Friday, January 17, 2014

பணத்தின் சக்தி


ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர். அவரது நாடங்களில் ஒன்று ‘ஏதென்ஸ் நகர டிமன்’ என்பது. இது அவரது நாடகங்களில் அவ்வளவு பிரபலமானதல்ல. பணத்திற்காகப் படுகொலைகள் நிகழ்வதையும், பணத்தாசையையும் சித்தரிக்குக் நாடகம் இது. இதன் கதாநாயகன் டிமன் இதனால் இறந்து விடுகிறான். இந்த நாடகத்தில் உள்ள இரு பகுதிகளை மார்க்ஸ் மேற்கோளாகக் காட்டுகிறார். அதில் ஒன்று பின்வருமாறு உள்ளது.

கறுப்பை வெள்ளையாக்கும், தீயதை நல்லதாக்கும், தவறைச் சரியெனக்கூறும், கீழானதை மேலாக்கும், கிழவனை இளைஞனாக்கும். கோழையை வீரனாக்கும் ஆ, கடவுளர்களே இது ஏன்? ஏன்? ஏன்? இது பூசாரிகளையும், அலுவலர்களையும் உன்னுடமிருந்து பிரிக்கும்.

பலவானின் தலையை உருவி விடும். மதங்களை வளர்க்கும், தகர்க்கும், பாவிகளை ஆசிர்வதிக்கும். தொழுநோயாளியைப் புகழும், திருடர்களை உயர்த்தும், பட்டமளிக்கும், மண்டியிடும் நாடாளுமன்றத்தில் அமர்த்தும். இது விதவையை மணக்கச் செய்யும் கெட்டவனை, நோயாளியை வாசனைப் பொருள் பூசி அழகு செய்யும். ஏ! பாவ ஜென்மமே வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியை சரியாகச் செய்ய விடுகிறேன்’’.

இது பிரபலமான மேற்கோள். இதனை கிருஸ்டோபர், காட்வெல் அவரது புகழ் பெற்ற ‘கார்னலும் உண்மையும்’ என்ற நூலில் இதனை மேற்கோளாகக் காட்டுகிறார். தொ.மு.சி.ரகுநாதன் அவரது ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூலில் மேற்கோளாகக் காட்டுகிறார். இவர்களுக்கு மூலாதாரமாக விளங்குபவர் மார்க்ஸ் ஆவார். அவரது “பொருளாதாரத் தத்துவக் கேடுகள்  1844” என்ற நூலில் “பணத்தின் சக்தி’’ என்ற பகுதியில் இதனையும், கதே என்ற ஜெர்மானியக் கவிஞரது ‘பாஸ்ட்’ என்ற நாடகத்திலிருந்து இதே போன்ற மேற்கோளையும் காணலாம். இந்த நூல் பொருளாதாரம், தத்துவம் ஆகியன சம்பந்தமான நூல். இதில் தனிச் சொத்தில் கொடுமைகள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். தனிச் சொத்து முதலாளிக்கு சொர்க்கத்தினைத் தருகிறது. உழைப்பாளிக்கு நகரத்தினை அளிக்கிறது என்று அவர் கூறுவார். “முதலாளிக்கு அரண்மனையைத் தருகிறது, உழைப்பாளிக்கு குடிசையைத் தருகிறது. முதலாளிக்கு அழகைத் தருகிறது. உழைப்பாளியைச் சின்னாபின்னமாக்குகிறது இதன் காரணமாக மனிதன் விலங்கு நிலைக்கு செல்கிறான்.’’

தனிச் சொத்திற்குக் காரணம் உழைப்பாளியின் உழைப்பு. இது அவனால் படைக்கப்பட்டு, அவனையே ஆட்டிப்படைக்கிறது. அவன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. ஏனென்றால் தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருள் (பண்டம்) முதலாளிக்கு நிலப்பிரபுவுக்குச் சொந்தம். இது பணத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. எனவே பணத்தின் சக்தி அதிகமானது. இது பற்றி இதே நூலில் மார்க்ஸ் விரிவாகப் பேசுகிறார்.

ஷேக்ஸ்பியரது இந்த வாசகங்களை மேற்கோளாகக் காட்டும் மார்க்ஸ் பணம் மனிதனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனமாக உள்ளது என்று கூறுவார். இதன் மூலம் உலகினையே விலைக்கு வாங்கலாம்.
இதனை நன்கு புரிந்து கொண்டவர் ஷேக்ஸ்பியர். மார்க்ஸ் கூறுகிறார், “பணத்தின் உண்மையான தன்மையையே, ஷேக்ஸ்பியர் சிறப்பாக இந்த பகுதியில் வர்ணிக்கிறார். ஷேக்ஸ்பியர் பணத்தின் இரு பண்புகளையும் வலியுறுத்திக் கூறுகிறார்.
1. பணம் கண்ணுக்குத் தெரியும் கடவுள். மனிதனது பண்புகளை நேர் எதிராக மாற்றுகிறது. பொருள்களைச் சிதைக்கிறது. ஒட்ட முடியாதவற்றை அது ஒட்டுகிறது.
2. உலகப் பொதுவான பரத்தை. மக்களையும், நாடுகளையும் அது விலைக்கு வாங்குகிறது.

பணமானது மனிதனது இயல்பான பண்புகளைச் சிதைக்கிறது. அது மனிதனுக்கு மேலாக நின்று ஆதிக்கம் செலுத்துகிறது. “என்னால் செய்ய முடியாததை பணத்தின் மூலம் செய்ய முடியும்... எனக்கு பிடித்தமான  உணவு வேண்டும் என்றால் அல்லது கோச்சு வண்டியில் செல்ல வேண்டும் என்றால் பணம் அவற்றைக் கொண்டு வருகிறது. நான் கற்பனை செய்வதை அது நனவாக்கிக் காட்டுகிறது.

பணம் இல்லாதவனுக்கும் தேவை உள்ளது. ஆனால் அவனது தேவை கற்பனையானதே ஆகும்... பயணம் செய்வதற்க்குப் பணம் இல்லை என்றால் அது உண்மையான தேவை இல்லை. படிப்பதற்கு விருப்பம் உள்ளது. பணம் இல்லை என்றால் படிக்க முடியாது. பணம்தான் கற்பனையை உண்மையாக மாற்றும். மனிதனது உண்மையான சக்திகளை மழுங்கடிக்கும். இவ்வாறு மார்க்ஸ் இந்தப் பகுதிக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்கிறார்.

இதே பகுதியை அவருடைய ‘ஜெர்மானியக் கருத்தியல்’ என்ற நூலில் மறுபடியும் மேற்கோளாகக் காட்டிகிறார். இங்கு அவர் கூறுகிறார், “சொத்தின் பொதுவான வடிவமான பணத்திற்க்கும், மனிதனது பண்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை ஒன்றிற்க்கு ஒன்று எதிர் எதிராக உள்ளன. இது நமது குட்டி பூர்ஷ்வாக் கொள்ளையர்களை விட ஷேக்ஸ்பியருக்கு நன்றாகவே தெரியும். இந்த மேற்கோள் மறுபடியும் ‘மூலதனம்’ பாகம் ஒன்றில் இடம் பெறுகிறது (123) பண்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பணத்தில் மறைந்து விடுகின்றன. பணமானது புரட்சிகரமான எல்லாவற்றையும் சம நிலைப்படுத்துகிறது.

ஷேக்ஸ்பியரது நாடகம் ‘வெனிஸ் நகர வணிகன்’ என்பது. அந்தோனியா என்ற வனிகன் ஷைலக் என்ற கந்துவட்டிக்காரனிடம் மூவாயிரம் ரொக்கப் பணம் கடனாக வாங்குகிறான். மூன்று மாதங்கள் கழித்து கடனைத் திருப்பித் தராவிட்டால் அந்தோனியாவின் இடது மார்பிலிருந்து ஒரு பவுண்ட் தசையை அறுத்துக் கொள்ள அவனுக்கு உரிமை உண்டு என்று ஒரு பத்திரம் எழுதி வாங்கிக் கொள்கிறான். பணம் குறிப்பிட்ட காலத்திற்குள் வரவில்லை. ஷைலக் நீதிமன்றம் செல்கிறான். ஒரு பவுண்ட் தசையைக் கேட்கிறான். நீதிபதியாக வந்த போர்ஷியா இரக்கம் காட்டுமாறு கேட்கிறாள். இரக்கம் பற்றி போர்ஷியா பேசுவதை அந்த கால மாணவர்கள் மனப்பாடம் செய்வர். இன்று நிலை வேறு ஆனால் ஷைலக் மசியவில்லை சட்டப்படி உள்ளதை அவன் கேட்கிறான்.
  
ஷைலக் கூறுகிறான், “நான் என் பத்திரங்களை மதிக்கிறேன்’’ இங்கு மார்க்ஸ் ஷைலக்கை பண்டங்களைப் பதுக்கி வைப்பவனாகக் காண்கிறார். அவன் கொடூரமானவனாகக் உள்ளதைக் காண்கிறார். ஏனென்றால் அவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் ஒரு பண்டமே. ஷைலக்கிற்கு அந்தோனியா ஒரு பண்டம் அவ்வளவுதான். அதன் மதிப்பு மூவாயிரம் டக்ட்கள் பரிவர்த்தனை மதிப்பாக மட்டுமே, ஷைலக் அந்தோணியோவைக் காண்கிறார். இப்பொழுது ஷைலக் சட்டத்தினை விடாப் பிடியாகப் பற்றிக் கொள்கிறான். சட்டப்படியான ஒரு பவுண்ட் தசைதான் வேண்டும் என்பதில் அவன் விடாப்பிடியாக இருக்கிறான். இது பூர்ஷ்வா சமுதாயத்தில் மனிதனையும் பண்டமாகக் காணும் போக்கு ஆகும்.

இதே கருத்து மூலதனம் – பாகம் 2 ஒன்றில் இடம் பெறுகிறது. 1844 – ஆவது ஆண்டில் இங்கிலாந்தில் குழந்தை உழைப்பாளிகள் பற்றி ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் இயற்றுவதற்குக் காரணம், குழந்தைகள் தொழிற்சாலைகளில் சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டார்கள். பல மனிதநேயவாதிகள்  இதனை எதிர்த்ததன் காரணமாக இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி குழந்தைகளை மதியம் ஒரு மணிக்கு மேல் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. இதனைப் பெரும்பான்மையான முதலாளிகள் பின்பற்ற வில்லை. ஒரு மணிக்கு பிறகும் வேலை கொடுத்தனர். சட்டம் இருந்தாலும் அதனை மதிக்கவில்லை. ஆனால் மதிப்பது போல் காட்டிக் கொண்டனர். இதனைப் பலர் எதிர்த்தபோது “நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டப்படி ஒரு மணிக்கு மேல் வேலைக் கொடுக்கவில்லை’’ என்று கூறி தங்களை உத்தமர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இதனை மார்க்ஸ் மூலதனம், (முதலாளிகள்) கூறுவது போன்று பின்வரும் மேற்கோளைக் காட்டுகிறார்.

“எனக்குச் சட்டம்தான் உண்டு
நான் சட்டப்படி நடக்க வேண்டும்
எனது ஒப்பந்தபடி எனக்கு நீதி வேண்டும்
அவளது இருதயம் வேண்டும்
பத்திரம் அவ்வாறு தானே கூறுகிறது.’’

இது மேலே கூறப்பட்ட வெனிஸ் நகர வணிகன் என்ற நாடகத்தில் நீதிமன்றத்தில் ஷைலக் கூறுவதாகும். இந்த நாடகத்தில் ஷைலக் அந்தோணியாவின் இடது மார்பில் இருந்து ஒரு பவுண்ட் தசை வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பது போல முதலாளிகள் சட்டத்தினை மதிக்கிறேன் என்று நடித்து கள்ளத்தனமாக குழந்தைகளை ஒரு மணிக்கு மேல் வேலை வாங்குவதில் குறியாக இருந்தனர் என்று மார்க்ஸ் கூறுகிறார். இதற்கு அவருக்குத் துணையாக ஷேக்ஸ்பியர் உள்ளார்.

மார்க்ஸ் அவரது எழுத்துகளில் ஷேக்ஸ்பியரது நாடகத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவற்றில் பணத்தின் ஆதிக்கம், பூர்ஷ்வாச் சட்டத்தின் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். மார்க்ஸ் கருத்துப்படி, மனிதனும் ஒரு பண்டமாகிறான் அதன் காரணமாக பண்டத்திற்கு மாற்றாக உள்ள பணத்தினைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் சிந்திக்கிறார்.

கட்டுரையாளர் : எஸ். தோத்தாத்ரி,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினர். பேராசிரியர் நா.வானமாமலையின்மாணவர்.

தொடர்புக்கு: 9894783657

1 comment:

  1. மேற்கோள்களை அறிந்தேன்.. நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete