Thursday, August 22, 2013

அமெரிக்கா பூலோக சொர்க்கம்- உண்மையா?


மைக்கேல் மூரின் Capitalism : A Love Story (2009) – அறிமுகம்! இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அள‌வு தொழிற் போட்டியே இல்லை, நாட்டில் பியர்ல் ஹார்பர் தவிர வேறு எந்த சேதத்தையும் பார்க்காத அமெரிக்கா, நிதி மூலதன வளர்ச்சியில் பொங்கிச் சிறந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோசலிச நாடுகள் கொண்டு வந்த விஞ்ஞான வளர்ச்சியும், உலக நாடுகளில் இருந்து பிழைக்க அகதிகளாக வந்து குவிந்த மக்களும் அமெரிக்காவின் வளர்ச்சியை சீராக உயர வழிவகுத்தனர். அமெரிக்கா பூலோக சொர்க்கம் என்ற மாயை உருவாகத் தொடங்கியது (அந்த சொர்க்கத்திலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் விளைவான தேக்க நிலை 10 வருடத்திற்கு ஒரு முறை வந்து போய்க்கொண்டு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). அப்பொழுதும் சரி பின்னர் எப்பொழுதும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை விதியின்படி அமெரிக்காவின் ஒரு சிலரிடம் பெரும்பான்மையான பணம் சேருவதும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களாக, ஒரு நாள் பணக்காரர் ஆகிவிடுவோம் என்ற கனவில் வாழ்வதும் வாடிக்கையாகி விட்டது.
இன்றைய அமெரிக்க மக்கள் வீதிக்கு வந்து போராடுவதற்கான(Occupy wall street) இன்னொரு விதை முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றும் முயற்சியின் விளைவாக வந்த்து. 1917 முன் வரை முதலாளிகள் கசக்கிப் பிழிவதிலும் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலும் மொத்த உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதிலும் கவலையில்லாமல் கணஜோராக ஈடுபட்டு வந்தனர். ஆனால் மார்க்சிசத்தின் வரவும் அதைத் தொடர்ந்த ரஷியப் புரட்சியும், உலகம் முழுவதும் இருந்த உழைக்கும் மக்களின் சோஷலிச கனவும் முதலாளிகளை ஆட்டம் காணச் செய்தது, ‘தங்கள் நாட்டில் புரட்சி வந்து விடக் கூடாது ஆனால் சுரண்டவும் வேண்டும்’ இதற்கு ஒரே வழி வேலை செய்பவர்களுக்கு சில சலுகைகளை கொடுப்பது.
மக்கள் நலத் திட்டங்களை அரசு வகுக்கும், அதனை செயற்படுத்தும், சுரண்டும் பணத்திலிருந்து முதலாளிகள் போனால் போகுது என்று கொஞ்சம் தருவார்கள் அதையே சோசலிசம் என்று திரித்து பிரச்சாரம் செய்ய வேண்டியது தான். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை இப்படி அரசே கல்வி, மருத்துவத் துறையை நடத்துவதை அவர்கள் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டார்கள்
இந்தியாவில் நேரு மேல்மட்டத்தில் அரசே நிறுவனங்களை நடத்துவதை, அதில் கிஞ்சித்தும் மக்களின் நேரடி பங்களிப்பில்லாத முறையை சோசலிசம் என்று ஜல்லியடித்தார். உண்மையான சோசலிசத்தில்  அரசு அனைத்துத் துறைகளையும் வைத்திருக்கும் என்பது உணமை தான் ஆனால் அரசை உழைக்கும் மக்கள் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும்,கட்டமைப்பு நெருக்கடியும் அமெரிக்காவின் வளர்ச்சியில் கையை வைத்தது. எப்பொழுதும் பல பில்லியன் டாலர்களில் கொழுத்த முதலாளிகள் அதை உலகின் இன்னொரு முதலாளியிடம் இழந்தார்கள். பெரும்பான்மையான பணம் உலக முதலாளிகளின் பாக்கட்டுகளில் கைமாறத் தொடங்கியது,
சுழற்சி முறையில் அது பல புது பணக்காரர்களை உருவாக்கியது, ஏற்கனவே தொழிலில் கொழுத்து திரிந்தவர்களை தூக்கியெறிந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள் மியுசிக்கல் சேரில், இடம் கிடைத்தவர் உட்கருவதும் இன்னொரு ரவுண்டில் அவரே தூர ஓடுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்க பொருளாதாரம் எனும் குமிழ் உடைவதும் இன்னொரு குமிழியை அமெரிக்க அரசு உருவாக்குவது எனத் தொடர இந்த சூதாட்டத்தை நடத்த ஒரு நல்ல இடமாகவே வால்ஸ்ட்ரீட் மாறியது. (உலகம் முழுவதிலும் இந்த சூதாட்டத்தை அரசு அனுமதியுடன் நடத்தும் இடங்களாக பங்குச் சந்தைகள் உருவாக்கப்பட்டன. அது தான் நாட்டின் கொள்கைகளையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் களமாக மாறியது).
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முதலாளியை வாழவைக்க, முதலாளித்துவத்தை வாழவைக்க கையில் வாளேந்தி மக்களின் சலுகையில் கை வைத்தனர். இனியும் இழக்க ஒன்றுமில்லை எனும் போது– அமெரிக்கா என்றாலும் என்ன, உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தானே– போராடத் துவங்கிவிட்டனர்.
மைக்கல் மூர் தன் படத்தில் முதல் சில நிமிடங்கள் ரோம் சாம்ராஜ்ஜியம் எப்படி அழிந்தது எனும் வரலாற்று நிகழ்வை விளக்கும் குரலுக்குப் பின்னால் அமெரிக்க நிகழ்வுகள் சிலவற்றை ஒளிப்படங்களாக தருகிறார்.
சோஷலிஸ நாட்டில் ஒரே ஆட்சி! ஒரே ஆட்சி! என்று உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளை தூற்றும் அதே நேரம் அமெரிக்காவிலோ இரண்டு கட்சி, ஆனால் எது வந்தால் என்ன,  ஆளுபவர்கள் அந்த நாட்டின் முதலாளிகள் தான், அவர்கள் சுரண்டுபவர்கள், நிச்சயம் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, சூதாடிகள் என்று படத்தை ஆரம்பிக்கிறார்.
அதாவது அமெரிக்காவில் இரண்டு கட்சி, ஒரே ஆட்சி, முதலாளியின் ஆட்சி. அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா முதல் பல நாடுகளில் இதே நிலைமை தான். யார் முதன்மை அமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அரசு வந்தாலும் ஆளுபவர்கள் முதலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.
2007க்கு பின் பல ஆண்டுகள் வாழ்ந்த தன் வீட்டை காலி செய்யும்படியும் அதை மீறினால் போலிசே வீட்டைக் காலி செய்யும் நிலையும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் தொடர் நிகழ்வாகிவிட்டது. ஒரு காட்சியில் காலி செய்ய மறுக்கும் வீட்டை உடைத்து அங்கிருப்பவர்களை வெளியே தள்ளி காலி செய்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தங்கள் சொந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்த வயதான ஏழை தமபதியினரை மாதத் தவணை கட்டவில்லை என்று காலி செய்யும்படி சொல்லுகிறார்கள் காவலர்கள். அதைத் தொடர்ந்து அந்த வயதான பெண் காமிர முன்னால் அழத் தொடங்குகிறார். பின்பு முனங்கலாக “நாங்கள் சாதரண மக்கள், நன்றாக உழைப்பவர்கள், ஒழுங்காக தவணையை செலுத்தினோம்,  ஆனால்  வேலை இல்லை, வருமானம் இல்லை அதனால் தவணை செலுத்தவில்லை” என்று அழுகிறார்.
பல முதலாளித்துவ மேதைகள் அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, “தகுதியில்லாதோருக்கு கடன் கொடுத்ததுதான் காரணம் அவர்கள் திரும்பக் கட்டவில்லை” என பக்கம் பக்கமாக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதுபவர்கள். ‘அவர்களுக்கு வேலை இல்லை அவர்களின் வேலை பிடுங்கப்பட்டுவிட்டது, அது இன்னொரு நட்டிற்க்கு சென்றுவிட்டது அது தான் காரணம்’ என்பதை மட்டும் மூச்சுவிடுவது இல்லை. ஒரு வேளை முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லுவதுதான் சரி போலும், உலகம் முழுவதிலும், அது முதலாளித்துவ நாடாக  இருந்தாலும் சரி, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகளை கோரத் தகுதியற்றவர்கள்தான்.
இதைவிடவும் கொடுமை மைக்கல் மூர் காட்டும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதல் பாடம் தான். அமெரிக்காவில் பல சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளை தனியார்கள் தான் நடத்துகிறார்கள். ஒரு சிறுவன்/சிறுமிக்கு மாதம் இவ்வளவு என்று அரசு தனியாருக்கு கொடுக்கும் (செலவுகள் போக லாபம் சேர்த்து தான்). நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் முதலாளிக்கு லாபம் வேண்டும், லாபம் வந்தவுடன் அதைவிட அதிக லாபம் வேண்டும், அப்புறம் அதைவிட அதிகமாக.. அப்புறம் அதையெல்லாம் விட அதிகமாக. இந்த லாப வெறிக்கு  பலி, பல சிறுவர்கள்.
ஒரு சீர்த்திருத்த பள்ளியை நடத்தும் முதலாளிக்கு அதிக லாபம் வேண்டும், நேராக அங்கே உள்ளூரில் இருக்கும் போலிஸையும் ஜட்ஜையும் பிடித்தார். பல சிறுவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு, சாதாரண பிரச்சனைக்கெல்லாம் கோர்ட் கேஸ், ஜட்ஜ் குற்றவாளியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார். குற்றம் விசாரிக்கப்படாமல் நேராக குறிப்பிட்ட சீர்திருத்த பள்ளியில் இத்த்னை மாதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்ல வேண்டும். மேலும் இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு தரவேண்டும். அவ்வளவுதான்.  ஜட்சுக்கு டீலிங் ரொம்பப் பிடித்துவிட்டது, அதன் விளைவு பல பதின்ம வயது இளஞர்கள் காரணமே இல்லாமல் தங்கள் இளமையை தொலைத்தனர். லாப வெறியின் முதல் பாடமே நம்மை உறைய வைக்க இரண்டாம் பாடமோ அதிர்ச்சியை தந்தது.
நமக்கு விமானத்தில் பறக்க ஆசையாக இருக்கும், ஆனால் விமானிகள் எந்நேரமும் விமானத்தில்தான். எவ்வளவு மிடுக்கான தோற்றம், எப்பொழுதும் சிரிப்பு, உலகில் கஷ்டமே இல்லாத மக்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருக்க, முதலாளிகளின் லாப வெறிக்கு இவர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல என்று மூர் புரியவைக்கிறார்.
அமெரிக்க தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளுக்கு சம்பளத்தை பலமடங்கு குறைத்தே கொடுக்கின்றன, விமானியால் அந்த வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை அல்லது மிகவும் சிரமமம். இந்தக் கையறு நிலைதான் முதலாளிகளுக்கு முத‌லீடு. குறைந்த சம்பள‌ம் கொடுத்தாலும் அந்த விமானியால் வேலையை விட முடியாது, இன்னொரு நிறுவனம் போனாலும் விமானிக்கு அதே நிலைமை தான்.
ஒரு வேளை நம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் 2001 இரட்டை கோபுரத் தாக்குதல் என பாட ஆரம்பிக்கும் முன் இன்னொரு செய்தி. இந்த நிலைமை 2001க்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஒரு விமானி சொல்லும் விடயம் அதிர்ச்சியானது. அவருக்கு தெரிந்த பல விமானிகள் ரத்த அணுக்களை(Plasma) விற்கிறார்களாம், அதாவது ரத்தத்தை எடுத்து ப்ளாஸ்மாவை பிரித்துவிட்டு மீண்டும் ரத்தத்தை உடலிலேயே ஏற்றிவிடுவார்கள். முதலாளிகள் ரத்த உறிஞ்சி என்பது இங்கு நிஜமே ஆகிவிட்டது.
இப்படியாக அமெரிக்க மக்கள் வேலை இழப்பதும் லாப வெறிக்கு பலியாவதும் தொடர, மக்களை எப்படி ஏமாற்றி இன்னும் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்கு  திட்டமிட்டு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்ந்த சூதாடிகளாக உருவாக்குவதுதான் அமெரிக்க பல்கலைக் கழகங்களின் வேலை. அமெரிக்காவின் ஹார்வாட் முதல் இந்தியாவின் ஐஐஎம் வரை ஒரே கொள்கை தான், சூதாடிகள் வேண்டும். தாங்கள் இப்படி ஒரு இழிவான வேலை செய்கிறோம் என்று கூட அவர்களுக்கே ஆரம்பக்கட்டத்தில் தெரியாமல் இருக்கவே குழப்புகின்ற பாடங்கள்.
இந்த படத்தில் குறிப்பாக அமெரிக்க வால் ஸ்ட்ரிட்டில் பலர் பெருமையாக சொல்லிகொள்ளும் டெரிவேட்டிவிஸ் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை கேட்க ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் ’வாத்தியாரே கன்ப்யூஸ் ஆகிவிட்டார், விளக்க முடியாமல் திணறுகிறார். என்ன வேலை செய்கிறோமோ அதை விளக்க வாத்தியாருக்கே தெரியாத உன்னத கல்வியமைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் கொடை.
ஆனால் இன்னொரு பக்கம் மூர் அமெரிக்கவில் உள்ள  ஒரு தொழிற்சாலையை காட்டுகிறார். அந்தத் தொழிற்சாலையில் அங்கு வேலை செய்பவர்களே முதலாளிகளாக இருக்கிறார்கள் (பார்த்தவுடன் நானும் ஜெர்காகிவிட்டேன்), உழைக்கிறார்கள்.  தங்களுக்கு யார் தலைவாராக வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கிறார்கள். மொத்தம் வெளிப்படையாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் நஷ்டம் இரண்டுமே பங்கிடப்படுகிறது. அவர்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள், நிறைவாக வாழ்கிறார்கள். அங்கு சாதாரண வேலையும் செய்யும் தொழிலாளியின் மாத வருமானம் மிகப் பெரிய விமான நிறுவனத்தில் அனுபவமிக்க விமானியின் மாத சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது உழைப்பவர்கள் நடத்தும் நிறுவனம் இதுவரை சோடைபோகவில்லை என்றாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நடுவே இது தாக்குபிடிப்பது கடினம்தான்.

நன்றி : வினவு.காம்

No comments:

Post a Comment