Wednesday, September 25, 2013

மறுமலர்ச்சி இலக்கிய நாயகன் - சரத்சந்திரர்



வங்க இலக்கிய உலகில் பெருமாற்றங்களைக் கொணர்ந்த படைப்பாளிகளில் முக்கிய இடம் பெற்றவர் சரத்சந்திரர். மகாகவி இரவீந்திரநாததாகூரும் சரத்சந்திரரும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் முன்னவரின் படைப்புகளை ஊன்றி ஆய்வுசெய்து அதைத் துணையாய்க் கொண்டு தனது படைப்புகளின் தன்மையைச் செழுமைப் படுத்திக் கொண்டார். இவரது படைப்புகள் தனித் தன்மை உடையதாய் விளங்கியது. தனது வாழ்வின் அனுபவங்களையே துணையாய்க் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கினார். எனவே அவ்விலக்கியங்கள் உண்மைத் தன்மை வாய்ந்தவையாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளம் கவர்ந்தவையாகவும் விளங்கியது.
‘சரத்சந்திர சட்டர்ஜி’ என்றும், ‘சரத்சந்திர சட்டோபாத்தியாயா’ என்றும் அழைக்கப்படும் சரத்சந்திரர் வங்காளத்தின் ஹீக்ளி மாவட்டத்தில் ‘தேவானந்தபுரம்’ என்னும் கிராமத்தில் 1876 செப்டம்பர்15 அன்று பிறந்தார். இவரது தந்தை மோதிலால் சட்டோபாத்தியாயா வங்காளி மற்றும் ஆங்கில மொழியறிவு படைத்தவர். நடுத்தரக் குடும்பம். ஓரிடத்திலிருந்து நிலையாகப் பணியாற்றாமல் கதை, காவியம், நாடகம் இயற்றியும் அதையும் முழுமைப் படுத்தாமலும் வாழ்ந்தார். அவரது எட்டு குழந்தைகளுள் இரண்டாவதாகப் பிறந்த சரத் சந்திரர் அவருடைய இலக்கிய நாட்டங்களைப் பாரம்பரியமாகப் பெற்றார்.
தொடக்கத்திலிருந்தே முறையான பள்ளி வாழ்க்கை அவருக்கு பிடிக்காததால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறுவதும் திரும்புவதுமாக இருந்தார். வீட்டில் தந்தையார் எழுதிவைத்த நாவல்கள் மற்றும் கதைகளை ரகசியமாகப் படிப்பார். அவர் எழுதி முடிவு பெறாத நாவல்களே கதைகளே அதிகம். அதை தான் எழுதிமுடிக்க வேண்டும் என எண்ணமிடுவார். இதுவே இவர் முயற்சிக்கு மூளையாயிருந்தது. இவரது தந்தை பின்னர் பாகல்பூரில் குடியேரினார் அங்கு இருந்த நூலகத்திலிருந்து பக்கிம் சந்திரர் நாவல்கள், நவீன் சந்தரின் காவியங்கள், ஈசுவர சந்திரரின் நூல்கள் ஆகியவற்றை விரும்பிபடித்தார்
சிறு வயதிலேயே இவருக்கு இலக்கியச்சுவை தோன்றிவிட்டது. அப்பொழுது பாகல்பூரில் புகழ்பெற்ற பாடகரும் எழுத்தாளருமான சுரேந்திரநாத் மஜீம்தார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரலானார்.
1894-ல் பாகல்பூரில்  தேஜ் நாராயண ஜீபிலி கல்லூரியில் எம்.ஏ. படிக்கத் தொடங்கினார். அப்பருவத்தில் ஆங்கில இலக்கியங்களை விரும்பிப்படிக்க ஆரம்பித்தார் தாக்ரே.டிக்கன்ஸ் திருமதி ஹென்றிவுட் ஆகியோரின் நாவல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன திருமதி ஹென்றிவுட் எழுதிய பிரபல நாவலொன்றைத் தழுவி ‘அபிமானம்’ எனும் பெயரில் வங்க மொழியில் நாவலொன்றை எழுதினார். ஆனால் அது அச்சேற எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
இலக்கிய தாகம் அவருக்குள் நாளுக்கு நாள் வளர்ந்தது தாய் மொழியில் அவருக்கு பற்று அதிகம். அக்காலத்தில் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வதைத்தான் கௌரவமாக எண்ணினர் சரத்சந்திரர் அந்த வழக்கத்தையும் மனப்போக்கையும் எதிர்த்துச் சாடினார், நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதே இல்லை. தம்முடைய கொள்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும் தயங்கியதே இல்லை. இவருடைய மொழிப்பற்றும் இலக்கிய தாகமும் அத்துடன் நின்றுவிட வில்லை.


‘சிசு’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். பாகல்பூர் இலக்கிய கழகம் (பாகல் பூர் சாகித்ய சபா) சரத்சந்திரரால் உருவாக்கப்பட்டது அதில் சுரேந்திரநாத் கங்கோபாத்தியா, நிரூபமாதேவி, யோகேசசந்திர மஜீம்தார் ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர் இவர்கள் பின்னாட்களில் வங்க இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்றவர்களாவர். கவிதைகள், கதைகள் எழுதுவதே இக்குழுவினரின் முக்கியச் செயல்பாடு. தாகூர் படைத்த இலக்கியங்களைத் திறனாய்வு செய்வது இக்குழுவின் அன்றாடச் செயல்பாடு. 
கல்கத்தாவில் இருகுழுக்கள் இலக்கிய கழகங்கள் ஆரம்பித்து இலக்கிய விமர்சனங்களில் ஈடுபட்டன. ஒரு குழு நடத்திய ‘சாயா’ என்ற கையெழுத்து இதழில் சரத்சந்திரர் தமது எழுத்து வேகத்தைத் தீவிரப்படுத்தினார். ‘சாயா’வில் அவர் பெற்ற இந்த இலக்கியப் பற்றினால்தான் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யமுனா’,     ‘சாகித்தியம்’ என்ற இரு மாதப் பத்திரிக்கைகளில் அவர் பரிமளிக்க முடிந்தது. அவரது வளமான நடை வங்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
வங்காளிகள் சமூகத்தில் சம்பிரதாயப் பழக்கங்களை விடாப்பிடியாக அனுசரித்து வந்த ஆசாரவாதிகளின் பிடி பலமாக இருந்தது அதை எதிர்த்தவர்கள் சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
அச்சமயம் சிவசந்திர வந்தோ பாத்தியாயா என்ற விசால மனப்பான்மை கொண்ட வங்காளி ஒருவர் ஐரோப்பா சென்று பாரீஸ்டராகக் கல்வி பயின்று திரும்பி வந்தார். அவரைக் குலவழக்கங்களை மீறியவராக உறவினர்கள் ஜாதி பிரஷ்டம் செய்தனர் அதற்கு அவர் அடி பணியவில்லை இந்து சமூகத்தில் புரையோடியுள்ள போலி ஆசாரங்களைக் கண்டித்தார் ஆசாரவாதிகளுக்கெதிராக தனது விரிந்த மனப்பான்மை மற்றும் இனிய பண்பாடுகளால் பலரைத் தன் வசம் ஈர்த்தார் அவர் வீட்டில் உடற்பயிற்சி சாலை இருந்தது நாடகக்குழு ஒன்றும் விரைவில் உருவாயிற்று ஆர்மோனியம் கபேலா இவற்றின் பின்னணியோடு இசை முழக்கம் சிவசந்திரர் வீட்டில் நிலவியது
சரத்சந்திரரிடம் உள்ளடக்கிய கலைச்சுவை, குலக்கட்டுப்பாட்டை மீறி சிவசந்திரருடன் நட்பை உருவாக்கியது சரத்சந்திரரும் அவர் நெருங்கிய நண்பர் ராஜீவும் சிவசந்திரர் நடத்திவந்த நாடகக்குழுவில் பங்கேற்றனர் பக்கிம் சந்திரர் எழுதிய ‘மிருனாளினி’ நாடகத்தை அக்குழு அரங்கேற்றியது சரத்சந்திரர் அதில் முக்கியப் பாத்திரம் ஏற்று தமது நடிப்புத்  திறமையால் மக்களை ஈர்த்தார் சிவச்சந்திரர் புகழ் பரவப்பரவ ஆசாரவாதிகள் மிகவும் ஆத்திரமடைந்தனர் அவருடன் சேர்ந்ததால்  சரத்சந்திரரும் தனது சொந்த சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டார்.
தந்தை இறந்தார். பொருளாதாரத்தில் பலகீனமுற்ற அவர் ரங்கூனில் இருந்த சித்தப்பர ஒருவரின் அழைப்பின். பேரில் ரங்கூன் சென்றார். பர்மாவில் சிறந்த வழக்கறிஞறராக விளங்கினார் அவர் சித்தப்பா அகோரபாபு. அங்கும் துன்பம் தொடர்ந்தது.  அகோரபாபு இறந்து போனார். மிக நொந்த நிலையில் அவருக்கு பர்மிய சரசில் பொதுப்பணித்துறையில் பணி கிடைத்தது. அங்கு ‘வங்கசந்திரர்’ என்ற கல்விமானுடன் நட்புறவு ஏற்பட்டது. பர்மாவில் வசித்த வங்காளிகள் ‘வங்க சமூகக் கழகம்’ ஒன்றை நடத்தினர். அதில் சரத்சந்திரர் எழுதிய கட்டுரை ஒன்று பிரசித்தி பெற்றது. அங்கு வசித்த நாட்களில் அவருடைய எண்ணங்கள் மிகவும் பக்குவப்பட்டது.
நாடு கடந்துவந்த இந்தியர்கள் பல்வேறு ஜாதி, மதம், இனம் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கை இவருடைய மறுமலர்ச்சி சிந்தனையை மேலும் வலுப்படுத்தியது. பின் உடல்நிலை சீர்கெட்டதன் காரணமாக வைத்தியம் செய்துகொள்ள இந்தியா திரும்பினார். சரத்சந்திரர் 1903 முதல் 1917 வரை பதினான்கு ஆண்டுகாலம் பர்மாவில் தங்கினார். இதுவே இவர் வளர்ச்சிக்கு பொற்காலமாகியது.
பர்மாவிலிருந்து வங்காளம் திரும்பியதும் சரத்சந்திரருக்கு இலக்கிய ஆவேசம் பிறந்தது. நாவல்களும் கதைகளும் எழுதிக் குவித்தார். அவருடைய படைப்புகளின் பின்னணி ஏழை எளிய கிராம மக்களாகவே பெரும்பான்மை இருந்தது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இருந்தனர். சாதி மதக் கொடூரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். அவருடைய இலக்கியங்கள் மக்கள் மனதில் ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது. எத்தனையோ உன்னதக் கலைப் படைப்புகள் சரத்சந்திரருக்குப் பேரும் புகழையும் தேடித்தந்தது. அவரது புகழ் நாடு, மொழி என்ற எல்லைகளைத் தாண்டிப் புகழ்பெற்றது.
அவர் 39 நாவல்கள் மற்றும் ஏராளமான கதைகளை எழுதினார். மாதச் சஞ்சிகை நடத்தினார். அவருடைய நாவல்கள் படமாக எடுக்கப்பட்டு பெரும் புகழ் அடைந்தது. சுமார் 50 படங்கள் வரை பல மொழிகளில் எடுக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றது. அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற நாவல் தமிழ், தெழுங்கு, ஹிந்தி, பெங்காளி உட்பட எட்டு மொழிகளில் படமாக்கப்பட்டது. இன்றைய படங்களிலும் ‘தேவதாஸ்’ தாக்கம் தொடர்கிறது.
இவருடைய நாவல்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிக நாவல்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல பல்கலைக் கழகங்களில் இவருடய நூல்கள் பாடப் புத்தகங்களாக உள்ளன. டாக்கா பல்கலை இவருக்கு விருது கொடுத்து கௌரவம் செய்தது.
இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் வேண்டுகோளை ஏற்று ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
கடைசிக் காலத்தில் கல்கத்தாவை அடுத்து  ஹௌரா மாவட்டத்தில் குடியேறினார். பின்னர் ஹீக்ளி மாவட்டத்தில் ‘சமேதாபேர் என்ற கிராமத்தில் வசித்தார். உடல்நிலை சரியின்றி சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைப் பலனின்றி 1938 ஜனவரி 16 அன்று மறைந்தார்.மனிதனை மனிதனாகக் கண்டவர். அவரை நாத்திகரென்று அயலிருந்தோர் கூறுவர். அதை அவரும் மறுத்ததில்லை. அவருள் நாட்டுப்பற்று மிகுந்திருந்தது. இலக்கியத்தில் ‘தாகூரை’யும் அரசியலில் காந்தியையும் பெரிதும் போற்றினார். மாறுபட்ட கருத்துக்கள் வந்தபோது அவர் மறுத்துப் பேசத் தயங்கவில்லை. மக்களுக்காக எழுதிய மகத்தான மறுமலர்ச்சி இலக்கிய நாயகன் சரத்சந்திரர் !
                       
கட்டுரையாளர்  :  திரு. பாலசந்திரன்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர்
செல்பேசி : 9486207060
நன்றி : ஜனசக்தி நாளிதழ் – 14 செப்டம்பர் 2013

2 comments:

  1. திரு. பாலசந்திரன் அவர்களுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. ddக்கும் மனமார்ந்த நன்றிகள் சார்

      Delete