Friday, February 21, 2014

சில சமூக வழக்கங்கள்


தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சில விந்தையான சமூக வழக்கங்களைச் சங்க இலக்கியங்களில் காணலாம். விருந்தினரை விரைந்து செல்லுமாறு பணிக்கும் மரபு வடமொழியில் “சதபதி” என்று அழைக்கப்பட்டது. இதைப் பற்றி பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடுகிறது. இதன் படி, தன் விருந்தினரை வழியனுப்பச் சென்ற கரிகாலன் ஏழு அடிகள் வைத்தபின், நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக் கொண்டான். ஒவ்வொரு குடும்பத்திலும் தலைவன் உணவு உண்ணுமுன் ஒரு கைப்பிடி சோறும் இறைச்சியும் காக்கைகளுக்கு அளித்தான். பசுவதை, கருசிதைவு, அந்தணரைக் கொல்லுதல் ஆகியவை மிகக் கொடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டன. ஆனால் செய்நன்றி மறத்தல் இவற்றை எல்லாம்விட பெரிய குற்றமானது என்று அக்காலத்து நம்பிக்கை நிலவியது.

கணிகையர் பெண்கள் தம் தொழில் நடை முறைக்கு மாறாகத் தவறுகள் இழைப்பார்களேயானால், அவர்கள் தம் தலைமீது ஏழு செங்கற்களைச் சுமந்து பொது அரங்குகளைச் சுற்றிவருமாறு தண்டிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கணிகையர் ஜாதியினின்றே விலக்கப்பட்டனர். பெண்டிர் செய்த பாவங்களை, குமரி முனையில் கடல் நீராடிப் போக்கிக் கொள்ளலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. குழந்தைப் பேற்றுக்குப் பிறகு, பத்தாம் நாள் இரவு, தாய்மார்கள் ஏரி, குளங்களில் நீராடினர். பேய் பிடித்தல் கண்படுதல் போன்றவற்றை மக்கள் நம்பினர். இவற்றினின்று காத்துக்கொள்ள நெய், வெள்ளைக் கடுகு ஆகியவற்றால் குழந்தைகளின் முடிகளை அலங்கரித்தனர். மந்திரித்தல், சகுனம் பார்த்தல் போன்ற நம்பிக்கைகள் நிலவின. கண்ணகியின் இடதுகண்ணும், மாதவியின் வலது கண்ணும் துடித்தமையால், இந்திர விழா நாளில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி முன்பே அறிய முடிந்தது என்று சிலப்பதிகார ஆசிரியர் விரிவாகக் கூறுகிறார்.
சவ அடக்கம் :
        இறந்தவர்களின் உடல்களை இரு வகையாக அடக்கம் செய்தனர். எரித்தல், அல்லது தாழிகளில் இட்டுப் புதைத்தல் அல்லது தாழிகள் இல்லாமல் புதைத்தல் போன்ற மரபுகள் வழக்கில் இருந்தன. சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்க்கும் மாறுபட்ட வழக்கங்கள் கையாளப்பட்டன. இறந்த முனிவர்களுக்கும், மன்னர்களுக்கும் உடன்கட்டை ஏறிய பெண்டிருக்கும் அவரது உறவினர்களால் வெவ்வேறு அமைப்புகளுடைய சமாதிகள் (செங்கற்களாலான கல்லறைகள்) கட்டப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. இத்தகைய கல்லறைகளின் வடிவம் இறந்தவர்களின் சமூக அமைப்பு ஆகியவற்றுக்குத் தக்கப்படி மாறுபட்டது. சவ ஊர்வளத்தில் கொட்டப்பட்ட இசைக்கருவிகளின் ‘டுண்டுண்’ என்ற ஒலி, கேட்போரின் மனத்தில், “உனக்கும் ஒருநாள் சாவு உண்டு என்ற அச்சத்தை எழுப்பியது என்று இப்பாடலிலிருந்து அறிகிறோம்.

சதி அல்லது உடன்கட்டையேறுதல் :
        உடன்கட்டை ஏறும் பழக்கம் ஓரளவு நிலவிவந்தது. ஆனால், இப்பழக்கத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை கணவனை இழந்த பெண்கள் தாங்களும் உடன்கட்டை ஏறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டனர் என்பதையும், இவ்வழக்கத்தைத் தமிழர்கள் ஊக்குவிக்க வில்லை என்பதையும், பூதப்பாண்டியன் மனைவி வாயிலாக அறியலாம். அவளுடைய சொற்கள் பெரும் புகழுடன் நின்று நிலவுகின்றன. ஆனால் சதியை மேற்கொண்ட பெண்களின் வீரத்தையும் கணவனிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியையும் அனைவரும் பெரிதும் பாராட்டினர். உடன்கட்டை ஏறுவது என்பது பரவலான வழக்கமாக இல்லை. அது விதிவிலக்காகவே இருந்தது கணவனை இழந்த எந்தப் பெண்ணும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக நாம் அறிவவில்லை.

பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
(நன்றி: நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
சங்ககால ஆட்சி முறையும்
சமூக வாழ்வும் எனும் நூல்)

ஜனசக்தி 10-02-2014

No comments:

Post a Comment