Saturday, January 18, 2014

தமிழில் சமத்துவ ஏக்கம்




குறிப்பு : 

ஜனவரி 18: 

பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம்

 நினைவு நாள் இன்று..


கம்பன் குறித்த ஜீவாவின் உரைகளும் கட்டுரைகளும் அவரது பண்பாட்டு அரசியலின் மற்றொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றன. கம்பர் ஆரிய இராமனை முன்னிறுத்தும் இராமயணக் கதையைப் பாடினார் என்பதால், அன்று திராவிட இயக்கத்தார் கம்பரைப் புறக்கணித்தார்கள். ஆயின் தோழர் ஜீவா மிகத் துணிச்சலாகக் கம்பரை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்.

கம்பர் கோசல நாட்டைப் பாடும்போது, அந்நாட்டைக் “காவிரி நாடன்ன கழனி நாடகவே’’ காணுகின்றார். (ப.182) காப்பியக் களமாகிய கோசலநாட்டைப் பாடும்போதும் அவர் மனதில் காவிரி நாடே நிழலாடுகிறது. கம்பர் அரசவைப் புழவராக வாழவில்லை, மாறாக அவர் சோழப் பேரரசனோடு பலமுறை மோதியிருக்கிறார் என ஜீவா சுட்டிக் காட்டுகிறார்.

“மன்னவனும் நீயோ ! வளநாடும் நின்னதோ ! உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்” எனச் சோழப் பேரரசனைப் சபிப்பவராக, அரசெதிர்ப்புப் பண்புகொண்டவராகக் கம்பரைச் சித்தரிக்கிறார். கம்பரது காவியத்தை அரங்கேற்ற தில்லைத் தீட்சிதரும் முன்வரவில்லை. ஸ்ரீரங்கத்து அய்யங்கார்களும் முன்வரவில்லை, எனவே கம்பர் அவரது இராமாயணத்தை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றினார்; அம்மக்கள்தாம் அவருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார்கள் என்று ஜீவா வாதிடுகிறார்.

கம்பர் காவியத்தைத் திராவிட இயக்கத்தார் நிராகரித்தலில் தமிழ்நாட்டு வேளாளர் சதி உள்ளதோ என ஜீவா கருதினாரோ என்னவோ, கம்பர் தனது ஏரெழுபது நூலில் வேளாளரைச் சிறப்பிக்கும் பாடல்களை எழுதியிருப்பதைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் (ப.182,184). “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது போன்ற வரிகளைப் பாராட்டி நின்ற பழந்தமிழகத்தில் “உயிரெலாம் உறையும் உடம்பும் ஆயினன்’’ “வய்யம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத்தாங்கும் உடலன்ன மன்னனுக்கு” என மன்னனை உடலாகச் சித்தரிக்கும் துணிச்சல் கம்பனுக்கு இருந்தது என ஜீவா விளக்கம் அளிக்கிறார். (ப.188).
 














கம்பர் இராமணை அவதாரப் புருஷனாக காட்டவில்லை, சிவனையும் பிரம்மனையும்  பிற தேவர்களையும் வெற்றிகொண்ட மானுடனாகச் சித்தரித்துக் காட்டிகிறார் (வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா) என ஜீவா மிக அற்புதமாகச் சுட்டிக்காட்டுகிறார் (ப.203). எல்லாவற்றிற்கும் மேலாக, கம்பரின் நூலில் கற்பனாவாத சோசலிசப் பண்பு கொண்ட பாடல்கள் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். “வண்மையில்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற பாடலையும் “கொள்வார் இலாமையின் கொடுப்பாரும் இல்லை மாதோ’’ என்பது போன்ற பாடல்களையும் சுட்டிக்காட்டி. தோழர் ஜீவா அவை கற்பனாவாத  சோசலிசப் பண்புகொண்டவை (ப.186) என நிரூபிக்கிறார். 

தோழர் ஜீவா கம்பனிலிருந்து தொடங்கும் கற்பனா சோசலிசம் குறித்த சொல்லாடல்கள் அவரது தமிழ்ப் பண்பாட்டு அரசியலின் முக்கியமானதொரு பரிமாணம் என்று நாம் கருதுகிறோம். ஜீவா வெளிப்படையாகப் பெயர் சொல்லி  கற்பனா சோசலிசம் பற்றிப் பேசியுள்ள இடங்களைத் தாண்டி அவரது எழுத்துக்கள் எங்கும் நெடுக, தமிழில் அமிழ்ந்திருக்கும் கற்பனா சோசலிசத்தைத் தேடி  அழைந்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. வெவ்வேறு சொற்களின் வழி அவர் அந்தக் கற்பனா சோசலித்தைக் காண விழைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஓரிடத்தில் அதை அவர் மானுடம் என்கிறார்; பிறிதொரிடத்தில் அதனை கிருதயம் என்கிறார்; இன்னொரிடத்தில் அதனை அமரநிலை என்கிறார்.


அவரது புதுமைப்பெண் கற்பனா சோசலிசதின் குடிமகள் தான். “செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்” கலக்கும் குறுந்தொகைப் பாடலில் ஓர் அற்புதமான கூட்டு வாழ்வைப் பற்றிய கண்ணோட்டம் காட்சிப்படுவதாகப் பாராட்டுகிறார் (ப.144). சங்ககாலத்து ஐந்திணை மக்களும் களவு ஒழுக்கத்தைப் பின்பற்றி எவ்வகை கட்டுப்பாடின்றி  “ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என வாழ்ந்ததை கலித்தொகை வரிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் (ப.149).


கட்டுரையாளர் : உயர்திரு. ந.முத்துமோகன்
நூல் : நியு செஞ்சுரியின் சிறுநூல் வரிசை,
‘ஜீவாவின் பண்பாட்டு அரசியல்’
நன்றி : ஜனசக்தி : 09.01.2014.



 குறிப்பு : ஜனவரி 18: பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் நினைவு நாள் இன்று..

1 comment:

  1. சிறப்பான பகிர்வு... சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete