" - நூல் அறிமுகம்


பேராசான் ஜீவா அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று களங்களிலும் மூழ்கி முத்தெடுத்தவர். பொருளியல் சமத்துவத்துக்கான அரசியல் சமரில் பலரும் முழுக்கவனம் செலுத்திய தருணத்தில் காலம் காலமாக மனித உள்ளங்களின் உள்ளியக்கத்தைத் தீர்மானித்தப் பண்பாடு குறித்து சிந்தித்தார்; கவனம் செலுத்தினார். மொழி குறித்தும் மக்கள் பண்பாடு குறித்தும் அக்கறை கொண்டார்.  ஏராளம் எழுதினார்.  பேசினார்.
ஜீவாவின் பன்முகப் பணிகள் இன்று அரசியல் கடந்து கவனம் பெறுகின்றது. தமிழிய வீரியம் தப்பிய விதைகளங்காய்த் தகிக்கின்றது. இத்தருணத்தில் பத்திரிக்கையாளரும் சிவப்புச் சிந்தனையாளருமான தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் ஜீவாவின் பாடல்களை முன்வைத்து கோடிக்கால் பூதமடா... (ஜீவாவின் கவிதைப் பயணம்) என்ற தலைப்பில் ஒரு நூலினைப் படைத்துள்ளார். "தோழர் ஜீவாவை அறிமுகப்படுத்திய அளவுக்குக் கூட கவிஞர் ஜீவாவை அறிமுகப்படுத்தவில்லை" என்ற ஆதங்கத்தில் இந்நூலைப் படைத்துள்ளார்.
ஜீவாவின் கவிதைகளில் தற்போது கிடைத்துள்ள 122 கவிதைகளை அதன் உள் ஆற்றல்களோடு அறிமுகப்படுத்துகின்றார்.
“இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன :  48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோசலிசம் சார்ந்து எழுந்தவை : கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல்கள் 7 : புரட்சி பற்றிய பாடல்கள் 5: இது போக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6 : சுயமரியாதை , பகுத்தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல்கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1. எனப் பத்து வகைபாடுகளில் அவற்றை நாம் அனுகலாம்'' என்று பகுத்துக் கூறுவது கல்விப்புல ஆய்வு போன்ற வியப்பைத் தருகின்றது.
ஜீவாவின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உள்ளதாக உள்ளன என்பதைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். 
மிக எளிமையாகவும், சுவைபடவும் பல பாடல்களைப் பற்றி ஆசிரியர் விவரிக்கின்றார்.  1930 ஆம் ஆண்டு வெளிவந்த சுயமரியாதைச் சொல்மாலையில் ஆத்திச்சூடி போல எழுதியுள்ள கீழ்க்காணும் அடிகளைப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகின்றார்.
"காதல் மணத்தாலே தருமின்பம்
"தாசியர் வேணுமாய் பேசுவார் கயவர்"
"தையலர் விடுதலை வையக விடுதலை"
"பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே"
"மெல்லியர் கல்விக்கு அல்லும் பகலுழை"
"கற்பெனப் பெண்களை அற்பரே குலைத்தார்"
அதே நேரத்தில் “பெண்கல்வி'' பற்றி கூற வந்தவர் "மெல்லியர்' என பெண்ணை உடல் சார்ந்து குறைத்து மதிப்பிடும் வார்த்தைகளைக் கையாண்டது அன்றைய சிந்தனை வழக்கில் பிழையெனப் பாடவிடினும், பெண்ணியப் பார்வை விரிந்து பரந்துள்ள இக்கால கட்டத்தில் இவ்வார்த்தை பயன்பாட்டை பெண்ணியவாதிகள் ஏற்கமாட்டார்கள்'' என விமர்சிக்கவும் செய்கின்றார்.  மற்றொரு இடத்தில் “சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் ஜீவாவும் பெண்விடுதலை குறித்து எழுதியவை மீண்டும் வாசிக்கப்பட வேண்டும்.  பெரியாருக்கு ஒப்பவும் சில இடங்களில் அதற்கு மேலாகவும் பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள் இவர்கள்.  இது குறித்து தனியே ஒரு நூலே எழுதலாம்''.  என்று கூறுவது மிக நல்ல மதிப்பீடாக அமைகின்றது.
மூட நம்பிக்கை, மத நம்பிக்கை ஆகியன குறித்த ஜீவாவின் தீவிர எதிர்ப்புணர்வை அவர்தம் பாடல்கள் வழி உணர்த்துவது சிறப்பு.
"இடி விழுந்தது கடவுள் மேல்" என்றும் "தலைக்கொரு பாழ் மதம்" என்றும்;  "கற்சாமி பிழைத்திட வேலி நிலம்" என்றும் "புத்தி கெட்ட ஆத்திகம்" என்றும் ஜீவா ஆவேசமாய் கூறும் இடங்களைச் சுட்டி எழுதிச் செல்வது அருமை.
ஜீவாவின் உள்ளத்தில் சுடராய் தகித்த பாட்டாளிவர்க்க உணர்வு அவர்தம் பாடல்களில் பற்றிப்படர்வதை அகத்தியலிங்கம் நுட்பமாகப் பதிவு செய்கின்றார்.
“ஜீவாவின் பாடல்கள் காலாவதியானவை அல்ல.  இன்றும் கால ஓட்டத்தின் சுருதியே அவை.  பணத்திமிருக்கு பணியாத நா  ஜீவாவின் பேனா. அவர் பணத்திமிர் பற்றி எழுதுகிறார்.
"யானை போற் கொழுத்த மேனி
இடர் செய்யும் நச்சு நெஞ்சு
பூனைபோல் நிறைந்த வாழ்வு
பொய்புலை நிறைந்த வாழ்வு
ஏனையோர் குடிகெடுக்கும்
எத்தனம் பொழுதுபோக்கு
பானைபோல் வயிறு கொண்ட
பணத்திமிர் வீழ்க! வீழ்க!"
எனக்கூறி விளக்கிச் செல்கிறார். குவலயம் நாற்றிகையும் அதிர  "கோடிக்கால்பூதம்" போன்ற அற்புதமான சொற்சேர்க்கைகளை ஜீவா பாடல்களில் காண முடியும்.
அதிகம் பேசப்படாதப்பாடல்களை எடுத்து அவற்றின் இலக்கிய நயத்தினை விளக்கும் போது ஆசிரியர் ஜீவா மீதும் உழைக்கும் மக்களின் சித்தாந்தத்தின் மீதும் கொண்டுள்ளப் பற்று பளிச்சிடுகின்றது. 
வாடாத மக்களும் வாழ்வதெங்கு?
மாதர் சுயேட்சை மணப்பதெங்கு?
நாடக முற்போக்கு காண்பதெங்கு?
நல்லிளைஞர் வேகம் பூண்பதெங்கு?
கோடாலி மண்வெட்டி ஆள்வதெங்கு?
குக்கிராம மக்கள் தழைப்பதெங்கு?
தேடும் மனித சமமெங்கு?
சீர்மிகும் ரஷ்யப் பொன்னாட்டிலன்றோ?
அடடா... அடடா... எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள்.  கோடாளி, மண்வெட்டிதூக்கி வியர்வை சிந்த உழைப்பவன் ஆட்சி எனில் கசக்குமோ ஏழைக்கு? பொறுக்குமோ பணச் கொள்ளையருக்கு? “ என்று துள்ளித் துள்ளி எழுதிச் செல்கிறார்.  29 பாடல்கள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது நன் முயற்சி.
ஜீவாவின் ஒட்டு மொத்த ஆளுமையை, ஜீவாவுக்கு லட்சியக் கனவு ஒன்று இருந்தது.  அது தேச விடுதலையில் காலூன்றி, சுயமரியாதையில் கிளை விரித்து, பொதுவுடைமையில் பூத்துக் குலுங்கும் கனவு.  அந்தக் கனவு கைகூட தனது நாவை, பேச்சாற்றலை ஆயுதமாக்கினார்.  தனது எழுத்தாற்றலை பேனாவை சாதனமாக்கினார்.  வாகனமாக்கினார் என நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் சித்தரிக்கிறார்.
இது ஜீவாவின் பாடல்களை மக்களிடம் புது முறையில் எடுத்துச் செல்லும் நூல். சுயநல அரசியலும், உலகமய பொருளியலும், நுகர்வுப் பண்பாடும் பெருகிவரும் இக்காலத்தில் நேர்மையான அரசியலை, மக்கள் மய பொருளியலை, தமிழியப்பண்பாட்டை முன்னெடுக்க ஜீவா ஓர் அடையாளமாக, ஆயுதமாகப் பயன்படுவார்.  அந்த ஆயுதத்தை உணர்வுப் பொங்க கூர்தீட்டி கையளித்திருக்கிறார் தோழர் அகத்தியலிங்கம் என்றால் மிகையில்லை.
கோடிக்கால் பூதமடா... ஜீவாவின் கவிதைப் பயணம், சு.பொ.அகத்தியலிங்கம், நாம் தமிழர் பதிப்பகம் பக். 104, விலை ரூ.50/

நன்றி : http://www.keetru.com

Tuesday, August 7, 2012

தமிழ் வளர்த்த செம்மலர்


முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும்.
இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
காந்தீயத் தொண்டர்
ஜீவா தம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். அந்தக் காலத்தில் காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நாடகம் நடத்தி வெள்ளையரைக் கலங்க வைத்த தியாகி விஸ்வநாததாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். ஜீவா அவர்கள் சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடையவராக ஜீவா விளங்கினார். மேலும் ஒன்பதாவது படிக்கும்போதே கவிதைகள் எழுதும் திறம் படைத்தவராக ஜீவா திகழ்ந்தார். அவர் காந்தியையும், கதரையும் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார்.மேலும் “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தையும் அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றி அந்த நாடகத்திலும் நடித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதலும் கதர் அணிதலும்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தேசபக்தர் திருகூடசுந்தரம் அவர்களின் பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. ஜீவா அவர்கள் அவரது பேச்சால் தூண்டப்பட்டு அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஜீவா அவர்களின் காந்தீயப் பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிறை செல்லல்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. இளைஞர் உலகம் கொந்தளித்து எழுந்தது. ஜீவா அவர்கள் வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். ஆங்கிலேய அரசு அதற்காகச் ஜீவாவைக் கைதுசெய்து, கை-கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
தீண்டாமை எதிர்ப்பு
தீண்டாமை என்பது மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக் கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான் என்பதாகும். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். நாஞ்சில் நாட்டில் நடந்த ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஜீவா திகழ்ந்தார் என்பதற்கு இச்சம்பவம் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இதனால் தந்தை மகன், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் தனது 17-ஆவது வயதில் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் பணியாற்றல்
ஜாதி வேறுபாடு பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்டு வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் அச்செயலைக் கடுமையாக எதிர்த்தனர்.வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜீவானந்தம் அவர்கள் தமது பணியைத் துறந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அப்போது ஏற்பட்ட போராட்டங்களினால் அந்த ஆசிரமம் மூடப்பட்டது.
காந்தி ஆசிரமம் உருவாக்குதல்
வ.வே.சு ஐயரின் ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊருக்கு வந்து அங்கு காந்தியடிகள் பெயரில் ஓர் ஆசிரமத்தை ஜீவா உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித் தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காந்திஜியின் பாராட்டு
ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்: “உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும் வளர்ச்சியையும் கருதியாவது தனித் தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித் தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?” என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது. “உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார். இறுதிவரை ப.ஜீவானந்தம் – ஜீவா என்றே அழைக்கப்பட்டார். ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி வருகைபுரிந்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்றார். அதற்கு, “இந்தத் தேசம்தான் எனக்குச் சொத்து” என்று ஜீவா பதிலளித்தார். ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு காந்திஜி, “இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்றார்.
ஜீவாவின் பொதுப்பணி
சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப் பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் மனஉறுதியுடன் சுட்டிக்காட்டி அவருடைய கருத்துக்களை ஜீவா மறுத்துரைத்தார். ஜீவாவின் மனஉறுதியை மிகவும் பாராட்டிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் தமது நூல் எழுதினார் என்பது நோக்கத்தக்கது.
சிராவயல் ஆசிரமத்தில் பல சிறப்பான செயல்களை ஜீவா அவர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் சிறப்பு நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்தார் ஜீவா.
சிராவயல் ஆசிரமத்தில் இருந்து வெளியேறல்
சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அங்கிருந்து ஜீவா வெளியேறினார். ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்தது. அத்தீவிரம் 1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ள வைத்து ஜீவாவிற்குச் சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பர் மாதம் சிறையை விட்டு வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.
சிங்காரவேலருடன் நட்பு
இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைத்தது. சிங்காரவேலர் தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளித்தது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய புதிய வாயிலைத் திறந்து வைத்தது போலாயிற்று எனலாம்.
தமிழகத்தின் முதல் பொதுவுடமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். இருவரும் ஒரே சமயத்தில் சமூக விடுதலை தளத்திலும் செயலாற்றியிருப்பது இவ்விரு தலைவர்களும் ஒரே சமயத்தில் சுயமரியாதை இயக்கத்திலும் தேசவிடுதலைத் தளத்திலும் முன்னணியில் நின்று, தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.
இல்லற வாழ்க்கை
கடலூர் சட்டமன்றத் தொகுதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகளான கண்ணம்மாவை ஜீவா திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்
சிராவயல் ஆசிரமத்தில் காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் ஆகியவை போதிக்கப்பட்டன. இங்குதான் சொரிமுத்து ஜீவானந்தமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவாவுக்கு சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கம்பனிலும் பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.
தமிழ் நூற்கல்வியும் சேரன்மாதேவி ஆசிரமத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவமும் சேர்ந்து ஜீவாவை தீவிரமான வடமொழி எதிர்ப்பாளராகவும் தனித்தமிழ் ஆர்வலராகவும் மாற்றியது எனலாம்.
ஜீவா எதிலும் தீவிரம் காட்டும் பிறவிக்குணம் வாய்ந்தவர். இக்குணம் தனித்தமிழில் தீவிர ஆர்வம் கொண்ட ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்கும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்தார். அப்போது தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் மீது ஜீவா மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
1927-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த பல்லாவரம் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு மறைமலையடிகள் வீட்டை அடைந்து அடிகளாரின் வீட்டுக் கதவைத்தட்டிய போது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.
யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கிலத்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேச வேண்டும் என்பதை ஜீவா உணர்ந்தார். இதனைப் தாம் எழுதிய நூல்களிலும் ஜீவா பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றல்
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-ஆம் ஆண்டில் இருந்து 1939-ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டமாகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டனின் ஏகாதிபத்திய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930-ஆம் ஆண்டுகளில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932-ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப் போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொருப்பினை வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. அதனை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கு வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் ஜீவா மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிச வரலாறு, சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, தமிழில் அப்பொருண்மைகள் குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை உருவாக்குதல்
ஈ.வெ.ராவோடு கருத்து முரண்பாடு ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜீவா அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937) எனலாம்.
1933-ஆம் ஆண்டில் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுவே ஜீவா எழுதிய முதல் நூல் ஆகும். அன்றிலிருந்து நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பல பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபடல்
1937-ஆம் ஆண்டில் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 1938-ஆம் ஆண்டில் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜீவா கலந்து கொண்டு போராடியபோது ஜீவா கைது செய்யப்பட்டார். இத்தகைய போராட்டங்களால் ஜீவாவிற்குப் பல்வேறுவிதமாக துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜீவா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து ஜீவா பம்பாய் சென்றார். ஆனால் அங்கும் அரசியல் காரணங்களுக்காக ஜீவா கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வைப் போன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு ஜீவா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகின. இதற்கிடையில் 1937-ஆம் ஆண்டில் நவம்பர் 20-ஆம் தேதி ஜீவா பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் .
1957-ஆம் ஆண்டில் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ‘ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும்’ என்ற நூல் ஆகும்.
சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ததலைவராகச் செயல்படுதல்
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய,
‘‘நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.’’
என்ற உரை மிகவும் புகழ்பெற்றது. இது ஜீவாவின் உண்மையான மொழிப்பற்றினைக் காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.
அதேபோன்று கம்பன் மீதும் பாரதி மீதும் ஜீவா கொண்டிருந்த பற்றினைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரையோ நூலோ எழுதலாம். திராவிட இயக்கங்கள் கம்பராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கி நூல்கள் எழுதி, அதில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரசமான கட்டுரைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தபோது கம்பனில் பொதிந்துள்ள நயங்களை அந்த திராவிட இயக்கத்தவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு எவ்வித அடிபணிதலும் இல்லாது தன்கருத்துக்களை முன்வைத்தவர் ஜீவா. குன்றக்குடி அடிகளாரும் ஜீவாவும் கலந்து கொண்ட பட்டிமண்டபங்கள் மிகவும் புகழ் பெற்றவையாக அமைந்து விளங்கின. ஜீவாவைக் ‘கம்பராமாயண உபன்யாசகர்’ என்று திராவிட கட்சிகள் கேலி செய்த அதே மேடையில் ஜீவா கம்பனை வியந்து பார்த்துக் கருத்துக்களை வெளியிட்டார் . தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.
தன்னலம் கருதாத்தகைமையாளர்
தன்னலம் கருதாது என்றும் எப்பொழுதும் ஜீவா அவர்கள் நாட்டின் நலத்திற்காகவும், மக்களின் நலத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டே இருந்தார். ஜீவாவின் வாழ்வில் பல மறக்க இயலாத நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.
1963-ஆம் ஆண்டின் ஒரு நாள். சென்னையின் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் ஜீவா.
அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி நின்றனர். அவர்கள் உள்ளே இருந்தவரைப் பார்த்து,
‘‘ஜீவா இருக்கிறாரா? என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து பரிவான குரலில் என்னம்மா வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. உங்களைத்தான் பார்க்க வந்தோம் என்று ஒரு பெண் கூறினாள்.
பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி நீ யாரம்மா என்று கேட்கிறார் ஜீவா.அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள் என்கிறாள். மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து நீ யாரம்மா? என்று கேட்டார்
கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் – எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா என்று எழுதியிருந்தது. அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். ஜீவா அத்துண்டுக் காகிதத்தில் என் மகள் என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.
அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத் துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை. என் மகள் என்று சொல்லவே கூசித்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய் என்று மனந்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.
ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னாள் ஜீவாவின் மகளான அந்தக் குமுதா. ஜீவாவின் முதல் துணைவியார் திருமதி கண்ணம்மாவின் ஒரே பெண்.
கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகர தாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர். குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினர். அதன் பிறகு குமுதா தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள். அந்தக் குமுதா தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வயதினையும் கரைத்துக் கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும் வரை அவருடன் சேர்ந்து குடிசையில் வசிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழவைக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
பொதுநலம் பேணிய புனிதர்.
ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப் பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற, காமராஜர் அவரை சந்திக்க பல குண்டு குழிகளையும் சாக்கடைகளையும் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்குச் செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ”ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு” என்று காமராஜர் கூறினார்.
அதனைக் கேட்ட ஜீவா, ‘‘ தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்றார்.
விரக்தியுடன் காமராஜர், ‘‘…ஜீவா நீ உருப்படமாட்டே..’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். தன்னலம் கருதாத் தகைமையாளராகவும், பொதுநலம் பேணிய புனிதராகவுமாக ஜீவா திகழ்ந்ததை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜீவா அவர்கள் தமக்கு நெருங்கியவர் முதல்வராக இருந்தும் அவருடன் கொண்ட நட்பினைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையுடையவராகத் தூய்மைஉடையவராக வாழ்ந்தார்.
ஜீவாவின் நூல்கள்
தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், புதுமைப்பெண், இலக்கியச்சுவை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், மொழியைப் பற்றி, ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு, மேடையில் ஜீவா (தொகுப்பு), சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, தேசத்தின் சொத்து (தொகுப்பு) ஆகியவை ஜீவா அவர்களின் மிகச் சிறந்த நூல்களாகும். இங்ஙனம் பல நூல்களை எழுதி தமிழ் வளர்த்த செம்மலராக ஜீவா திகழ்ந்தார்.
கலைஇலக்கிய பெருமன்றம் உருவாக்கல்
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது 1961-ஆம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ ஆகும். பொதுவுடமைக் கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 –ஆம் ஆண்டில் தொடங்கினார்.
இங்ஙனம் ஜீவா அடித்தளமிட்டு உருவாக்கிய கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், அமைப்பையும் தோற்றுவித்துள்ளது நோக்கத்தக்கது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அயராது பாடுபட்டு மாவீரராகவும், தமிழ் வளர்த்த செம்மலராகவும் திகழ்ந்த ஜீவா அவர்கள், 1963-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ஜீவாவின் மறைவு உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும், பாரத நாட்டிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். ஜீவாவின் இறுதிச் சடங்கின்போது நாடகக் கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில்,
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா’’
என்ற ஜீவாவின் பாடலைப் பாடிய போது அனைவரும் கண்ணீர் உகுத்தனர். பாரதத்தின் சொத்தாகத் திகழ்ந்த ஜீவா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.