Wednesday, September 4, 2013

மோசடியும் மோடியும்தான் பாசிசம்!




மனிதகுல வரலாறு பல்வேறு மகத்தான தலைவர்களை வழங்கியுள்ளது. அவர்கள் தங்கள் உடல், பொருள் அனைத்தையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர்கள். இவர்கள் மக்கள் மனங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் தங்களுடைய சுயலாபத்திற்காக, ஆட்சி அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கோடிக்கணக்கானவர்களை அழித்தொழித்து அவர்களின் கல்லறைகளின்மீது அமர்ந்து கொண்டு கொக்கரித்தவர்களையும் வரலாற்றில் படித்து இருக்கிறோம். அவர்களின் உருவத்தை அரக்கர்களாக சித்தரித்துத்தான் மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனி ஹிட்லர். இவர் பாசிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர். பாசிசக்கொள்கையின் அடிப்படை நோக்கமே தனக்குண்டான எதிரியை திட்டமிட்டு உருவாக்கி அவர்களை அழித்தொழித்து பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. அதற்கான அனைத்துவிதமான மோசடிகளையும் செய்வது. இதைத்தான் ஜெர்மன் மக்களை சுற்றியிருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் யூதர்கள்தான் என திட்டமிட்டு தனது வகையறாக்கள் மூலம் ஜெர்மனி முழுவதும் ஹிட்லர் பிரச்சாரம் செய்தான்.

உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்கள்தான் காரணம் என்று அவன் செய்த பிரச்சாரம். ஜெர்மன் மக்கள் மத்தியில் யூதர்களின் தேசப்பற்றும், நாட்டின் பிரதான விசுவாசமும் சந்தேகிக்கப்பட்டது. யூதர்களுக்கு எதிரான பொய்யை. திரும்பத் திரும்ப பயன்படுத்தியதன் விளைவாக மக்களின் ஆதரவோடு லட்சக்கணக்கான யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தான். ஒரு மாபெரும் பொய்யைச் சாதகமான கருவியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு இனத்திற்கு எதிராக சதி செய்தான் ஹிட்லர். இதுதான் பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களாகும்.

அதே பாணியைத்தான் இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பின்பற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய பா.ஜ.க. தன்னுடைய பாசிசக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்தான் நரேந்திரமோடி. இவர் கடந்த காலங்களில்  ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரகராக செயல்பட்டபோது, இவரை ஒருமுறை பேட்டி கண்ட எழுத்தாளர் அசீஷ்நந்தி, ‘செமினார்’ (2008) என்ற பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில்.

உள நோய் மருத்துவர்கள், உளநிலை மருத்துவர்கள் மற்றும் உளநூல் வல்லுனர்கள் ஆகியோர் ‘ஆதிக்க மனோபாவம்’ கொண்ட ‘தனி மனித நிலை’ பற்றி பல்லாண்டு ஆய்விற்குப் பின் வரையறுத்திருக்கும் எல்லா அடிப்படைக் கூறுகளையும் கொண்ட மனிதராக,  அமைதியான ஆற்றொழுக்கான தொனியில் அவர் இந்தியாவிற்கு. எதிரான அண்டத்தின் சதிக்கோட்பாட்டை விவரித்து, என்னை தூக்கிவாரிப் போட்டது. நரேந்திர மோடி ஒவ்வொரு முஸ்லீமையும் தேசத் துரோகியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரித்தார். அவருடைய பேட்டியின் முடிவில் இலக்கண ரீதியான ஒரு பாசிஸ்டாகவும், எதிர்கால கொலைகாரனாகவும், இன்னும் சொல்லப்போனால் கூட்டம், கூட்டமாக கொலை செய்யக் கூடியவராகவும்தான் அவர் எனக்கு தெரிந்தார்’’ என குறிப்பிடுகிறார்.

இப்படிப்பட்ட நரேந்திர மோடிதான் குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முஸ்லீம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தினார். குஜராத் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் ஹிட்லரின் பாசிசப் பாணியைப் பின்பற்றி முஸ்லீம்களைப் பொது எதிரியாக்கி இவர் நடத்திய படுகொலைகளை ஹிட்லரிசத்தின் இந்திய வடிவமாகத்தான் பார்க்க முடியும்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் ‘கோத்ரா ரயில் விபத்து’ சம்பவத்திற்குப் பிறகு மோடியின் வழிகாட்டுதலின் பேரில் தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள் 10,504, எரிக்கப்பட்ட கடைகள் 10,429, தீ வைத்துஎரிக்கப்பட்ட லாரிகள் 2,623 சொந்த நாட்டிலேயே அகதிகளானவர்கள் 1,13,697. படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை முழுமையான தகவல் இல்லை.

இத்தகைய மகா பாதகச் செயலைச் செய்த நரேந்திர மோடியிடம் ‘ராய்ட்டர்’ என்ற செய்தி நிறுவனம், “இந்தப் படுகொலைகள் சம்பந்தமாக தாங்கள் வருத்தப்பட்டதுண்டா?’’ என்று கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில், “ஒரு காரை ஓட்டிக்கொண்டு போகும் போது, ஒரு சிறு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்து விட்டால், நமக்கு வருத்தமாகத்தானே இருக்கும். நான் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானும் ஒரு மனிதப் பிறவிதானே, சோகமான ஒன்று நிகழும்போது வருத்தம் ஏற்படுவது இயல்புதானே’’ என்று கூறியிருக்கிறார்.

குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டதும், ஓடும் காரில் நாய் அடிபட்டு செத்ததும் நரேந்திர மோடிக்கு ஒன்றுதானாம். இம் மனிதரைத்தான் அழிவுப் பாதைக்குச் செல்லும் இந்தியாவைப் பாதுகாக்க ராமனே அவதரித்து வந்துள்ளதாக பா.ஜ.க.வும் ஊடகங்களும், மிகப்பெரிய அளவில் செய்தியாக்கி புகழ்ந்து வருகின்றன. இவரைப் பற்றி புகழ்பாடும் ஊடகங்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் குஜராத் சொர்க்கபுரியாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். தேசிய சராசரி ஆண்டு வருமானத்தைவிட குஜராத்தின் சராசரி ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளதாகவும், இதுதான் வளர்ச்சியின் அடையாளம் என்றும், இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான் எனவும் வாதிடுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகமாக ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் பிறப்பதும், இறப்பதும் குஜராத்தில்தான் என்பதை யாராலும் மறைத்து விட முடியாது. டெகல்கா இணையதளம் சமீபத்தில் குஜராத் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. தலித் மக்கள் வாழக்கூடிய பகுதியில் முறையான குடிநீர்கூட  வழங்கப்படுவதில்லையாம். அதேபோல் தலித் மற்றும் உயர்சாதியினர் வாழக்கூடிய கிராமங்களில்  தலித் மக்களுக்கு என்று குடிநீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்கி போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளனவாம். குஜராத் மாநிலத்தில் தொழிற்துறை ஓரளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தாலும், பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கப்பல் உடைக்கும் தொழில், ரசாயனப் பொருட்கள் உற்பத்தியும்தான் குஜராத்தின் வருமானப் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாம். இதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விடுகின்றன. இதனால் குஜராத் மாநிலத்தின் இயற்கையும், சுற்றுச்சூழலும் பேரழிவிற்கு உள்ளாக்கி வருகிறது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்படுகிறது.


கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய ரூபாய் 57 ஆயிரம் கோடி ரூபாயில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாயை குஜராத் அரசு வீணடித்து விட்டதாக மத்திய தனிக்கைத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது கோத்ரா ரயில் விபத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான நிவாரணத்ததைக்கூட வழங்கவில்லை. போலி என்கவுண்டரில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காக நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களிடையே பகைமையை தூண்டியதற்காக குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தண்டிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் நிபுணர்களின் ஒருவரான ராஜீ ராமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் நரேந்திரமோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பயன்படுத்தி
சமூக வளத்தளாங்களில் மேற்கொண்டு வரும் பிரச்சார மோசடி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இப்படிப்பட்ட நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்து வருவது வெட்கக் கேடானது. பா.ஜ.க வும், ஒரு சில ஊடகங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவியோடு நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராகக் கொண்டுவர முயற்சி செய்வது பாசிச ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக சமர் புரியத் தயாராவோம்.

(கட்டுரையாளர்: ஏ.ஐ.ஒய்.எஃப். மாநில துணைத் தலைவர் மற்றும் சேலம்            மாவட்டச் செயலாளார். தொடர்புக்கு: 9894363191)

நன்றி : ஜனசக்தி 29 ஆகஸ்ட் 2013 இதழ்.


   

 

No comments:

Post a Comment