Tuesday, April 12, 2016

மக்கள் கலைஞர் பால்ராஜ் சகானி
------------------------------------------------------------------

மக்கள் கலைஞர் பால்ராஜ் சகானியின் வாழ்வும் பணியும் ஓர் நல்ல வாழ்வின் உதாரணமாகும். அவர் செய்தது அல்லது எழுதியது சாதாரண மக்களால் புரிந்துகொள்ளக்கூடியது. ஆரோக்கியமான விதைகளை விதைத்து அவை தம் வாழ்நாளிலேயே வளர்ந்ததைக்கண்ட வீரஞ்செறிந்த ஆரோக்கியமான குழுவைச் சேர்ந்தவர் பால்ராஜ். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையைக் கொண்ட பூரணச்சந்திர ஜோஷியின் நண்பருமாவார். இந்திய மக்கள் நாடக மன்றம் “–இப்டா”—வின் (IPTA-INDIAN PEOPLE'S THEATRE ASSOCIATION) தந்தை என இவரைக் கூறலாம்.
 பால்ராஜ் சகானி  ராவல்பிண்டியில் ஒரு பாரம்பரிய பஞ்சாபி வர்த்தக குடும்பத்தில்1913ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் பிறந்தார். அவருடைய இயற் பெயர் யுதிஸ்டிர சகானி அவர் லாகூர் பல்கலைக் கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் தமையந்தியைத் திருமணம் செய்து கொண்டார்.
  1930ஆம் ஆண்டு வாக்கில் தனது மனைவியுடன் வங்கம் சென்று மகாகவி இரவீந்திரநாத்தாகூர் நடத்திவந்த சாந்தி நிகேதன் பல்கலையில் சேர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். வெளியே தேசிய இயக்கம் சூடுபிடித்துக்கொண்டிருந்தது. சாந்தி நிகேதனிலிருந்து வெளியேறி மகாத்மா காந்தியின் வார்தா சேவாகிராம ஆசிரமத்தில் இணைந்து பணியாற்றினார். மகாத்மாவின் அருகில் இருந்து அவரைக்காணும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. சாந்தி நிகேதனிலிருந்து சிறந்த மனிதாபிமானத்தையும் வார்தாவில் அவர் இந்திய தேசபக்த உணர்வையும் கிரகித்துக் கொண்டார்.
  சகானி காந்தியின் வார்தா ஆசிரமத்தில்  தொண்டுப் பணி ஆற்றிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து வானொலிச் செய்தியாளர்கள் (பி.பி.சி) வார்தா ஆசிரமம் வந்திருந்தனர். அங்கே சகானியின் திறமைகளைக்கண்டு அவரை பி.பி.சி. யில் ஹிந்தி மொழிச்செய்தி வாசிப்பாளராகவும் உரையாடல் எழுதும் பணியாளராகச் சேரவும்  சம்மதம் கேட்டனர். பரந்துபட்ட உலகம் முழுவதும் சுற்றி தனது பட்டறிவை விரிவாக்கிக்கொள்ளக்கருதிய சகானி அதற்குச்சம்மதம் தெரிவித்தார். தனது மனைவியுடன் லண்டன் சென்று இங்கிலாந்து வானொலி (பி.பி.சி)யில் பணியில் சேர்ந்தார்.  இங்கிலாந்தில் பணியாற்றும் காலத்தில் இங்கிலாந்து அரசியல் அனுபவமும் வாழ்க்கையும் சேர்ந்து. பால்ராஜ் மற்றும் தமயந்தியை இந்திய சுதந்திரத்திற்கு உறுதியாக நிற்கக்கூடிய பாசிசத்திற்கெதிரான செயலூக்கத்துடன் கூடிய ஒரு கட்சியைத் தேடும்படி செய்தது. இங்கிலாந்து வானொலியிலேயே இங்கிலாந்து கம்யூனிஸ்டு அறிவு ஜீவிகளும் தொழிலாளிகளும் இருந்தனர். அவர்கள் பால்ராஜையையும் தமயந்தியையும் இங்கிலாந்து கம்யூனிஸ்டு இதழ் “டெய்லி ஒர்க்கரையும்” மற்றும் மார்க்ஸீயம்–லெனினீயம் பற்றிய புத்தகங்களையும் படிப்பதற்கு உதவினர். இந்தத் தொடர்பானது, அவர்களது வாழ்வில் புதிய வழியைக்காட்டியது.
            இங்கிலாந்து வானொலியில் வேலைசெய்ததானது அவருடைய உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதையும், நவீனப்படுத்திக் கொள்வதையும் சாத்தியமாக்கியது. இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சிக்கு பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பாக உதவ  நியமிக்கப்பட்ட தோழர் பென் பிராட்லி பால்ராஜ் சகானியையும் தமயந்தியையும் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் ஆக்கினார். 1944ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  பணியிலிருந்து விலகி இந்தியா வந்து சேர்ந்தனர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை அப்போது மும்பையில் இருந்தது. அவர்கள் இங்கிலாந்துக் கட்சிச் சான்றிதலுடன் தோழியர் பார்வதிகிருஷ்ணன் மூலம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச்செயலாளராயிருந்த தோழர் பி.சி.ஜோஷியைச் சந்தித்தனர்.
   இவர்களின் ஆர்வத்தையும் திறமைகளையும் அறிந்துள்ள தோழர் பி.சி.ஜோஷி  இவர்களுக்குப் பொருத்தமான பணிகளைக் கொடுத்தார். இந்திய மக்கள் நாடக மன்ற (இப்டா) வின் அமைப்பாளர் பொறுப்பு தோழர் பால்ராஜ் சகானிக்கு வழங்கப்பட்டது. பால்ராஜ் அவருடைய எல்லையற்ற சக்தி மற்றும் பிரகாசமான எதிர்காலப் பார்வையுடன் இப்டா அமைப்பாளர் என்ற முறையில் செயல்பட ஆரம்பித்தார்.  சகானியும் தமயந்தியும் தங்கள் பணிகளைத் துவக்கினர். தமயந்தி பிரித்விராஜ் கபூர் அவர்களின் பிரித்வி தியேட்டரில் பணியில் சேர்ந்தார். தமயந்தி பணிவான நடிகையாக தன் பணியைத்துவக்கினார். வெகு வேகமாகத் தன் முத்திரையைப் பதித்தார்.
 மும்பையில் உள்ள தொழிலாளர்பகுதிகளுக்குள் தனது பணியை ஆரம்பித்தார் சகானி. தொழிலாளி வர்க்கத்திடையே நல்ல கலைஞர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டுப்புறக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்களுடன் நெருங்கியவர்களாக இருந்தனர். அவர்களுடன் நேச உணர்வை வளர்த்துக் கொண்டார் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு குழுவாக அணிதிரட்டினார்.
தமாஷா என்பதுதான் மகாராஷ்டிராவின் பாரம்பரிய கிராமீய நாடகமாகும்  அந்நிழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் நடத்துவதிலும் பிரபல்யமாகவிளங்கியவர் அன்னாபாவ் சாத்தே என்பவராவர். அவருடன் தொடர்பு கொண்டு பழகி வேண்டிய உதவிகளைச் செய்தார். முற்போக்கான கருத்துக்களுடன் தமாஷா என்ற கிராம நாடகங்கள் ஏராளமாகத் தயாராயின நாடோடிக் கலை உணர்வு மற்றும் தமாஷாவின் பாரம்பரியம் பாதித்திடாமல் நவீன மேடைக்கலையைக் கற்கச்செய்து அன்னாபாவுடைய குழுவின் செயல்பாட்டை விரிவுபடுத்தினார். பால்ராஜும் அவரது இப்டா குழுவினரும் மக்கள் கலைஞர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
பால்ராஜ் சகானியின் மற்றதொரு அரியகண்டுபிடிப்பு “அமர் ஷேக்” ஆகும் அவர் ஏற்கனவே பிரபலமான நாடோடிப் பாடகர். அவர் மராத்தி மற்றும் இந்துஸ்தானியில் அவரால் இசை அமைக்க முடியும். அவருக்கு மறக்கமுடியாத கம்பீரமான குரல். பால்ராஜ் அவருடன் நல்ல உறவுடன் நட்புக் கொண்டார். அனைத்துப் பகுதியிலுமிருந்த சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த பயிற்சியளித்து இப்டா தனது மையக் குழுவை அமைத்துக் கொண்டது.
 இந்தக் குழுவுக்கு பிரித்வி ராஜ் கபூர் ,முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ் போன்றோர் ஆதரவளித்தனர். வங்கப் பஞ்சம் சமயத்தில் இக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பொருள் திரட்டி அங்கே அனுப்பினர். நன்கு வடிவமைக்கப்பட்டஇக்குழு இந்தியாவின் ஆன்மா என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. இது பார்வையாளர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.
பால்ராஜ்  இன்சாப் என்கிற இந்திப்படம் மூலம் தன்னுடைய திரைப்பட பிரவேசத்தைத் தொடங்கினார். அவர் சினிமாவை எப்படி சமூக மாற்றத்திற்காக,நிகழ்கால சமூகப் பிரச்சனைகளை பதிவு செய்யும் ஊடகமாக மாற்றுவது என்றசிந்தனையுடன் இயங்கினார்.1946இல் மூன்றுபடங்களில் நடித்தார். அது அவரைப் புகழேணீயில் ஏற்றியது. “தார்டி கி லால்” திரைப்படத்தில், பால்ராஜ் மனைவி தமயந்தி அதிலும் மனைவியாக நடித்தார். கே.ஏ. அப்பாஸ் இயக்குனராக இருந்தார். நடனங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் இப்டா குழுவினரே உருவாக்கியது.
யுத்தம்முடிந்தவுடன் இந்தியாவில் தேசிய எழுச்சி அதிகரிக்கத்தொடங்கியது.இந்திய ஆயுதப்படைகள் மத்தியில் பிரிட்டீஷாருக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்தெழலாயின இந்தியக் கடற்படை கிளர்ச்சியில் இறங்கியது. கடற்படை வீரர்கள் மும்பையின் தெருக்களுக்கு வந்தனர் நகர் முழுதும் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. பிரிட்டீஷ் அரசின் பீரங்கிப்படைப்பிரிவும் ஆயுதம் தாங்கிய ராணுவப்பிரிவும் அனைத்து இடங்களிலும் கண்ணைமூடி சுட ஆரம்பித்தன.கடற்படை வீரர்களையும் மக்களையும் காக்கும் பணியில் கட்சி இறங்கியது. பால்ராஜ் முன்பு வீசி எறிந்த ஆங்கிலேய உடைகளை அணிந்துகொண்டு டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் நிருபர் போல நகரெல்லாம்  தனது மோட்டார்  சைக்கிளிலும் வாடகை வாகனங்களிலும் சுற்றி கட்சித்தலைமையின் உத்திரவுகளை நிறைவேற்றினார். இக்கடற்படை எழுச்சி வெகுஜன எழுச்சியைத்தூண்டியது.
 நாடு பின்னர் இக்கட்டான ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கியது சமுதாயம்.  இந்து–முஸ்லீம் மதக்கலவர அலை பரவத்தொடங்கியது. தொழிலாளி வர்க்கப் பகுதிகளை ஆர்.எஸ்.எஸ்ஸின்  வகுப்புவாத அபாயம் சூழ்ந்துவிடாமல் தடுப்பதற்கு பால்ராஜ் இப்டாவின் மூலம் ஓரங்க நாடகங்கள் தெருமுனை நாடகங்கள் நடத்தினார்.
நாடு விடுதலை அடைந்தது. 1948ஆம் ஆண்டின் துவக்கத்தில் இரண்டாவது கட்சிக் காங்கிரசுக்குப்பின் கட்சிக்குத்தலைமையை ஏற்றார்.தோழர் ரணதிவே.  கட்சிக் காங்கிரஸின் அதிதிவீர முடிவால் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கியத்தோழர்கள் அனவரும் கைது செய்யப்பட்டனர். பால்ராஜ் கைது செய்யப்பட்டு மும்பையின் முக்கியத் தோழர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவி தமயந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். பால்ராஜ் பலதிரைப்பட ஒப்பந்தங்களைப் பூர்த்திசெய்யாமல் இருந்தார். தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நிபந்தனைகளுடன் நடிக்க அனுமதித்து பின் சிறைக்கு அழைத்துச்சென்றனர். விடுதலைக்குப் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 1953இல் பிரபலவங்கத் திரைப்பட இயக்குனரான “பீமல் ராயின்” இந்திப்படமான “டூ பிக்ஹா ஜாமீன்” படத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். அப்படம் சர்வதேச                     திரைப்பட விழாவான கென்ஸ் திரைப்பட விழாவில் (Cannes)                                      விருது வென்றது. தனது சொந்தமான திரைப்பட ஸ்டூடியோவில் தன் திறமைகள் எல்லாம் வெளிப்படுத்தி பல சிறந்த படங்களை உருவாக்கினார். .பால்ராஜ் மொத்தம் 79 படங்களில் நடித்துப் பெரும் புகழ் ஈட்டினார்.  டில்லியில் பால்ராஜ் சகானியும் பி. கே. வாசுதேவன் நாயரும், 1959ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ.ஐ.ஒய்.எஃப்.) ஆரம்பித்தனர். அதன் மாநாட்டில் முதல் தலைவராக பால்ராஜ் சகானி தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பைத் திரைப்பட உலகு பண ஆதிக்கத்திற்கு இரையாகிவிட்டது. எனவே அவர் மும்பை திரைப்பட உலகிலிருந்து வெளியேறினார். தன் சொந்த மாநிலமான பஞ்சாப் சென்றார்.
 பஞ்சாபி மொழியில் புலமை பெற்றார்.. இளம் பஞ்சாபியக் கலைஞர்களை ஒன்றுசேர்த்து ஒரு பஞ்சாபிய நாடகக்குழுவை உருவாக்கினார். பஞ்சாபி மொழியில். பலநூல்கள் எழுதி வெளியிட்டார். 1969 இல் சோவியத்நாடு சென்றுவந்தார். புகழ்பெற்ற “மேரா ரூசி சபர்நாமா” நூலை எழுதினார். இந்நூலுக்கு   சோவியத்நாடு நேரு நினைவுப் பரிசு கிடைத்தது.
1972ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின் துவக்க உரையை நிகழ்த்தினார். அவ்வுரை பெரும் புகழைப் பெற்றது. மக்கள் நல்வாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த பால்ராஜ் சகானி அவர்கள் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் காலமானார். இந்திய அரசாங்கம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி அவரது படத்தை அஞ்சல் தலையாக வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
ஏப்ரல் 13 பால்ராஜ் சகானி அவர்களின் நினைவுநாள். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

கட்டுரை :
        ஆர். பாலச்சந்திரன்.
        தொல்பொருள் ஆய்வாளர்,
        திருத்தங்கல்.
        செல் : 9486207060.

2 comments:

  1. சகானியின் வாழ்க்கைச்சுருக்கத்தை வடித்தெடுத்து, எளிய தமிழில் வழங்கிய கட்டுரையாளர் தோழர்.பாலச்சந்நிரன் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்

    ந.சேகரன்.

    ReplyDelete
  2. சகானியின் வாழ்க்கைச்சுருக்கத்தை வடித்தெடுத்து, எளிய தமிழில் வழங்கிய கட்டுரையாளர் தோழர்.பாலச்சந்நிரன் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்

    ந.சேகரன்.

    ReplyDelete