Wednesday, May 25, 2016

பாசிசத்தை வீழ்த்திய சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்

பாசிசத்தை வீழ்த்திய சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்

வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர்

. இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன்.

அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய நாசமும், அழிவும் சொல்லில் அடங்காது. போரில் லட்சக்கணக்கானோர் மடிந்து போயினர்.

மனிதன் அதுகாறும் சாதித்த அனைத்தின் மீதும் உலகந்தழுவிய அளவில் அழிவு தாண்டவமாடியது. உயிரோடு அன்று வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களும் சொல்லொணத் துன்ப துயரங்களுக்கு ஆளாயினர்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதும், அதை எந்த வகையிலாவது தவிர்க்க வேண்டும் என்பதும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு நமக்கு எடுத்துரைக்கும் எச்சரிக்கை.

எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் அன்றைய சோவியத் மக்களும், செஞ்சேனையும், பாசிசத்தை வீழ்ச்சி அடையச் செய்தனர்.

இது ஒருநாடு பெற்ற வெற்றி என்பதாகக் கருதிடக் கூடாது. சோசலிசம் எனும் தத்துவம் உலக மக்களை அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து மீட்டு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர எத்தகு தியாகத்தையும் செய்திடவல்ல மேன்மையான தத்துவம் என்பதையே இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

ஏனெனில், பாசிசம் மனித இனத்தின் சுதந்திர வேட்கையை முற்றாக ஒழிக்க முயன்றது. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, நாடுகளையும் மக்களையும் தனது அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உலகமே அழிந்து போனாலும் அழியட்டும் என்ற வெறியோடு பாசிசவாதிகள் செயல்பட்டனர்.

பாசிச வீழ்ச்சிக்குப் பின், மகத்தான சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தன. இவையும் இந்த நிகழ்வின் மகத்துவம்.

காலனி ஆதிக்கம் உடைக்கப்பட்டு அடிமை நாடுகள் விடுதலை பெற்றன

. பல ஐரோப்பிய நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்தன. சீனா, வியட்நாம், வடகொரியா ஆகியன ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து விடுதலையாகி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தன. இந்தியா உள்பட பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கிட்டியது.

1945, மே 9ஆம் நாள்தான் இந்த வெற்றி முழுமையடைந்த தினம். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியில் நுழைந்து, ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்ஸ்டாக் மீது வெற்றிக் கொடியை ஏற்றியது.

இந்த மகத்தான தருணத்தை, ஜெர்மனியில் அன்று வாழ்ந்த எழுத்தாளர் தாமஸ் மான் எழுதினார்.

இந்த மணித்துளிகள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் நேரம் ஆகும். கொடூர மிருகமான (பாசிச) டிராகன் வீழ்ந்தது

தேசிய சோசலிசம் என்ற பெயரில் அனைவரையும் நடுங்கிட ஒடுங்கிடச் செய்த பூதம், கடைசியாக ஒழிந்தது. இட்லர் நாடு என்ற இழிச் சின்னத்தை எறிந்து விட்டு, ஜெர்மனி அதிலிருந்து மீண்டது.

முதல் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியை வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை எனும் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்தனர்.

இது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் நிபந்தனைகளை விதித்து ஜெர்மானிய மக்களை வாட்டிடும் வகையில் அமைந்தது.

கிட்டத்தட்ட 300 கோடி டாலர் அளவிற்கு நஷ்ட ஈடாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஜெர்மானிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது

. இதனால் இட்லர் தனது இனவெறி கொள்கைகளை, சோசலிச முலாம் பூசி, மக்கள் ஆதரவைப் பெற்றிட வாய்ப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று இத்தாலியுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்களும் இத்தாலிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி முசோலினி தலைமையில் பாசிசம் இத்தாலியில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

முசோலினிக்கும், இட்லருக்கம் பெரும் தொழிலதிபர்கள், நிலச் சுவான்தார்கள் பக்கபலமாக இருந்தனர். ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உலகச் சந்தையையும் கைப்பற்றிட ஏணியாக பயன்படக்கூடிய மக்கள் தலைவர்கள் என்று இத்தாலி, ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம் கருதியது.

இந்த அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான், அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையான அணு ஆயுதத் தாக்குதலை எதிர் கொண்டது.

ஜெர்மனி, இத்தாலி போன்று அதிகாரப்பூவர்மாக பாசிசத்தை ஜப்பான் ஏற்கவில்லை என்றாலும், அதன் அன்றைய அரசாங்கத்தில் இருந்த ராணுவ மேலாதிக்கம், 1936 – 37ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் இவை மூன்றும் சேர்ந்த அச்சு நாடுகள் என்ற கூட்டணியை உருவாக்கியது.

No comments:

Post a Comment